animated gif how to

ஐக்கிய நாடுகள் சபையினூடாக உலகை ஆளும் அமெரிக்கா! (பாகம் 02)

March 23, 2012 |

 - ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி -
மொழிபெயர்ப்பின் முதலாம் பாகத்தை இந்த இணைப்பில் காணலாம்.

அமெரிக்காவின் இவ்வணுகுமுறை பின்வரும் உதாரணம் மூலமாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷிமொன் பெரஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலிய விமானங்கள் லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபை படைப்பிரிவின் தலைமையகத்தின் மீது வான்வழி குண்டுத்தாக்குதலை மேற்கொண்டன.

லெபனானின் கனா என்ற கிராமத்தில் அமைந்திருந்த இத்தலமையகத்தில் சுமார் 800 க்கு மேற்பட்ட லெபனான் அகதிகளும் தஞ்சமடைந்திருந்தனர். இத்தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உற்பட 100 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஏராளமானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் நான்கு ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்களும் இதன்போது கொல்லப்பட்டனர்.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கனா படுகொலைகளை நேரில் கண்ட இங்கிலாந்தின் தி இண்டேபெண்டன்ட் பத்திரிகையின் ஊடகவியலாளர் ராபர்ட் பிஸ்க் இப்படுகொலைகளை தனது பத்திரிகையில் பின்வருமாறு விபரித்திருந்தார்.

இப்படுகொலைகள் மிகவும் கொடுமையானவை. அப்பாவி பொது மக்கள் இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டதை நான் கண்டதில்லை. லெபனானிய அகதி பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டு குவியல்களாக கிடந்தனர். அநேகமமான உடல்கள் உறுப்புகள் துண்டாடப்பட்ட நிலையில் காணப்பட்டன. சில உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள் குவிந்து கிடந்தன. ஒரு குழந்தையின் உடல் தலை இன்றி கிடந்தது. லெபனானிய முஸ்லிம் அகதிகள் ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தில் இஸ்ரேலிய வெறியாட்டத்திலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் செர்பெநிக்கா வாசிகளை போல அவர்களுக்கும் எந்த விதமான பாதுகாப்பும் கிட்டவில்லை.

வழமை போன்று இஸ்ரேல் இது ஒரு விபத்து என்றும் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் கூறியது. அச்சமயம் ஐக்கிய நாடுகள் சபை செயலராக பணியாற்றிய பூத்ரஸ் பூத்ரஸ் காலி இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக ஒரு குழுவை நியமித்தார். இக்குழுவுக்கு நெதர்லாந்து நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிராங்க்ளின் வான் கப்பன் தலைமை தாங்கினார்.

இரண்டு வாரங்கள் விசாரணைகள் நடாத்தப்பட்டு உருவாக்கப்பட்ட பிரான்க்ளினின் அறிக்கையில் இஸ்ரேல வேண்டுமென்றே இத்தாக்குதலை மேற்கொண்டது என்று நிரூபித்ததோடு ஐக்கியநாடுகள் படைப்பிரிவின் தலைமையகத்தில் அகதிகள் தங்கியிருந்ததை இஸ்ரேல அறிந்திருக்கவில்லை என்ற நிலைப்பாட்டை ஆதாரங்களுடன் மறுத்திருந்தார். அத்துடன் எவ்வாறான சூழ்நிலையிலும் ஐக்கிய நாடுகள் படைப்பிரிவின் தளமைகத்தின் மீது யாரும் தாக்குதல் நடாத்துவது அனுமதிக்கப்பட முடியாதது என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

இஸ்ரேலின் இந்த குற்றத்தை மறைப்பதற்காக அமெரிக்கா கடுமையாக முயற்சித்தது. நம்பகமான தகவல்களின் படி குறித்த அறிக்கையை வெளியிடாதிருக்க அல்லது அதன் வார்த்தை பிரயோகங்களை இஸ்ரேலுக்கு பாதமில்லாத வகையில் மாற்றுமாறு பூத்ரஸ் காலிக்கு அமெரிக்க அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. எனினும் இந்த அழுத்தங்களை கவனத்தில் கொள்ளாது பூத்ரஸ் காலி துணிவுடன் இந்த அறிக்கையை 1996 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டார். பூத்ரஸ் காலியின் இச்செயல் உண்மையை உலகுக்கு உணர்த்தியதோடு அமெர்க்கா மற்றும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனினும் இத்துணிகர, நியாயமான செயலுக்கான விலையை கொடுக்கவேண்டிய நிலை பூத்ரஸ் காலிக்கு பின்னர் அமெரிக்காவினால் ஏற்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற பூத்ரஸ் காலியின் இரண்டாவது பதவிக்கால நீடிப்பு பிரேரணை அமெரிக்க வீட்டோ அதிகாரத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் போது ஆபிரிக்க நாடுகள், சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜேர்மன், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுடன் பெரும்பாலான உலக நாடுகள் இவரின் மீள் நியமனத்துக்கு ஆதரவளித்திருந்தன.

ஆபிரிக்க நாடுகளை மிரட்டி அவற்றின் ஆதரவுடன் கோபி அனானை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக ஆக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது நோக்கங்களை எய்துவதற்கு தடையாக இருந்த பூத்ரஸ் காலியினை பதவியில் இருந்து அகற்றியது. கோபி அனான் இதற்கு பிரதியுபகாரமாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை பேணுவதில் கண்ணும் கருத்துமாக தனது பணிகளை மேற்கொண்டார்.

1930 ஆம் ஆண்டு முதல் தனது மனிதப்படுகொலைகளை தொடர்ச்சியாக செய்து வரும் இஸ்ரேல் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெனின் என்ற இடத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனிய பொது மக்கள் குடியிருப்பு ஒன்றில் தொடச்சியாக இரண்டு வாரங்கள் தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டது. மிகவும் நவீன ஆயுதங்களை கொண்டு நிராயுத பாணிகளான பொது மக்களை கொண்று குவித்தது. சரியான மரண எண்ணிக்கை விபரங்கள் அறியப்படாத போதும் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற சர்வதேச நிறுவணங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இஸ்ரேலின் இப்படுகொலைக்கான ஆதாரங்களை சேகரித்திருந்தனர்.

இத்தாக்குதல்களின் போது இஸ்ரேல் பாலஸ்தீன அகதிகளை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியது. இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் சுமார் 150 வீடுகளை தரைமட்டமாக்கின. இதன் போது சில வீடுகளில் தங்கி இருந்தோருக்கு அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

இப்படுகொலைகள் தொடர்பாக 2002 ஏப்ரல் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. இப்பிரேரணையில் இஸ்ரேலை கண்டித்து எந்த விதமான வார்த்தை பிரயோகங்களும் இருக்கவில்லை மாறாக ஒரு தகவல் திரட்டும் குழு ஒன்றே இதன் மூலம் உருவாக்கப்பட்டது. இக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த இஸ்ரேல் பின்னர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்த கோபி அனான் இஸ்ரேலின் அசமந்த போக்கை காரணம் காட்டி சிறிது காலத்தின் பின்னர் இக்குழுவை கலைத்தார். குழு சம்பவ இடத்தை பார்வையிடாமல் அறிக்கை தர பணிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தகவல் வேண்டி அனான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு அனான் கடிதங்கள் அனுப்பினார் எனினும் வழமை போல் இஸ்ரேல் இதற்கு எந்த வித பதிலும் அனுப்பவில்லை. பின்னர் இஸ்ரேலிய நலன்களை பேணும் வகையில் ஒரு கண்துடைப்பு அறிக்கை அனானினால் வெளியிடப்பட்டது.
அனான் இறுதியாக ஜெனீவாவில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை சமர்பித்தார். இதற்கான தகவல்கள் இரண்டாம்தர மூலங்களில் இருந்தே பெறப்பட்டது. மிகவும் பக்க சார்பானதாகவும் அறிக்கை மூலம் எந்த விதமான முடிவுகளை மேற்கொள்ள முடியாத வகையிலும் இவ்வறிக்கை அமைந்திருந்தது.

மிகவும் தெள்ளத்தெளிவான சான்றுகள் இருந்தும் எதற்காக அனான் இவ்வாறு யதார்த்தத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார்? அவரின் பதவித்தேர்வு பின்புலங்களை நோக்கும் போது அவரிடம் இருந் வேறு எவ்வகையான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியும். இவ்வாறு தான் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகை ஆள்கின்றது.

2008 டிசம்பர் 27 முதல் 2009 ஜனவரி 18 வரை காசா பள்ளத்தாக்கை ஆக்கிரமித்த போது இஸ்ரேல் புரிந்த மனித உரிமை மீறல் சம்பந்தமாக இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையால் தயாரிக்கப்பட்டன. 34 பக்கங்களை கொண்ட முதலாவது அறிக்கை நவீ பிள்ளையினாலும் இரண்டாவது அறிக்கை தென் ஆபிரிக்காவை சேர்ந்த யூதரான ரிசார்ட் கோல்ட் ஸ்டோன் என்பவராலும் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் 2009 செப்டம்பர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கப்பட்டது.

நவீ பிள்ளை தனது அறிக்கையில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய படைகள் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.

பின்னர் ரிசார்டினால் மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் முடிவில் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மனித உரிமை மீறல், போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் இருந்த நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தண்டிக்க எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த அறிக்கைகளை கிடப்பில் போடும்படி பான் கீ மூனை கேட்டுக்கொள்ள அவரும் அடிபணிந்தார். அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை ஆவன காப்பகத்தில் தூசி படிந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக்காலத்தை உறுதி செய்து கொண்டுள்ளார்.

இன்றைய நிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சட்டம் யூத சியோனிஸ்டுகளுக்கு எந்த விதமான சட்டங்களும் அற்ற நிலையே ஐக்கிய நாடுகள் சபையில் காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை சிரிய விவகாரங்களில் தலையிடல் வேண்டுமென்ற பான் கீ மூனின் கோரிக்கை சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேற்குலகு லிபியாவை அழித்தது போல் சிரியாவையும் அழிக்க தேவையான அத்திவாரத்தை பான் கீ மூன் இடுகின்றாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.

அமெரிக்க அரசுகளை தீர்மானிப்பதில் யூதர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அமெரிக்க அதிபர்கள் யூத நலன் பேணும் அமைப்புகளின் கடுத்த பரிசீலனைகளின் பின்னரே தீர்மானிக்கப்படுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிபர்கள் யூத நலன் பேணும் விடயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்படவேண்டும் இல்லையேல் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வெற்றிபெற முன்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து அவர்களின் கலாசார தொப்பியணிந்த வண்ணம் ஜெருசலம் இஸ்ரேலின் பிரதேசம் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை என்று அறிவித்தார்.

ஜெருசலம் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து கைப்பற்றிய பகுதி என்பது உலகறிந்த உண்மையாகும். அவரின் இந்த கருத்தே சியோனிஸ்டுகளின் அங்கீகாரத்தை அவருக்கு பெற்று கொடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற ஏதுவாக அமைந்தது.

இதற்கு பிரதியுபகாரமாக ஒபாமா இஸ்ரேல் நலன் பேணுவதில் அதீத அக்கறை கொண்டவராக விளங்குகிறார். ஒபாமா ஜனாதிபதியானத்தின் பின்னர் அவர் மேற்கொண்ட முதல் நியமனம் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான அமெரிக்க சியோனிஸ்ட் ரஹேம் இஸ்ரேல் இமானுவேல் என்வருடையதாகும். இமானுவேல் இன் தந்தை இர்குன் என்ற யூத தீவிரவாத அமைப்பின் உறுப்பினராவார். இத்தீவிரவாத அமைப்பு பாலஸ்தீன் பிரதேசத்தில் யூத குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் பாலஸ்தீன போது மக்களை கொண்று குவித்த ஒரு அமைப்பாகும்.

இவ்வாறான ஒரு பொறிமுறை மூலம் ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தி உலகை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில் பாலஸ்தீனிய பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை நடுநிலையாக செயற்படும் என எதிர்பார்க்க முடியாது.

1 கருத்துரைகள் :

Anonymous said...

yes

Post a Comment

Flag Counter

Free counters!