July 12, 2011.... AL-IHZAN World News
அரசியல் நெருக்கடியை தணிப்பதற்காக லிபியாவின் கத்தாஃபி அரசு பிரான்சு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் அல்ஜீரிய நாட்டு பத்திரிகையான அல்கபருக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் பிரான்சு இதுத்தொடர்பாக பதிலளிக்கவில்லை. கத்தாஃபி அரசுடன் எதிர்ப்பாளர்களின் குழு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இது என பிரான்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெரார்ட் லாங்க்வெட் கூறி சில மணிநேரங்கள் கழித்து நேற்று ஸைஃபுல் இஸ்லாமின் பேட்டி வெளியானது...
நாங்கள்தாம் எதிர்ப்பாளர்களின் குழுவை உருவாக்கி இருந்தாலும், அவர்களுக்கு ஆயுதமோ பணமோ அளித்து ஆதரிக்கவில்லை என பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி லிபியாவின் அரசு பிரதிநிதிகளிடம் கூறியதாக ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். எதிர்ப்பாளர்கள் குழு நிலைக்காது என சர்கோஸி கூறியுள்ளார்.கத்தாஃபி அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் எதிர்ப்பாளர்கள் குழுவுடன் போர் நிறுத்தத்திற்கு தயாராக நிர்பந்திப்போம் என பிரான்சு அறிவித்துள்ளது.
கத்தாஃபி தோல்வியை தழுவும்வரை எதிர்ப்பாளர்கள் காத்திருக்கக்கூடாது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவேண்டும் என பிரான்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெரார்டு லாங்க்வெட் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கத்தாஃபி பதவி விலக கோரவில்லை. கத்தாஃபி பதவியில் தொடர்ந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்பது எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடாகும். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சனைக்கு பரிகாரம் காணலாம் என லாங்க்வெட் தெரிவித்துள்ளார்.
ஆனால், கத்தாஃபி ராஜினாமாச்செய்யவேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment