December 10, 2011.... AL-IHZAN India News
கொல்கத்தா: வெள்ளிக்கிழமை அதிகாலை கொல்கத்தாவில் உள்ள எ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டதில் 89 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
கொல்கத்தா: வெள்ளிக்கிழமை அதிகாலை கொல்கத்தாவில் உள்ள எ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டதில் 89 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மருத்துவமனை இயக்குநர்களான ஆர்.எஸ்.கோயங்கா, எஸ்.கே.டோடி உள்பட ஆறுபேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மரணித்தவர்களில் 70 பேர் நோயாளிகள் ஆவர். 3 பேர் மருத்துவமனை பணியாளர்கள். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
மருத்துவமனையில் தீயணைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாததுதான் விபத்தின் தீவிரம் அதிகரிக்க காரணம் என சம்பவ இடத்திற்கு வருகை தந்த மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மருத்துவமனை அதிகாரிகளிடம் ஏற்பட்ட கடுமையான தவறு மன்னிக்கமுடியாத குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்...
தீவிபத்தை தொடர்ந்து மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது க்ரிமினல் குற்றம் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மருத்துவமனை அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்துள்ளனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தில் சிக்கிய அனைத்து நபர்களும் வெளியே மீட்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஐ.சி.யு, ஐ.சி.சி.யு, க்ரிடிக்கல் கேர் யூனிட், விபத்து சிகிட்சை பிரிவு ஆகியன செயல்பட்டுக் கொண்டிருந்த எட்டு மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் முதலில் தீப்பிடித்தது. இங்கு க்யாஸ் சிலிண்டர்கள், வயர்கள், வேதியியல் பொருட்கள் ஆகியன சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால் வேகமாக தீ பரவ காரணமானது. தீ பரவி இரண்டு மணி நேரம் கழித்த பிறகே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைக்கு செல்வதற்கான வழிகள் குறுகியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது.
மருத்துவமனை அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் மூடிக் கிடந்ததும் மீட்பு பணியை பாதித்தது. மருத்துவமனையின் எலக்ட்ரிக் டிபார்ட்மெண்டிலிருந்து தீ பரவத் துவங்கியுள்ளது. பின்னர் 4 மாடிகளுக்கு தீ பரவியுள்ளது. இதர கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளன. தீ பற்றியதற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர், மாநகராட்சி துறை, தீயணைப்பு துறை அமைச்சர் ஆகியோர் சம்பம் நடந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
மீட்பு பணிகள் நடக்கும் வேளையில் மருத்துவமனை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாதது அதிர்ச்சியடையச் செய்தது என மேற்கு வங்காள திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் சுப்ரதோ முகர்ஜி தெரிவித்துள்ளார்.மருத்துவமனை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தற்பொழுது மீட்பு பணியில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தீப்பிடித்தவுடன் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை காப்பாற்றாமல் தாங்கள் மட்டும் ஓடிவிட்டனர். அதனால் பலர் மூச்சுத் திணறி உயிர் இழந்துள்ளனர் என்று இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment