அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பளீல் (நளீமி)
வெள்ளிக்கிழமை குத்பாக்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களிலும் பொது மேடைகளிலும் இடம்பெறும் உபந்நியாசங்களைப் பொறுத்தவரையிலும் அவை நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயம் கதீப்களின் வழிகாட்டல்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறது. அன்றாடம் சுற்றுச் சூழலில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகவும் சமூக உறவுகள், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடுகளை அறிய ஆவலாக இருக்கிறது. மார்க்கத்தைப் படித்தவர்கள் மீது பொதுமக்களுக்கிருக்கும் நம்பிக்கை அதிகமாகும். எனவே கதீப்மார் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்க்க வேண்டும்.
ஜும்ஆவுக்கு சமூகம் தந்துவிட்டு பள்ளியிலிருந்து வெளியேறும்போது பொதுமக்களது சிந்தனைப் பாங்கில் ஒரு திருப்பமும் அதிர்வும் ஏற்பட வேண்டும். குத்பாக்கள் மக்களை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவதோடு அல்லாஹ்வுடனான தொடர்பையும் அடியார்களுடனான தொடர்பையும் வலுப்படுத்த வேண்டும்.
மக்களால் புரியமுடியாத அவர்களுக்கு அந்நியமான அம்சங்களை கதீப்மார்கள் முற்று முழுதாகத் தவிர்ப்பது அவசியமாகும். ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமையும், தெளிவுக்குப் பதிலாக கருத்துச் சிக்கலும், மன நிறைவுக்குப் பதிலாக மனக் குழப்பமும் ஏற்படும் வகையில் பல குத்பாக்கள் அமைவதுண்டு. சாண் ஏறி முழம் சறுக்கும் நிலை உருவாகிறது.
அலி (ரழி) அவர்கள்: ‘மக்களுக்குப் பரிட்சயமான(யஃரிபூன்)வற்றைப் பேசுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் பொய்ப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்புகிர்களா?’ எனக் கேட்டார்கள். (புஹாரி : 124)
இங்கு வந்துள்ள ‘யஃரிபூன்’ என்பது அவர்களால் விளங்க முடியுமானவற்றையே குறிக்கும் என இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) குறிப்பிடுகின்றார். ‘அவர்கள் மறுப்பவற்றை விட்டுவிடுங்கள்’ (அபூநயிம்) என அலி (ரழி) மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்கள். இந்தக் கூற்றை இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ‘ஓர் அம்சத்தைக் குறிப்பிட்ட ஒரு சாரார் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற பயத்தின் காரணமாக அதனை அவர்களுக்குக் கூறாமல் வேறு சிலருக்கு மட்டும் கூறும் பாடல்’ எனும் தலைப்பின் கீழ் போட்டியிருக்கிறார்கள். அதற்கு முன்னால் அவர்கள் ‘ஒரு விடயத்தை மக்கள் அரைகுறையாகப் புரிந்து, இருப்பதை விட மோசமான நிலைக்குச் சென்றுவிடுவர் எனப் பயந்து சில விடயங்களை விட்டுவிடும் பாடம்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ‘நீங்கள் ஒரு சமுதாயத்தைப் பற்றிப் பேசும் விடயங்களை அந்த சமுதாயத்தின் மூளைகளால் புரிய முடியாதிருப்பின் அவர்களில் சிலருக்கு (பித்னா) சோதனையாகவே அமையும்’ (முஸ்லிம்) என்றார்கள்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மக்களில் சிலர் தூற்றுவதற்கும் மறுப்பதற்கும் பிரசாரகர்கள் பிரயோகிக்கும் சொற்களோ, அணுகுமுறைகளோ, முன்வைக்கும் பாணியோ காரணமாக அமையலாம் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
குத்பாக்களுக்குப் பலதரப்பட்டவர்கள் வருவார்கள். படித்தவர், பாமரர், விவேகிகள், விவேகமற்றவர்கள், மார்க்கத்தில் அதிக பற்றும் பிடிப்புமுள்ளவர்கள், மார்க்கத்தைப் பற்றிய அதிகமான சந்தேகங்களோடு குப்ருக்கு அருகிலிருப்பவர்கள், கடினமான சொற்பிரயோகங்களுக்கு பரீட்சயமற்ற தமிழ் மொழி அல்லாத மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்றெல்லாம் அவர்கள் பலவகைப் படுவார்கள். இவர்கள் அனைவரையும் கருத்திலெடுத்து குத்பா நிகழ்த்துவதென்பது கயிற்றில் நடப்பதற்கு ஒப்பானதாகும்.
எல்லோருக்கும் எல்லாம் விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும் வந்திருக்கும் பெரும்பாலானோர் அதிகபட்சம் பயனடைய வேண்டும் என்பதற்காக குத்பாக்கள் அமைக்கப்படுவது அவசியமாகும்.
இதன் அர்த்தம் சத்தியத்தை மறைப்பது என்பதல்ல, சத்தியத்தை மறைப்பவனுக்கு அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறது. சத்தியத்தை கூறவேண்டிய முறையில் கூறாதபோது எதிர்பார்க்கப்படும் நலன்களை விட ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமாகும். கட்டம் கட்டமாகப் போதிப்பது, நபர்கள், காலநேரம், சூழல் அறிந்து போதிப்பது என்பதெல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த ஒழுங்கு விதிகளாகும்.
குத்பாக்கள் ஊடாக பரந்துபட்ட கருத்துக்கள் சமூகத்துக்குச் சென்றடைவதற்கு இயக்க ரீதியான பிடிவாதங்களும் ஒருவகையில் தடையாகவுள்ளன. குறித்த சில இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சில பள்ளிகளில் சந்தர்ப்பமளிக்கப்படுவதால், பொதுமக்களிடம் குறுகிய மனப்பாங்கும், குறிப்பிட்ட ஓர் இயக்கம் பற்றிய நல்லபிப்பிராயம் மட்டுமே உருவாக இடமிருக்கிறது- குத்பாக்களுக்கு சுன்னத் வல்ஜமாஅத்தினைச் சேர்ந்தவர்கள் என இனம் காணப்பட்ட அனைத்து இயக்கத்தவர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும்.
சுருங்கக் கூறின், குத்பா மேடைகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் அல்லாஹ்வின் கிருபையால் மிக குறுகிய காலத்துக்குள் பாரிய மாற்றங்களைக் காண முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment