animated gif how to

முஸ்லிம்களின் அரசியல் முகவரி

September 16, 2011 |

September 16, 2011.... AL-IHZAN Local News
எஸ். சிறாஜுதீன் 
அரசியல் களத்தில் உயிரை துச்சமென மதித்து தனித்துவக் கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து தனித்தவ முத்திரை பதித்த மர்ஹும் அஷ்ரப் மறைந்த நாள் செப்டெம்பர் 16.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, கெளரவம், தனித்துவம், உரிமை பற்றிச் சிந்தித்து ஆயுதக் கவர்ச்சியின்பால் செல்லவிருந்த இளைஞர்களை அஹிம்சை வழிதிருப்பி வரலாறு கண்ட பெருமை இவரையே சாரும். எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஊமைகளாக பேசாமடந்தைகளாக விளங்கிய முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் மயப்படுத்தினார். 

அஷ்ரப் ஏனைய சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம் சமூகமும் பெற்று தன்மானத்துடன் வாழ வழி வகுத்தார். வேதனை, கண்ணீர், இரத்தம், உயிர் ஆகியவற்றை விலையாக அதற்கு வழங்கினார். தனது பயணப் பாதையை வகுத்ததோடு அதற்கான வழியையும் அமைத்தார். புரையோடிப்போன யுத்தத்தின் கொடுமை கண்டு மனம் வெதும்பினார். தமிழ விடுதலைப் புலிகள் மேசைக்கு வராத பேச்சுவார்த்தை ஒருபோதும் வெற்றி காண முடியாதென நாடாளுமன்றில் உரத்துப் பேசினார். இதேவேளை முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளும் எத்தீர்மானமும் வெற்றி தராதெனவும் அழுத்தமாக கூறினார்....
இனவாதம் பேசி இரத்த ஆற்றில் குளித்தோரை தன் பேச்சுப் புலமையினால் விவாதத்திற்கழைத்து வெற்றியும் கண்டார். இதன் மகுடமாக தேசிய ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்தார். தார்மீக கோட்பாட்டையும் மானுட நேயங்களையும் மதிக்கும் அடையாளமாக இதனை மாற்றியமைத்தார். மூன்றரை மணி நேரம் பேசி பாராளுமன்றில் சாதனையும் படைத்தார். வெறுங்கையுடன் அரசியல் அரங்கில் நுழைந்த அஷ்ரப் நுஆவையும், எஸ்.எல்.எம்.ஸி.ஐயும் நிழல்தரு மரத்தையும் விட்டுச் சென்றார்.

14 வயதில் தாய் எனும் கவிதையுடன் ஆரம்பித்த இலக்கியப் பயணம் 'நான் எனும் நீ' எனும் தொகுப்போடு முடிவடைந்தது. அதில் தனது மரணம் அமையப்போகும் விதத்தை ஆருடமாகக் கூறினார். மகாகவி அல்லாமா இக்பாலின் கவிதைகளுடன் காதல் கொண்டு சங்கமித்ததுடன் "போராளிகளே புறப்படுங்கள்" என கவித்துவம் மிளிரப் பாடினார். பன் மொழிப் புலமையும், பேச்சாற்றலும், தூரதிருஷ்டிச் சிந்தனையும், அரசியல் சாணக்கியமும் அன்னாரது அணி கலன்களாக விளங்கியது.
கண நேரத்தில் வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களின் வாழ்வை வளமூட்ட பல்வகை திட்டங்களைத் தீட்டினார். முஸ்லிம் சமூகத்தின் விடுதலை கல்வியிலே தங்கியுள்ளதெனக் கனாக் கண்டவர் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளின் அமைவினூடே அதனை நனவாக்கிக் காட்டினார். சர்வதேசமும் முஸ்லிம் களுக்கும் பிரச்சினை உண்டென இனங்காண வைத்த சிறப்பு மர்ஹும் அஷ்ரபுக்கு மட்டுமே உரித்தானதாகும். 

தாயை மிக நேசித்ததுடன் தன் பயண நேரம் தன் கையால் இறுகணைத்து முத்தமிட்டுச் செல்லும் காட்சியை யாதெனக் கூறலாம். 1981 இல் காத்தான்குடியில் மிளிர்ந்த முஸ்லிம் காங்கிரஸை பேரம் பேசும் சக்தியாக ஆட்சியைக் கூட மாற்றியமைக்கும் சாதனமாக மாற்றி வழிநடாத்திச் சென்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 15வது தேசிய மாநாட்டில் பிரிந்திருந்த அரசியல் தரப்புத் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்று கூட்டி அழகு பார்த்தார்.

செய்தியாளராக இருந்து பெற்ற அனுபவங்களை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்விலும் விளக்கேற்ற பல்சேவையாற்றினார். பிற சமூகமும் விமர்ச்சிக்கா வண்ணம் தனது நிதியொதுக்கீட்டினை இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்து வழங்கினார். வறுமையின் பிடியில் வாழ்ந்த இளைஞர்களை அழைத்து துறைமுகத்தில் தொழில் வழங்கி வாழ்வில் ஒளியேற்றினார். இதன் மூலம் பல் சமூக இளைஞர்களையும் கெளரவித்தார்.
அரசியல், கல்வி, கலை, கலாசாரம், ஊடகம் என பல்துறையில் செயல் வீரனாக விளங்கிய வித்தகனின் உயிர் செப்டெம்பர் 16 இல் அரநாயக்க மலைத் தொடரில் அணைந்தது. முழு இலங்கை முஸ்லிம்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்திய நாள் ஒவ்வொரு செப்டெம்பர் 16 இலும் இறை மீட்கப்படுகிறது. இறைவா அன்னாரின் பிழை பொறுத்து ஜன்னதுல் பிர்தெளஸில் வலம் வர இரு கரமேந்தி பிரார்த்திக்கிறோம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!