animated gif how to

அம்பாறையில் முஸ்லிம்களுக்காக சவுதி அரசினால் கட்டப்பட்டு கையளிக்கப்படாத சுனாமி வீடுகள்'

June 24, 2012 |

(BBC - TAMIL)

இலங்கையில் 2004 ம் ஆண்டு சுனாமியின் போது இருப்பிடங்களை இழந்த முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை உரியவர்களிடம் வழங்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

சுனாமியினால் பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்த மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நுரைச்சோலையில் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் பெயரில் அந்த நாட்டு அரசின் நம்பிக்கை நிதியத்தினால் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியின்போது வீடுகளை இழந்த முஸ்லிம் குடும்பங்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக இருப்பிடங்களிலேயே தங்கியிருக்கின்றனர்.

64 ஏக்கர் நிலப்பரப்பில் 500 வீடுகள், பள்ளிவாசல், வைத்தியசாலை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பாடசாலைகள், திருமண மன்டபம் உட்பட தனித்துவமான இஸ்லாமிய சூழலுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்ட இக் கிராமம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காடுறைந்து காணப்படுகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வீடுகள் உரியவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தவேளை, பௌத்த சிங்கள அரசியல் கட்சியான, ஜாதிக ஹெல உறுமய தாக்கல் செய்த வழக்கொன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை தடைப்பட்டது.

பௌத்தர்களின் புனித பிரதேசமான தீகவாபியை அண்டிய பகுதியில் இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட கட்சி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
நீதிமன்ற தீர்ப்பின்படி இன விகிதாசார அடிப்படையில் தகுதியானவர்களை தெரிவு செய்யுமாறு அம்பாறை அரசாங்க அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. இரண்டு, மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதிலும் கூட தீர்ப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுனாமியினால் பாதிக்கபட்ட மக்கள் கவலையுடன் கூறுகின்றார்கள் .

வீடுகளை இழந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் உள்ளுர் ஆளும் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது அதிருப்தியடைந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.


2 கருத்துரைகள் :

sufsuf said...

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும், காய் நகர்த்தலை கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிறுத்தி செய்வார்களா? முஸ்லிம்களின் உரிமை மீட்ப்பாளர்களே,அரசின் பங்காளிகளே இது உங்கள் கவனத்திக்கு?

Islam said...

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் இரகசியமாக மதுபாணச்சாலை அமைக்க அனுமதி கேட்டவிடயம் ஞாயிறு மின்னல் நிகழ்சியில் அம்பலமானது இதுதான் அவர்களின் உரிமைப் போராட்டம்

Post a Comment

Flag Counter

Free counters!