animated gif how to

முபாரக்கிற்கு தண்டனை போதாது: எகிப்தில் இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

June 04, 2012 |

ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய மக்களை படுகொலைச் செய்த வழக்கில் முன்னாள் சர்வதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு மரணத்தண்டனை வழங்காத விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எகிப்தில் தொடர்ச்சியாக 2-வதுநாளாக போராட்டம் தொடருகிறது.(படங்கள்,வீடியோ இணைப்பு)
முபாரக் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீபுல் அத்லி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்த சனிக்கிழமையன்று இரவே கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி மக்கள் திரள துவங்கினர்.
முபாரக் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிய கடந்த ஆண்டு நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நினைவுக் கூறும் விதமாக தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள் நேற்றும் நீதிமன்றம் மற்றும் ராணுவ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
முபாரக்கிற்கு மரணத்தண்டனையை வழங்க கோரும் பேனர்களுடன் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இஹ்வானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எப்.ஜே.பியின் ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மது முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்திற்கு வருகைத்தந்து மக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் புரட்சி தொடர அழைப்பு விடுத்தார். முர்ஸியை எதிர்த்து போட்டியிடும் முபாரக் ஆட்சியின் கடைசிக்கட்ட பிரதமரான அஹ்மத் ஷபீக்கின் தேர்தல் அலுலகங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தெற்கு கெய்ரோவில் ஷபீக்கின் அலுவலகத்தை எதிர்ப்பாளர்கள் தீவைத்துக் கொளுத்தியதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது. கூட்டுப் படுகொலை வழக்கில் ஆறு பாதுகாப்பு அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்தது. மேலும் ஊழல் வழக்கில் முபாரக்கை குற்றமற்றவர் என கூறியது. இதனால் கோபமடைந்த மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி போராட்டம் நடத்த திரள ஆரம்பித்தனர்.
அதேவேளையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் பாதுகாப்பு அதிகாரிகளை குற்றமற்றவர்கள் என விடுவித்த தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்குரைஞர்கள் மேல் முறையீடுச் செய்துள்ளனர். முபாரக்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுச் செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் அறிவித்திருக்கும் நிலையில், மேலும் இவ்வழக்கு சீர்குலைக்கப்படும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
போராட்டம் தீவிரமடைவது இம்மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலையும் பாதிக்கலாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் எகிப்து ஜனநாயகத்தை நோக்கி திரும்புவதற்கு இனியும் கால தாமதமாகலாம்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!