நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச
மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை
நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக உலகின் நாலா பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள்
ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச இளைஞர்
பாராளுமன்ற பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் கருத்து தெரிவிக்கையில்;
"இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியம்
இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது.
இதனை முன்னெடுக்கும் முகமாக சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பினாலேயே
இதனை மேற்கொள்ள முடியும் என பலராலும் இன்று உணர்த்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இவ்வளவு காலமும் நடத்திய போராட்டம் முஸ்லிம்
சமூகத்தை பல நூறு வருடங்கள் பின்னோக்கி தள்ளி இருக்கிறது.
அதேவேளை முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களால் இன்று
முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படவும் இல்லை.
அதற்க்கான ஏற்பாடு ஏதுவுமே இல்லாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதன் மூலம் எம்
சமூகம் நாதியற்று விடும் என்ற அச்சம் மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் எமக்காக
போராடக்கூடிய சர்வதேச ரீதியிலான அமைப்பை அவசர அவசரமாய் உருவாக்க வேண்டிய தேவை
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் திணிக்கபட்டிருக்கிறது.
சிறந்த தலைமைத்துவங்கள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும். எனினும்
துரதிஷ்டவசமாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரக்கூடிய சிறந்த
தலைமைத்துவம் இல்லையென்றே கூற வேண்டும்.
இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகளின் போது சமூகங்களிடையே ஒருமைப்பாட்டினைத்
தோற்றுவிக்கும் வகையில் பரந்துபட்ட விரிவான தலைமைத்துவமொன்று எம்மிடையே
காணப்படவில்லை. இவ்வாறான மிகச் சிறந்த தலைமைத்துவமொன்று இருந்தால் தற்போதைய
பிரச்சினைகளுக்கு மிக இலகுவில் தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.
இந்த குறைபாட்டை நிவர்த்திக்கும் முகமாக சர்வதேச ரீதியில் பலம் வாய்ந்த
அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு, அவர்களின்
அன்றாட நடவடிக்கை தொடர்பிலான அடிப்படை உரிமையினை பாதுகாத்தல், அவர்களின்
வாழ்வுரிமையினை உறுதிப்படுத்தல், இனத்துவ அடையாளத்தினை உரிமையோடு பேணுதல் போன்ற
அடிப்ப்படை எண்ணக்கருக்களை கொண்டு சர்வதேச ரீதியில் செயற்படுவதற்கான அரம்ப கட்ட
ஏற்பாடுகளை ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு இயங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை
அறியத் தருவதொடு இக்கட்டான கால சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை
முஸ்லிம்களிடத்தில் இதற்காக ஒன்றுபடுமாறு இவ் அழைப்பினை விடுக்கிறோம்.
இதன் முதற்கட்டமாக நேற்றைய தினம் சிறு சந்திப்பொன்றை பாரிஸ்வாழ் இலங்கை
முஸ்லிம் மக்களிடத்தில் நடாத்தினோம். இதன்போது முழுமையான ஆதரவும் அவசியமும்
குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் மூலம் இலங்கையை சேர்ந்த வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும்
முஸ்லிம்கள் இதில் ஒன்றிணைந்து செயற்பட முடியும். தொழில் புரிவோர், மாணவர்கள்,
வர்த்தகர்கள் என அனைவரும் இதில் ஒன்றிணைந்து உங்களின் மேலான கருத்துக்கள்
சமர்பிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
0 கருத்துரைகள் :
Post a Comment