வாஷிங்டன்:’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்...
ஆனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்து இருந்த போது முஜாகிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா தான். அவர்களுக்கு பல ஆண்டுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவித்தது அமெரிக்கா. இப்போது தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானை பலிகடா ஆக்க நினைப்பது தவறு.
பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை இருநாடுகளும் பின்பற்றுவது நல்லது. பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
அமெரிக்கா தாராளமாக பாகிஸ்தானுடனான உறவை முறித்துக் கொள்ளட்டும். அது அவர்களது இஷ்டம். ஆனால் அதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கு கிடையாது, அமெரிக்காவுக்குத்தான் என்று கடுமையாக பதிலளித்தார். அதற்கும் மேலாக, உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்றும் மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.”
மேலும் அவர் கூறுகையில்; “அமெரிக்கா பாகிஸ்தானின் பொறுமையை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும். அமெரி்க்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அதனிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவே ஹக்கானி அமைப்பை உருவாக்கிவிட்டு தற்போது அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் கூறுகிறது.
அமெரி்க்காவின் சிஐஏவுக்கு உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஹக்கானி அமைப்பு சிஐஏவுக்கு பிடித்தமான ஒன்று தான்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகளை விட பாகிஸ்தான் தான் அதிகமான மக்களை இழந்துள்ளது. அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த நாட்டையும் அழிக்க முடியாது. எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அமெரி்ககாவில் ஒரு 9/11 தாக்குதல் தான் நடந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அது போன்று 311 தாக்குதல்கள் நடந்துள்ளது.” என்றார்.
ஹினாவின் இந்த ஆவேசப் பேச்சால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment