animated gif how to

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!

August 06, 2011 |

August 06, 2011.... AL-IHZAN News

மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட காதலர் தினமும்(வேலண்டைன்ஸ் டே), பெற்றோர் தினமும் அதுபோல தற்போது பிரபலமாகி வரும் அக்‌ஷய திதியும் விற்பனைக்காக காத்திருக்கும் தினங்களாகும். கல்வித்துறை கூட சந்தைமயமாகிவிட்டது. அனைத்துமே சந்தைமயமாக்கப்பட்டு வரும் காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.
புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும், இறையச்சத்தின் மாதமான ரமலான் வரும்வேளையில் அதுவும் சந்தைமயமாக்கப்படும் சாத்தியம் அதிகமாகும்.பல்வேறு ஆஃபர்களுடன் சந்தை இப்பொழுதே தயாராகிவருகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் இஃப்தார் பார்டிகளின் புக்கிங் துவங்கிவிட்டது. பல்வேறு வீட்டு உபயோக-எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பு சலுகையுடன் விற்பனை தூள் கிளப்புகிறது. அரசியல் கட்சிகளும் இஃப்தார் பார்டிக்காக தயாராகும் வேளை இது.

நோன்பின் உச்சபட்ச நோக்கம் இறையச்சமாகும். இதர சிறப்பு தினங்களைப் போலவே ரமலானையும் சந்தை தன்வசப்படுத்த திட்டமிடுகிறது. பக்தி என்பது விற்பனை பொருளாக மாறிவிடக்கூடாது. பசியையும்,தாகத்தையும் கட்டுப்படுத்துவதோடு தனது ஐம்புலன்களையும் அனைத்து விதமான இச்சைகளை விட்டும், தீயச்செயல்களை விட்டும் பாதுகாத்து மனிதனை மாண்புமிக்கவனாக பண்படுத்தி இறைவனுக்கு அஞ்சும் உண்மையான அடியானாக மாற்றுவதுதான் நோன்பின் லட்சியம் என்றால், சந்தையோ ஊணும், உறக்கமும், பொழுதுபோக்கும், அலங்காரத்தையும், ஆடம்பரத்தையும் நமக்கு போதிக்கிறது.

உலகியல் மோகங்களை கட்டுப்படுத்தும் பக்திரீதியிலான வழிகளை கூட சந்தை சும்மாவிடாது என்பதைத்தான் இவை நமக்கு எடுத்தியம்புகிறது.தொலைக்காட்சி சேனல்கள் இப்பொழுதே நிகழ்ச்சி நிரல்களை தயாராக்கிவிட்டன. இரவின் இறுதிப்பகுதியில் இறைவனிடம் மன்றாடி தனது பாவக்கறைகளை போக்கும் நேரத்தில்தான் தொலைக்காட்சியில் ஸஹ்ர் நேர நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின்றன.இடைக்கு இடையே அவ்வப்போது இசையுடன் கலந்த விளம்பரங்களையும் நாம் காணலாம்.

எவ்வளவுதான் நாம் இவற்றிற்கு நியாயம் கற்பித்தாலும், இழந்த இரவுகளை நம்மால் மீட்டமுடியுமா? என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும். சொற்பொழிவுகளையும், கேள்வி-பதில்களையும் நாம் அவ்வப்போது கேட்கத்தான் செய்கிறோம். இவற்றை பின்னர் பதிவுச்செய்த சி.டிக்களிலும் கேட்கலாம். ஆனால் மீண்டும் இதே ரமலானை நாம் அடையமுடியுமா? அல்லது அடுத்த ரமலான் வரை நமது ஆயுள் நீட்டப்படும் என்பது குறித்த உத்தரவாதம் நமக்கு இருக்கிறதா?

கடைசி 10 தினங்களில்தாம் லைலத்துல் கத்ர் எனும் ஆயிரம் மாதங்களை விட சிறப்பானதொரு இரவு வருகிறது.மஸ்ஜிதுகளில் தனிமையில் அமர்ந்து இறைவனுடனான் நெருக்கத்தை அதிகப்படுத்தும் இத்தினங்களில்தாம் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். முந்தைய நாட்களில் அனைத்து தேவைகளையும் முடித்துவிட்டு ரமலானை அமல்களுக்காக பயன்படுத்துவோம் என்ற சிந்தனை நம்மில் மறைந்துப்போய்விட்டதா? அல்லது மரத்துப்போய்விட்டதா? ஆடம்பரங்கள் மற்றும் வீண்விரயத்தின் மாதமா ரமலான்?

வெறும் பட்டினியாலும், தாகத்தாலும் இம்மாதத்தில் நாம் இறையச்சத்தை பெற முடியுமா? இங்கு நபி(ஸல்…) அவர்களின் பொன்மொழி நமது  சிந்தனையை சீராக்க உதவும்! “எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும் இரவில் நின்று வணங்குபவர்கள் பலர் உள்ளனர்.கண் விழித்திருந்ததை தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை(நூல்:தாரமி).

அ.செய்யது அலீ

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!