animated gif how to

ஐக்கிய நாடுகள் சபையினூடாக உலகை ஆளும் அமெரிக்கா! (பாகம் 01)

March 21, 2012 |

- ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி -
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமைதொயான முறையில் தமது எதிர்ப்புகளை வெளிக்கொணரும் சிறிய ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்து வரும் சர்வாதிகாரி பஷர் அல் அசாத்தின் நடவடிக்கைகள் மிக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் அசாத்தின் இரத்த வெறிக்கு பலியாகுவதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொலைக்காட்சிகளின் ஊடாக உலகு அதிர்ச்சியுடன் அவதானிக்கும் அதேவேளை சிரிய மக்களின் துயரம் பான் கீ மூனின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்கு ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. இவ்வோராண்டு காலப்பகுதியில் ஏறத்தாள 5000 அப்பாவி பொது மக்கள் ஒரு சர்வாதிகாரியின் இரத்த பசிக்கு இரையாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி ஜோர்டானின் தலை நகர் அம்மானுக்கு விரைந்த பான் கீ மூன் ஆர்ப்பட்டக்காரர்களை படுகொலை செய்யும் அசாத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மேலும் இது தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார். உலக நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அசாத்தை பதவி விலக்கக்கோரும் ஒரு பிரேரணை நிறைவேற்றப்படும் என கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். அண்மையில் குறித்த பிரேரணை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு சமர்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணை எவ்விதமான தடைகளையோ அசாத்தின் நடவடிக்கைகள் மீது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பிதாகவோ அமைந்த்திருக்கவில்லை. மாறாக உறுப்பு நாடுகள் சிரிய அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடுத்தல், உடனடியாக வன்முறைகளை நிறுத்தல் மற்றும் தேர்தல்களை நடாத்துவதற்காக அசாத் தனது அதிகாரத்தை உதவி அதிபருக்கு வழங்குதல் போன்ற விடயங்களை கொண்டிருந்தது.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட வேளை ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ சிறப்புரிமையை பயன்படுத்தி குறித்த பிரேரணையை நிராகரித்தன. இதன் மூலம் ஒரு குறுகிய காலத்துக்கு தப்பித்துள்ள அசாத் தனது படுகொலைகளை தொடர்ந்து வருகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான தூதுவர் சூசன் ரைஸ் ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவை ஏமாற்றமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார். இவ்வீட்டோ நடவடிக்கை பிரேரணையை ஆதரித்த ஏனைய நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளானது. சீன மற்றும் ரஷ்ய ஆதரவுக்காக பிரேரணையின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் தடைகள் சம்பந்தமான விடயங்களில் நெகிழ்வுத்தன்மை காண்பிக்கப்பட்ட போதும் இப்பிரேரணை தோல்வியடைந்தது.
பான் கீ மூனின் இப்பிரேரணை இராணுவ நடவடிக்கைகள் மூலம் லிபியாவை நிர்மூலமாக்கியது போல் சிரியாவையும் சுடுகாடாக்குவதற்கு தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கையா ? என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.
நவீன கால போர் வெறியர்களான அமெரிக்க மற்றும் நேடோவின் நிகழ்ச்சி நிரலில் பாரசீக வளைகுடாவில் இஸ்ரேலின் மேலாதிக்கத்துக்கு தடையாகவுள்ள ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஈரான் நாடுகளை துவம்சம் செய்வதும் பிராந்திய என்னை வளங்களை கொள்ளையிடுவதும் முக்கியமான குறிக்கோள்கள் என்பது ஒரு வெளிப்படை உண்மையாகும்.
இந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பிராந்தியத்தில் ஏறக்குறைய அபிவிருத்தி அடைந்த நிலையில் செல்வந்த நாடுகளாக இருந்த ஈராக் மற்றும் லிபியா என்பன நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. அடுத்த இலக்கு சிரியாவாகும். முஅம்மர் கடாபி, மற்றும் சதாம் ஹுசைன் போன்றவர்களின் சர்வாதிகார ஆட்சி முறை போர் வெறியர்களின் நோக்காங்களை அடைவதற்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்தியது போன்று அசாதும் சிரியாவின் மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலையை தனது அடக்குமுறை ஆட்சியின் மூலம் ஏற்படுத்தியுள்ளார்.
பொது மக்களின் நியாயமான சுதந்திர எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடுள்ள அசாத் அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக மக்களின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சிக்கின்றார். படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள் மற்றும் அடிப்படை வசதிகளை முடக்குதல் மூலம் சுதந்திர வேட்கையுள்ள மக்களின் முன்னால் அசாத் நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது.
சிரியா மீதான தாக்குதல் நியாயங்களை தேடும் அமெரிக்க நேடோ போர் வெறியர்களுக்கு அசாத்தின் கொடுங்கோல் ஆட்சி நீடிப்பு மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போரின் பின்னர் உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட் ஒரு அமைப்பாகும்.
எனினும் தனது இலக்கில் இருந்து விலகியுள்ள இவ்வமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் தாக்குதல்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் ஒரு நிறுவனமாகவே செயற்படுகின்றது.
1989 ஆம் ஆண்டு பனிப்போர் நிறைவுற்று சோவியத் யூனியன் துண்டு துண்டாக்கப்பட்ட பின்னர் சட்டவிரோத போர்களை அங்கீகரிக்கும் செயற்பாடு வெளிப்படையாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான்,ஈராக் மற்றும் லிபியா என்பன ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கபட தனத்தை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன.
(தொடரும்...)

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!