October 19, 2011.... AL-IHZAN World News
விடுதலை பெறும் முக்கிய பலஸ்தீனர்கள்
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான ஒப்பந்தப்படி, ஹமாஸ் பிரிவினர் பிடியில் இருந்த இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித், 25, விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, பாலஸ்தீன கைதிகள் நூற்றுக்கணக்கானோர், இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காசா மற்றும் ரமல்லா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் திரண்டு நின்று உற்சாகமாக அவர்களை வரவேற்றனர்.
நிபந்தனை: கடந்த 2006ல் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் பிரிவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் பிடித்துச் செல்லப்பட்டார். அவரை விடுவிப்பதற்காக இஸ்ரேல், ஹமாசுடன் பேச்சு நடத்தியது. அவருக்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள, 1,027 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என, ஹமாஸ் நிபந்தனை விதித்தது...
ஷாலித் விடுதலை: அதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல், கடந்த 16ம் தேதி தான் விடுவிக்க உள்ள பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து ஹமாஸ் பிரிவினர், சினாய் தீபகற்பத்தில் இஸ்ரேல் அதிகாரிகளின் முன்னிலையில், எகிப்திய அதிகாரிகளிடம் ஷாலித்தை ஒப்படைத்தனர். ஷாலித் உடல்நலத்தை பரிசோதித்த இஸ்ரேல் அதிகாரிகள், அவரை, அவரது குடும்பம் இருக்கும் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள டெல் நாப் என்ற இடத்திற்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
பெஞ்சமின் எச்சரிக்கை: அங்கு அவரது குடும்பத்துடன் இணையும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ,"ஷாலித்தின் விடுதலைக்கு இஸ்ரேல் மிக அதிக விலை கொடுத்துள்ளது. எனினும் தனது ஒரு வீரரை மீட்பதற்குக் கூட இஸ்ரேல் எந்த தியாகத்தையும் செய்யும். அதேநேரம் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் மீண்டும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்' என, எச்சரிக்கை விடுத்தார்.
நல்லுறவு வேண்டும்: தனது விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷாலித்,"இன்னும் பல பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்புக்கும் இடையில் நல்லுறவு மலர வேண்டும்' என்றார். இதன் பின், நாட்டின் வடபகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான மிட்ஜ்ப் ஹிலாவுக்கு, பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை: ஷாலித் விடுவிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, இஸ்ரேலில் பல சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 477 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில், 295 பேர் காசா பகுதிக்கும், 40 பேர் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மீதமுள்ளவர்கள் மேற்குக் கரை தலைநகர் ரமல்லாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காசா, ரமலாவில் கொண்டாட்டம்: காசாவில் விடுவிக்கப்பட்ட கைதிகளை வரவேற்க இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதற்காக ஒரு பெரிய விழாவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமல்லாவில், கைதிகளை வரவேற்றுப் பேசிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,"இவர்கள் விடுதலைப் போராட்டவீரர்கள். மேலும் பல கைதிகள் விடுவிக்கப்படுவர் என நம்புகிறோம்' என்றார். இரண்டாம் கட்டமாக, 550 கைதிகள் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்.
நஸார் இதைமா: 2002ம் ஆண்டு நெதன்யா ஹோட்டல் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார். இத்தாக்குதலில் 11 பேர் பலியாயினர்.
வலித் அன்ஜஸ்: 11 பேர் கொல்லப்பட்ட ஜெரூஸலம் குண்டுத் தாக்குதல் சந்தேகத்தில் கைதானவர்.
யெஹியா சன்வர்: ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவை உருவாக்கியவர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக்கு உள்ளானவர்.
ஜிஹாத் யக்மோர்: 1994ம் ஆண்டு இஸ்ரேல் இராணுவ வீரரை கொன்றதற்காக கைதானவர்.
மொஹமட் அல் சஹ்ராத்தா: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர். ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
நயெல் பாகுதி: இஸ்ரேல் இராணுவ வீரரைக் கொன்றதற்காக கடந்த 1978 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்.
ரவ்ஹி அல் - முஷ்தஹா: ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைக்கு உள்ளானவர்.
0 கருத்துரைகள் :
Post a Comment