animated gif how to

ஹெல உறுமய-முஸ்லிம் கவுன்சில் இணைந்து சமூகங்கள் மத்தியில் நல்லினக்க கலந்துரையாடல்

October 28, 2011 |

October 28, 2011.... AL-IHZAN Local News

தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது.
கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்,முஸ்லிம்,சிங்கள மூன்று தரப்பினரும் மாதாந்தம் கூடிய பிரச்சினைகளை சுமுகமாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது சந்திப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதெனவும் இதற்கு மூவினத்தையும் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் பிரமுகர்களை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது...

ஆரம்ப கட்டச் சந்திப்பின் போது சிறுபான்மைச் சமூகத்தவரின் கல்வி நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டாமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரோ தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்கள மொழியை கற்கத் தவறியதன் காரணமாகவே சிங்கள சமூகத்தினரின் கலாசாரத்தை மதிக்க முடியாத நிலை ஏற்பட்டு அதேபோன்று சிங்கள சமூகம் தமிழ் மொழியை கற்காமையால் புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளது.


இதற்கு ஆரம்பக் கட்டமாக எதிர்காலத்தில் குறிப்பிடக் கூடிய சில சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்காக குறைந்தது 20 சதவீத வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதேபோன்று ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக கூடி ஆராய்ந்து நல்லெண்ணத்தின் அடிப்படையில் தீர்வு காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வோம். இனங்களுக்கிடையேயான இடைவெளியை அகற்றி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப சகல சமூகங்களும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்தச் சந்திப்பில் ஹெல உறுமய கட்சி சார்பில் அத்துரலிய ரத்ன தேரோ, தர்மாராம தேரோ, பஞ்ஞாசார தேரோ மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் சத்துரசேனா ரத்ன, சிசிர கருணாரத்ன, சமித் டி.சில்வா உட்பட பலர் பங்கேற்றனர். இலங்கை முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் ஹில்மி அஹமத், அஸ்கர்கான், பாரிபௌஸ் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ், சமுர்த்தி நியாஸ், தஹ்யான் ஆகியோரும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சார்பில் அதன் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ.முபாரக்,மௌலவி தாஸிம், மௌலவி ஷபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!