August 21, 2011.... AL-IHZAN World News
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த மே மாதம் 2-ந்தேதி கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அமெரிக்காவின் “நேவிசீல்” என்ற சிறப்பு அதிரடிபடை பின்லேடன் மீது தாக்குதல் நடத்திய போது அவரது மனைவிகளில் ஒரு வரான அமால் அல்-சதா (28) கேடயம் போன்று மறைத்து தடுத்தார். அப்போது அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
பின்லேடன் கொல்லப்பட்டதும், அவரது மனைவி அமால் அல்-சதாவும் 5 குழந்தைகளும் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்த தகவலை அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார்...
மேலும் அவர் கூறும் போது, எனது சகோதரி பின்லேடனின் மனைவி என்பதை தவிர அவர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. கணவரின் (பின்லேடனின்) எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சராசரி தாய்மார்கள் போன்று தான் தனது குழந்தைகளையும் கணவருடன் இருந்து கவனித்து வந்தார். துப்பாக்கி சூட்டில் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் மறுத்து வருகிறார். ஏனெனில் அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எனவே, எந்த குற்றமும் செய்யாத அமால் அல்- சதாவை பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும். அவரை கைது செய்ததற்காக பாகிஸ்தானை சர்வதேச கோர்ட்டில் நிறுத்துவோம். அவரையும், அவரது குடும்பத்தையும் சீரழித்ததற்காக நஷ்டஈடு பெறுவோம் என்று தெரிவித்தார். அமால் அல்-சதா ஏமன் நாட்டை சேர்ந்தவர். பின்லேடனின் 5-வது மனைவியான இவருக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. 13 ஆண்டுகள் பின்லேடனுடன் வாழ்ந்துள்ள இவர் 5 குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறார்.
0 கருத்துரைகள் :
Post a Comment