animated gif how to

முஸ்லிம்களின் இணக்கமின்றி இறுதித் தீர்மானம் இல்லை! இரா.சம்பந்தன்

December 16, 2011 |

December 16, 2011.... AL-IHZAN Local News
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார்.
அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம்,வடக்கு - கிழக்கு இணைப்பு சம்பந்தமாகப் பேசப்பட்டதையும் அவர் விளக்கிக் கூறினார்.

அடிப்படையில் முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்து ஒருமைப்பாடு இன்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமது தரப்பினர் மேற்கொள்ளப்போவதில்லை என சம்பந்தன் உறுதியளித்தார்.

சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் அரசியல் வரலாற்றைத் தொட்டுக் காட்டிய சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் தமிழ் மக்களோடு ஒன்றித்து மேற்கொண்ட அரசியல் பயணத்தையும் சுட்டிக்காட்டினார். 

அதன் அடிப்படையில் மீண்டும் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்வுக்காக ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயக ரீதியாக தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது பற்றியும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கும்போது தொடர்ச்சியாக இதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான பொறிமுறை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான சுமுகமான உறவை முன்னெடுக்கும் விதத்தில் முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்படாதவாறு தமிழர் தரப்பினருடைய அறிக்கைகள் அமையவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பேச்சுகளை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

நேற்றைய பேச்சில் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசனலி (செயலாளர் நாயகம்), பைஸல் காசிம், முத்தலிப் பாவா பாரூக், கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!