animated gif how to

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்கள்!

August 21, 2011 |

August 21, 2011.... AL-IHZAN Local News

முப்பது வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தமிழ் பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழருக்கான தீர்வில் தமது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பிரதான முஸ்லிம் தலைவர்களிடம்  வினவிய போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை  தருகிறோம்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகள் முடங்கிப் போயுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பது பற்றி பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்ற நிலையில், அதனையொரு நல்ல முயற்சியென நான் கருதுகிறேன். அத்துடன், புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதில் அது எந்தளவுக்கு வெற்றியளிக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே வட - கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செறிந்தும், பரந்தும் வாழும் இலங்கை முஸ்லிம்களின் அதிக பட்ச ஆணையைப் பெற்ற அரசியல் கட்சியாகும். இக் கட்சியும், இதன் தலைமைத்துவமும் ஆரம்பம் முதலே தீர்வுத் திட்டங்களில் உரிய பங்களிப்பைச் செய்து வந்திருப்பதோடு, தொடர்ந்தும் இதற்காக குரல் எழுப் பிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க தாகும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் பரிமா ணமும் இன்றியமையாதென்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்துடன் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளி விட்டு எட்டப்படக் கூடிய எத்தகைய தீர்வு முயற்சிகளும் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை யென்றும் அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் கூறி வருகிறோம். மொத்தத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றே முக்கியம் வாய்ந்ததாகும். இந்த மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் மூலம் தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதே யதார்த்தமாகும்.

யுத்தத்தை அன்றும், இன்றும், என்றும் வெறுப்பவன் நான். யுத்தத்தின் விளைவாக, சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத விதத்தில் இங்கு முஸ்லிம் சமூகமும் பெரிதும் பாதிக் கப்பட்டிருக்கிறது; பாரிய உயிர் இழப்புகளையும், உடைமை இழப்புகளையும் சந்தித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தப்பித் தவறி வென்றிருந்தால் தமிழர்களுக்கு நிச்சயமாக ஏதாவது கிடைத்திருக்கும். அதேவேளையில் முஸ்லிம்களுக்கு எதுவுமே கிடைத்திருக்காது. அதேபோல் யுத்தத்தில் அரசு வென்ற போதிலும், தமிழர்களுக்கும் ஒன்றுமில்லை, முஸ்லிம்களுக்கும் ஒன்றுமில்லை என்ற நிலைமை தோன்றினால் அது ஆபத்தானது.

பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்களுடனும், அரசாங்கத்துடனும் நல்லுறவை பேணி வரும் நாம், தமிழ் மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதிலும், தமிழ் தலைவர்களுடன் அதுவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் நெருக்கமாகவும், புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டுமென்பதில் உறுதியானவர்களாக இருக்கிறோம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்கு முறைகள் மற்றும் இனக்கலவரங்களின் விளைவினால் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. அதனால் போராட்டம் ஒன்று வெடித்து மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. தமிழ் பேசும் சமூகம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தது. பல்வேறு இழப்புக்களை சந்தித்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டது. இதன் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டிய தேவைப்பாடு உண்டு. அத்துடன் முழு உலகமும் இதனை வேண்டி நிற்கின்றது. ஆனால் கிடைக்கப் பெறும் தீர்வு தமிழருக்கானது என்று மட்டும் சொல்வதை விட தமிழ் பேசும் மக்களுக்கானது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இந்த யுத்தத்தில் ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பேசும் சமூகம் பாதிக்கப்பட்டதே உண்மை.

தமிழ் மக்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் போன்று முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், கருத்துகள் கணக்கிலெடுக்கப்படாமலோ, இரவோடு இரவாக இன்னுமொரு சிறுபான்மை சமூகத்தைப் புறக்கணித்தோ தீர்வுகள் அமையக் கூடாது என்பதை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

தற்போது இடம்பெறும் அரசு - தமிழ்க் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தையில் கூட தெளிவான தீர்வு முயற்சிகள் ஏதும் வெளிக்கொணரப்படாத நிலை இருந்த போதும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளும் கருத்திற்கெடுக்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

காலத்துக்குக் காலம் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கால சந்தர்ப்பத்துக்கேற்ப தீர்வுத் திட்டம் தொடர்பான வடிவங்கள் பேசப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் தமிழ்த்தரப்பு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி வருகின்றன. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் எமது கோரிக்கைகள் முழு வடிவம் பெறாவிட்டாலும் எமது பிரச்சினைகள் தொடர்பாக முறையாகத் தெரிவிப்போம். நாங்கள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருந்தபோதும் எமக்கும் சம அந்தஸ்து வேண்டும். எமது சமூகம் இந்த முயற்சியில் பாதிக்கப்பட நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எனவே பேச்சு மேசையில் நாமும் சமதரப்பாக இருந்து எமது அபிலாஷைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட நாம் தமிழ் பேசும் சமூகத்துக்காகவே குரல் கொடுப்போம். பாதிக்கப்பட்ட இரு சாராருக்கும் நியாயமான பங்கு கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவோம். தரப்புக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட மூன்று சமூகமும் ஒரே மேசையில் அமர்ந்து பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டுமென்பதே எமது கோரிக்கை.

ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவாகியிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நாம் வரவேற்கின்றோம். ஜனநாயக நடைமுறையில் இது ஒரு நல்ல விடயமே. எனினும் இந்தத் தெரிவுக் குழுவில் இடம் பெறும் தென்னிலங்கை அரசில் சக்திகளின் கருத்துக்களை விட வடக்கு – கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் உள்வாங்கப்பட வேண்டுமென்பதே எமது விருப்பம்.

இனப்பிரச்சினையில் சிக்கியுள்ள மக்களுடைய பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சி முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவான விடயங்களை முன் வைக்கும் வகையிலான பல்வேறு முயற்சிகளை துரிதப்படுத்தி வருகின்றது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!