…………..திடீரென இந்தக்
கோணத்தில் இனவெறி கொண்ட பௌத்தர்கள் குமுறுவதற்கான காரணம் என்ன எனச் சிந்தித்துப்
பார்த்தால் ஒரு இரகசியம் அம்பலமாகின்றது………..
எஸ்.எச்.எம்.
இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்
இலங்கை ஒரு அழகான
பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித
இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது.
வாகனங்களுக்கு
சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக இருந்தனர்.
இதற்காக இந்த இலங்கை நாட்டின் மைந்தர்கள் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இப்படி மொழிவெறி
பேசிய ஒருகாலம் இருந்தது. பலரது உயிர்களைக் காவுகொண்ட அந்த ‘ஸ்ரீ’ இப்போது இல்லாமலே போய்விட்டது.
இலங்கையின் ஜனாதிபதியே தமிழில் உரையாற்றுகின்றார். காலம் மாறிவிட்டது. ஆனால் போன
உயிர் போனதுதான்.
அரசியல்வாதிகள்
தமது வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதத்தைக் கக்கினர். மக்களுக்கு
மார்க்கப்போதனை செய்ய வேண்டிய மதகுருக்களே மூர்க்கத்தனத்தை மூட்டிவிட்டனர்.
கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்களின்போது இரு இனத்திலும் மனிதாபிமானத்துடன்
நடந்து கொண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் மனிதஇனம் வெட்கித் தலைகுனியத்தக்க
கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்தக் கலவரங்களின்போது இலங்கை இராணுவமும், காவல் படையும் சிங்கள இராணுவமாகவே செயற்பட்டனர். இதனால் தமிழ்
இனமக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.
இதனால் ஆயுதம் ஏந்தினார்கள்.
இலங்கை அரசுகளின்
இனவெறி காரணமாகத் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதற்காகத் தனிநாடு கோரி நின்றனர்.
இதனால் போராட்டம் வெடித்து அது பயங்கரவாதமாக உருமாறியது.
சுமார் முப்பது
ஆண்டுகள் இலங்கையின் வளங்களையும் உயிர்களையும் விழுங்கி இந்த அழகிய தேசத்தை
அசிங்கப்படுத்தி அழித்து வந்த பயங்கரவாதம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
அரசினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் நிம்மதிப்
பெருமூச்சு விட்டனர். ஆனால், தமிழர் பிரச்சினை விட்ட இடத்திலேயே
நின்று கொண்டிருக்கின்றது.
மொழி வெறியும், இன வெறியும் சேர்ந்து பெற்றெடுத்த ஆயுதப் போராட்டத்தால் இந்த
நாட்டு மக்கள் அனைவரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். நாட்டின் வளங்கள் அழிந்து
வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. நாட்டின் பெறுமதிமிக்க உயிர்களையும், தலைவர்களையும் நாம் இழந்துள்ளோம்.
முப்பது
வருடங்கள் பட்ட காயங்கள் ஆறுவதற்குள் மீண்டும் இந்த நாட்டிற்குள் மத வெறியையும், இன வெறியையும் தூண்டி நாட்டின் அமைதியைக் குழைக்க தேசத்துரேகிகள்
கூட்டமொன்று முயன்று வருகின்றது. அரசு இவர்களுக்கெதிராக எந்தவிதமான சட்ட
நடவடிக்கைகளையும் எடுக்காதிருக்கின்றதென்றால் முப்பது வருடங்கள் அவஸ்தைப்பட்டும்
கூட பாடம் படிக்கவில்லையென்பது தெளிவாகின்றது.
ஆயுதப்
போராட்டத்தை ஒழித்து தமிழ் மக்களைத் தோற்கடித்து விட்டோம். முஸ்லிம்களையும்
ஒடுக்கி இந்த நாட்டில் இனி சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும்
எனத் துடிக்கின்றது ஒரு கூட்டம்.
ஏப்ரல் 20 ஆம் திகதி முஸ்லிம்களின் சட்டபூர்வமான பள்ளிவாசலைத் தகர்ப்பதற்காக
ஒரு கூட்டம் அணிதிரண்டு வருகின்றது. அவர்கள் ஒரு வாரகாலமாக ரங்கிரி
அலைவரிசையூடாகவும், ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விகாரை
சிங்கள சபாவின் பெயரில் கடிதங்களினூடாகவும் அழைப்பு விடுத்து இந்த மதவெறியையும், இன வெறியையும் தூண்டும் செயலைச் செய்திருக்கின்றனர். இவ்வாறாக
பகிரங்கமாக இந்த தேசவிரோதச் செயல் நடந்தும் கூட இது தடுக்கப்படவில்லை.
நடந்து முடிந்த
பின்னர்கூட இந்த தேசத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும், சட்டத்தைக் கையில் எடுக்கும் இந்த வன்முறைக் கும்பல் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மௌனம் காக்கின்றார். பிரதமர் சட்ட விரோதக்
கூட்டத்திற்குச் சாதகமாக வேறொரு இடத்தில் பள்ளி கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்
என்றால் இதன் பின்னணிதான் என்ன?
தம்புள்ளைப்
பள்ளி மீதான சட்ட விரோதத் தாக்குதல் என்பது முதல் தாக்குதலோ, முடிவோ அல்ல என்பது உறுதி. அண்மையில் அநுராதபுரத்தில் உள்ள 400 வருடங்கள் பழமைவாய்ந்த சியாரம் தகர்க்கப்பட்டு முஸ்லிம்களின்
வரலாற்றை அழிக்கும் முயற்சி நடந்தது. குருநாகல் – புத்தளம் வீதியில் ஆரிய சிங்களவத்த கிராமத்தில் உள்ள முஸ்லிம்
பள்ளிவாசலுக்கு எதிர்ப்பாக அங்கங்கல ரஜ விஹாரை செயற்பட்டு அங்கு பதட்டநிலை
ஏற்பட்டுள்ளது. தெஹிவலை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள மஸ்ஜிதை அகற்றக் கோரி
பௌத்த மதகுருக்கள் இரண்டு பஸ் வண்டிகளில் வந்து இறங்கி கல் எறிந்து ஆர்ப்பாட்டம்
செய்துள்ளனர். எனவே, இதன் மூலம் இது தொடர்கதைதான் என்பதை
நாம் முதலில் உறுதியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இது
தொடர்கதையென்றல் இதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழலாம். இலங்கை சிங்கள மக்களில் அதிகமானவர்கள்
நல்லவர்கள். ஒரு சிலர் மதவாதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
அரசில் அங்கம் வகிக்கும் இந்த இனவாத அரசியல் அமைப்புக்கள் இதன் பின்னணியில்
செயற்படுகின்றன. ஆனால் இதற்கான அரச அங்கீகாரத்தையும் பெற்றே அவை செயற்படுவதாகத்
தோன்றுகின்றது.
முப்பது வருடகால
புலிப் பயங்கரவாத்தை ஒழித்த அரசு இது! நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பாதாள
உலகக் கோஷ்டிகளின் கொட்டத்தை அடக்கிய அரசு இது. புலிப் பயங்கரவாதத்தை ஒழித்த அரசு, சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் முன்னால் வாலை சுருட்டிக்கொண்டு
அடங்கியிருப்பது ஏன்?
புலிகளால்
முஸ்லிம்கள் மூதூரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ரமழான் மாதம் வருவதற்கு முன்னர்
உங்களை மூதூரில் குடியேற்றுவோம் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதைச் செய்தும்
காட்டினார். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளிடமிருந்து மூதூரை மீட்டித் தருவதாக
வாக்களித்த ஜனாதிபதி ‘உங்கள் பள்ளி உங்களது கையில்தான்
இருக்கும். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என வாக்களிக்க முன்வராதது ஏன்?
இலங்கை அரசியலில்
இன்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு பேசுபொருளாகத் திகழ்கின்றார்.
இவர் ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். புலி பயங்கரவாதத்தை
ஒழித்ததில் முக்கிய பங்குதாரர். இவருக்கு இராணுவத்தில் பலத்த செல்வாக்கு இருந்தது.
அப்படியிருந்தும் இவரை உள்ளே (சிறையில்) தூக்கிப் போட்டு இவருக்கு சாதகமான
இராணுவத் தளபதிகள் ஒடுக்கப்பட்டு இரண்டு வருடத்திற்குப் பின்னர் அவர்
சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.
ஒரு இராணுவத்
தளபதியையே சிறையிட முடியுமென்றால் பகிரங்கமாக அழைப்பு விடுத்து வன்முறையைத்
தூண்டிய, நாட்டின் மனித உரிமைகளையும், சட்டதிட்டங்களையும் மீறிய கூட்டம் ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
இப்படி சிந்திக்கும்போது இவர்களுக்கு அரச அங்கீகாரம் வழங்கியுள்ளதோ என பொதுமக்கள்
ஐயப்படுகின்றனர்.
இதற்கான பின்னணி
என்ன? என்பது குறித்தும் நாம் சிந்திக்க
வேண்டியிருக்கின்றது. இந்த அரசு மக்கள் கவனம் திசை திரும்புவதை
எதிர்பார்க்கின்றது. கிரிக்கட், திருவிழாக்கள், பெருநாட்கள் என மக்கள் கவனம் வேறு திசையில் இருக்கும்
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கண்ணாபின்னாவென விலைவாசியை உயர்த்துவதிலிருந்து இதை
விளங்கிக் கொள்ளலாம். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டே இருக்க
வேண்டும். அப்போதுதான் அவர்கள் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலட்டிக்
கொள்ளமாட்டார்கள். எனவே நாட்டை ஏதாவதொரு பிரச்சினைக்குள் வைத்துக்கொள்ள அரசு
விரும்புகின்றது. அதற்காக தன்னுடன் அங்கம் வகிக்கும் இனவாத அரசியல் கட்சிகளைப்
பயன்படுத்துகின்றது என சிலர் நம்புகின்றனர்.
அண்மைக்காலமாக
இஸ்லாத்திற்கு எதிரான பல இணையத்தளங்கள் இலங்கையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களைக் காதலித்து கடத்திச் சென்று (காதலித்தால்
எதற்காகக் கடத்த வேண்டும்) முஸ்லிம்களாக மாற்றி திருமணம் செய்கின்றனர். அரச
காணிகளை ஆக்கிரமித்துள்ளனர். திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி
வருகின்றனர் என்ற கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இந்தக் கருத்துக்கள் பரப்பப்
படுவதனால் முஸ்லிம் சமூகம் மீண்டும் டியுசன் வகுப்புக்கள், கலப்புப் பாடசாலைகள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
திடீரென இந்தக்
கோணத்தில் இனவெறி கொண்ட பௌத்தர்கள் குமுறுவதற்கான காரணம் என்ன எனச் சிந்தித்துப்
பார்த்தால் ஒரு இரகசியம் அம்பலமாகின்றது. அண்மைக் காலத்தில் குடிசன மதிப்பீடுகள்
எடுக்கப்பட்டன. ஆனால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்தக் குடிசன
மதிப்பீடுகளின்போது முஸ்லிம்களின் குடிசன மதிப்பீட்டுத் தொகை அரசு சொல்வதை விட
இரண்டரை மடங்காக அதிகரித்துக் காணப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. (சிலவேளை இது
மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவும் இருக்கலாம்) முஸ்லிம்கள் 8 வீதத்தில் உள்ளனர் என்றுதான் அரசு அன்றிலிருந்து சொல்லி
வருகின்றது. இந்த 8 வீத உரிமை கூட எமக்குக்
கிடைப்பதில்லை. ஆனால் நாம் 10 – 12 வீதத்தில்
இருப்போம் என முஸ்லிம்கள் நம்பி வந்தனர். ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் 20 வீதம் என்ற நிலையை அடைந்துள்ளனர் என்பதுதான் அரசை திக்குமுக்காட
வைத்த கணிப்பு என்று கூறப்படுகின்றது. இப்படிப் பார்த்தால் முஸ்லிம்கள் இந்த
நாட்டின் இரண்டாவது சமூகமாகப் பரிணமிக்கின்றனர்.
இந்த அறிக்கையை
வெளியிட்டால் முஸ்லிம்களின் விகிதாசார வளர்ச்சியை ஒத்துக்கொள்ள நேரிடும். அதேவேளை
சர்வதேச மட்டத்தில் தமிழ் சமூகத்தை இலங்கை அரசு அழித்து அவர்களின் விகிதாசாரத்தையே
குறைத்து விட்டது என தமிழ் தலைமைகள் ஒப்பாரி வைக்கவும் வசதியாக அமைந்துவிடும்.
உண்மையில் இந்த விகிதாசார மாற்றத்துக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என்று
சிந்தித்துப் பார்த்தால் பல காரணங்களைக் கண்டுகொள்ளலாம்.
1. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்
புகுந்துள்ளனர்.இவர்கள் தமக்கென அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அளவுக்கு
சில நாடுகளில் செறிவாக உள்ளனர். அவர்கள் குடியுரிமை பெற்றுள்ளதால் மீண்டும்
நாட்டுக்கு வந்து தங்கும் சாத்தியம் இல்லை.
2. இளைஞர் யுவதிகள் இரு இனங்களிலும் போரில் பெருமளவில் ஈடுபட்டதால்
பிறப்பு விகிதம்அருகியமை.
3. இரு சமூகங்களிலும் விதவைகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு.
4. போரில் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை.
5. இயல்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் குறைவு.
இவ்வாறு பல
காரணங்களைக் கூறலாம். போரினால் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தாலும் அவர்கள் உள்நாட்டு
அகதிகளாகவே இருக்கின்றனர். போரின்போது புலிகளாலும், இராணுவத் தாக்குதல்களின் போதும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும்
ஒப்பீட்டளவில் உயிர்ச்சேதம் குறைவாகும். இதேநேரம் பெரிய பிரச்சாரம் இல்லாமலேயே
பலர் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். அத்தோடு இயல்பிலேயே முஸ்லிம்களின் பிறப்பு
விகிதம் அதிகமாகும்.
இதேவேளை, இரு இன மக்களும் குறிப்பாக, சிங்கள மக்கள் நன்றாக வயது போனதற்குப் பின்னரே மணமுடிக்கின்றனர்.
பலர் மணமுடிக்காமலேயே வாழ்கின்றனர். பெரும்பாலான சிங்களப் பெண்கள் அதிக
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை வெறுக்கின்றனர். பௌத்த மதம் துறவறத்தைப்
போற்றுகின்றது. இப்படிப் பல காரணங்களினால் முஸ்லிம்களின் இன விகிதாசாரம்
எதிர்பார்க்காத அளவுக்கு ஏறிச் சென்றுள்ளதால் இன விகிதாசாரம் உச்சக்கட்ட
எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடு இஸ்லாமிய நாடாக மாறிவிடுமோ என்று
அச்சப்படுகின்றனர். எனவே, இஸ்லாத்தை சமய ரீதியில் எதிர்க்க
முனைகின்றனர்.
இந்தப்
பின்னணியைப் புரிந்து கொண்டு முஸ்லிம் சமூகம் தீர்க்கமான அதேவேளை உறுதியான
முடிவுகளை எடுக்க வேண்டும். இனவாதம் உருவாக்கிய போரின் இழப்புக்களை வைத்து நாம்
பாடம் படிக்க வேண்டும். அதேநேரம் நாம் தளர்ந்து பின்வாங்கினால் அது எமது
சமூகத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எமது எந்த
உரிமையையும் விட்டுக் கொடுக்கலாகாது. எமது உரிமைகள் தொடர்பில் எழும் சவால்களை
எதிர்கொள்ள சட்டம் அறிந்து ஒரு கூட்டம் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். எமது
பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் அது சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்.
இருக்கும் ஊடகங்களை முறையாகப் பயன்படுத்தி எமக்காக அடுத்தவர்கள் குரல் கொடுக்கும்
நிலையை உருவாக்க வேண்டும்.
சிங்கள
இனவாதிகளின் தவறான பிரச்சாரத்தால் நல்ல மக்களும் மனம் மாறிவிடக் கூடாது என்பதால்
சிங்கள, ஆங்கில ஊடகங்களினூடாக முஸ்லிம்கள்
பற்றிய நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும், அவர்களது தவறான பிரச்சாரங்களைத் தவிடுபொடியாக்குவதற்குமான
முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
எமது
செயற்பாடுகள் இனவாதிகளால் கவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்றங்களையும்
ஏற்படுத்த வேண்டுமே! தவிர நல்ல மக்களையும் அவர்களுடன் இணைந்து விடுவதாக
அமைந்துவிடக் கூடாது. இது முஸ்லிம்களின் பொதுப்பிரச்சினை என்பதால் கட்சி, இயக்க வேறுபாடு இல்லாமல் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும். இந்தப்
பிரச்சினைகளைச் சட்ட ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் எப்படி அணுகுவது என்பதை
ஆராய்ந்து மக்களை வழிநடாத்த ஒரு குழு இருக்க வேண்டும்.
பிரச்சினை வந்த
பின்னர் கூடிக் கலையும் குழுவாக அது இல்லாமல் நிரந்தரமாக இயங்கி மக்களை
வழிநடாத்தக் கூடிய குழுவாக அது இருக்க வேண்டும்.
இந்த நாட்டில்
சாதாரண அரசியல் காரணங்களுக்காக உடதலவின்ன போன்ற இடத்தில் பத்து இளைஞர்களையும்
பலிகொடுத்துள்ளோம். காத்தான்குடி, ஏராவூர், மூதூர் என நூற்றுக்கணக்கில் எமது சகோதரர்கள் கரணமே இல்லாமல்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான எமது சொத்துக்களை புலிகளிடம் நாம்
பறிகொடுத்துள்ளோம். இதனால் நாம் அழிந்து விடவில்லை.
எனவே, ஒரு சில உயிர்களை நாம் இழக்க நேரிட்டாலும் சில உரிமைகளை இழக்க
நேரிட்டாலும் கொஞ்சம்கூட தளராமல் உறுதியுடன், நிதானமாக, அறிவுபூர்வமான, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக முயன்றால், முன்னேறினால் இந்தப் பேரினவாதிகளின் சதிவலையை அல்லாஹ்வின்
உதவியுடன் சுக்குநூறாக்கிவிட முடியும். சின்னச் சின்ன உடனடி இழப்புக்களைத்
தவிர்ப்பதற்காக நாம் பின்வாங்கி கோழைத்தனமாகச் செயற்பட்டால் தாத்தாரியப் படைகளின்
முன்னால் தலைநீட்டி வெட்டு வாங்கியது போன்று பின்னாளில் கொத்துக் கொத்தாக செத்து
மடிய நேரிடும்.
எனவே, ஈமானுடனும், ஒற்றுமையுடனும், சமயோசிதத்துடனும் பிரச்சினையை எதிர்கொள்வோம் என்ற உறுதியுடன்
முஸ்லிம் சமூகம் செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம்.
ஜனாதிபதி தனது
மௌனத்தைக் களைத்து, முஸ்லிம்களின் அச்சத்தை அகற்றும்
வண்ணம், இனவாதத்தை அடக்கும் வண்ணம் பேசுவார்
என்றே பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். எமது வேண்டுகோலும் இதுவே!
“நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம்
என்று உறுதியாக நம்பிக்கை கொண்டோர், ‘எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகளை அல்லாஹ்வின் உதவியினால் வெற்றி
கொண்டுள்ளனவே!’ எனக் கூறினர். அல்லாஹ்
பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.” (2:249)
2 கருத்துரைகள் :
nice article.. keep doing this man..
salam and jazakallah,,, well and good advice at the same time our society has broken by the politician and group of jamath therefore we can't get any decision because, if any body who recommend a decision that should not be agreed by others... so far how we do the analyzing of our society safe,,,all the writers who write the articles ok its nice but how many people read it? and how many people ready to comes out to solve the problem? we are saying that we are the society of true path but our mind is not ready why is it? because we all are taking about the islam without the thaqwa...finally thaqwa> number of enemy, modern gun, group of jahiliyya,...
Post a Comment