August 06, 2011.... AL-IHZAN India News
பயணங்கள் எப்போதுமே அலாதியானவை. புதிய நபர்களின் சந்திப்பு, கலந்துரையாடல்கள் என புது அனுபவங்களை தருபவை. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பேருந்து பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. பேருந்தில் ஏறிய எனக்கு அருகில் அமர இடம் அளித்தார் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர்.
‘மாமா’ என்று அன்புடன் அழைத்து பேச்சை ஆரம்பித்தார். முஸ்லிம்களை இந்த முறையில் அழைப்பது தமிழகத்தில் சில பகுதிகளில் வழக்கம். அவர் யாதவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டு அறிந்து கொண்டேன். தங்கள் கடையில் வேலை செய்த ஒரு முஸ்லிம் குறித்து சிலாகித்து கூறினார். சட்டென்று ‘நீங்கள் எல்லாம் தீவிரவாதிகளாக இருந்தாலும் நல்ல குணம் உள்ளவர்கள்’ என்றார். கேட்டவுடன் எனக்கு பகீரென்றது. ‘என்ன ஐயா, சட்டுனு இப்படி சொல்லிட்டீங்க?’ என்றேன். ‘உண்மையதானே சொன்னேன், உங்க ஆளுங்க செய்யாத காரியமா?’ என்றார் வெகுளியாக...
‘தீவிரவாதிகளும் கெட்டவர்களும் அனைத்து மதங்களிலும் உள்ளனர். ஏன் மதமே இல்லை என்று சொல்பவர்களில் கூட தீவிரவாதிகள் உண்டு தானே’ என்று கேட்டவுடன், ‘ஆமா, சரிதான்’ என்றார். அப்பகுதியில் உள்ள ரவுடிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதை பெயருடன் குறிப்பிட்டவுடன் எனது கருத்தை மேலும் ஆமோதித்தார். தொடர்ந்த எங்களின் உரையாடலில் தீவிரவாதத்திற்கு மதம் என்று எதுவும் கிடையாது என்பதையும் தீவிரவாதிகளும் வழிதவறி சென்றவர்களும் அனைத்து மதங்களிலும் உள்ளனர் என்பதை மேலும் விளக்கினேன். நான் இறங்கும் இடம் வரை எங்களின் உரையாடல் தொடர்ந்தது.
‘தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்’ என்ற விஷம பிரச்சாரம் தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு பாமரனை கூட எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கேள்விகளுக்கும் சோதனைகளுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்களையும் இந்த தவறான எண்ணம் ஆட்கொள்வதுதான் அதிர்ச்சியை அளிக்கிறது.
உளவுத்துறையும் ஊடகத்துறையும் கைகோர்த்துக் கொண்டு செய்யும் இப்பிரச்சாரம் அன்புடன் உறவுமுறை கூறி வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையையும் வெறுப்பையும் ஊட்டுகிறது. பாசத்துடன் பழகி வந்த மக்களை எதிரிகளாக மாற்றும் வேலை வேகமாக நடந்து வருகிறது. முன்னேற்றம் அடைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற முயற்சித்து வரும் நமது நாட்டிற்கு இந்த நிலை அழகல்ல.
இந்த விஷம பிரச்சாரத்தை முறியடிக்க அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். உள்ளத்தில் கடுகளவு இரக்கம் கொண்ட மனிதன் எவனும் தீவிரவாதத்தை அங்கீகரிக்க மாட்டான். அதிலும் ‘எவன் ஒருவன் அநியாயமாக ஒரு ஆத்மாவை கொலை செய்கிறானோ அவன் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் கொலை செய்ததற்கு சமமாவான்’ என்ற குர்ஆனின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் தீவிரவாத்தை எள் முனையளவு கூட ஆதரிக்க மாட்டான். அப்பாவிகளை கொலை செய்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு எவரும் கிடையாது. இதில் முஸ்லிம்களாகிய நாம் உறுதியாக உள்ளோம். இதனை நாம் மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.
மாற்று மத அன்பர்களுடன் பல விஷயங்களை உரையாடும் நாம் ஏனோ இது குறித்து மௌனமாகவே உள்ளோம். முஸ்லிம்கள் மீது பழிபோடப்பட்ட பல குண்டுவெடிப்புகள் யாரால் நடத்தப்பட்டன என்ற உண்மைகள் தற்போது வெளி வர ஆரம்பித்துள்ளன. இந்த செய்திகளையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்கள் காட்டும் அக்கறையை நாம் அதிகமாக விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உலக வரைபடத்தில் நார்வே நாடு எங்கிருக்கிறது என்பதை கூட பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் அறிய மாட்டார்கள். ஆனால் அங்கு குண்டு வெடித்தால், உடனடியாக தங்கள் கற்பனைகளை எழுத்துக்கள் ஆக்கி முஸ்லிம்கள் மீது பழியை தூக்கி வீசுவார்கள். மிகப்பெரும் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களின் இத்தகைய பிரச்சாரங்களை நாம் மறுத்து கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். மாற்று ஊடகத்திற்கான வழிவகைகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும்.
சில முஸ்லிம்களை கண்டெடுத்து அவர்களை தங்களின் இன்பார்மர்களாக உளவுத்துறையும் காவல்துறையும் பயன்படுத்தி வருகின்றனர். சில காலம் சென்ற பிறகு, அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கௌண்டர்களில் கொலை செய்து விடுகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுகின்றனர். இத்தகைய செயல்கள் வட இந்தியாவில் பரவாலாக நடைபெறுகின்றன. சமுதாயம் இது குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மீது வீசப்படும் அவலங்களை எதிர்கொள்வதற்கான அடிப்படை விஷயங்களையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதனை நாம் செய்ய தவறினால் நமது நெருங்கிய நண்பர் கூட நம்மை ஒருவித சந்தேகத்துடனும் அச்சத்துடனுமே எதிர்கொள்வார்.
- ஏர்வை ரியாஸ் -
0 கருத்துரைகள் :
Post a Comment