animated gif how to

''ரமழான் விடுமுறை இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த அருட்கொடை''

July 12, 2011 |

July 12, 2011.... AL-IHZAN Local  News
முஹம்மத் ஜான்ஸின்
இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. முதலாம் தவணைக்கான விடுமுறை ஏப்ரில் மாதத்திலும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆகஸ்ட் மாதத்திலம் மூன்றாம் தவணைக்கான விடுமுறை டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படுகிறது. முதலாம் தவணைக்கான விடுமுறை மூன்று வாரங்களுக்கு முஸ்லிம் அல்லாத பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இந்த முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படுகிறது. வழங்கப்படாத அந்த ஒரு வார விடுமுறை ரமழான் மாத நோன்பு விடுமுறையுடன் சேர்க்கப்பட்டு 36 நாட்கள் விடுமுறையாக வழங்கப்படுகிறது.

அதே போன்று இரண்டாம் தவணை விடுமுறையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு குறைக்கப்பட்டு ரமழான் விடுமுறையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

ஏனைய பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதத்தில் 4 வாரங்களுக்கு வழங்கப்படுகிறது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் முஸ்லிம் பாடசாலைகளில் மட்டும் பரீட்சைக்காக விடுமுறையொன்று அதிகப்படியாக வழங்கப்படகிறது பரீட்சை நடைபெறாத முஸ்லிம் பாடசாலைகளை இவ்விடுமுறை பாதிப்பதில்லை. இந்த விடுமுறை கூட பின்னர் முதலாம் தவணை அல்லது இரண்டாம் தவணை விடுமுறையில் சரிசெய்யப்பட்டு நோன்பு விடுமுறையுடன் கூட்டப்படகிறது.

2011இல் ஆகஸ்ட் மாதத்தில் நோன்பு வருவதால் இரண்டாம் தவணை விடுமுறை ஏற்கனவே ஆகஸ்டில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இம்மாதத்திலேயே க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறுவதால் இம்முறை விடுமுறைச் சிக்கலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இல்லை. ஏனைய பாடசாலைகளுக்கும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டு மூன்று தினங்களே விடுமுறை ஆரம்பமாகும் தினத்தில் வித்தியாசமுள்ளது. இது ஒரு அலட்டிக்கொள்ளப்பட வேண்டிய விடயமல்ல. 

ரமழான் மாதத்தில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நோன்புடன் பரீட்சை எழுதுவார்கள். இதில் அவர்கள் எந்த சிரமத்தையும் எதிர்நோக்குவதில்லை. ஆனால் இரவு நேர தொழுகைகள் மற்றும் அமல்களைத் தான் பரீட்சை எழுதும் மாணவர்கள் குறைக்க வேண்டியிருக்கும். இது அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையிலுள்ள விடயம். இறைவன் யாவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். எனவே ரமலான் மாதம் பரீட்சை காலங்களில் ஏற்படுமானால் அதனால் பரீட்சையெழுதும் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. இக்கட்டுரையை எழுதும் நான் கூட ரமழான் மாதத்தில் பல பரீட்சைகளை எழுதியுள்ளேன். அம்மாதத்தில் அல்  குர்ஆனை முழுமையாக எனக்கு ஓதக் கிடைக்கும். ஆனால் தராவீஹ் தொழுகையில் சில ரக்கத்துகளையே தொழக் கிடைக்கும். இறைவனின் பேரருளில் நம்பிக்கை வைத்து முடியுமானதை நான் செய்து முடிப்பேன்.

ரமழான் மாதத்தில் உயர்தரப் பரீட்சையோ அல்லது சாதாரண தரப் பரீட்சையோ எழுதாத ஏனைய முஸ்லிம் மாணவர்களுக்கு விடுமுறையளிப்பது பிரயோசனமானது. ஏனெனில் அதிகாலை 3.30 இக்கு எழும்பும் ஒரு தாய் ரமழானில் பாடசாலையிருந்தால் 8  மணிவரை தூங்காது விழித்திருக்க வேண்டியேற்படும். மாணவர்களும் முழித்திருந்து விட்டு பாடசாலை சென்றால் அங்கு தூக்கம் தான் வரும். மேலும் ரமழானில் மாணவர்களாகவிருந்தாலும் யாராக இருந்தாலும் இரவு தராவீஹ் தொழுகை மற்றும் குர்ஆன் ஓதுதல் போன்ற வேலைகளில் நேரத்தை செலவழிக்க வேண்டிவரும். 

அக்காலத்தில் பாடசாலைகளை வைத்தால் பாடசாலையில் வழங்கப்படும் வீட்டுவேலை போன்றவற்றை செய்யவேண்டி ஏற்பட்டால் இரவு அமல்களைச் செய்ய முடியாது. அதே போன்று தாய்மாருக்கு தமது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான வீட்டு வேலைகளை கவனிப்பதா அல்லது நோன்பு திறத்தல் இரவுச் சாப்பாடு மற்றும் சஹர் உணவு தயாரித்தல் போன்றவற்றைச் செய்வதா என்ற குழப்ப நிலை தோன்றும். ரமழானில் பாடசாலை நடைபெற்றால் தாய்மாருக்கு தமது அமல்களைச் செய்யவோ அல்லது குர்ஆன் ஓதவோ நேரத்தை ஒதுக்குவது  சிரமமாக இருக்கும்.   

இந்த ரமழான் விடுமுறை மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஆசிரியர்கள் தாய் தந்தையர் போன்ற அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இது இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த அருட்கொடையாகவுள்ளது. 

தற்போது இதற்கெதிரான குரல்கள் எழும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ரமழான் மாத விடுமுறை அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆகஸ்டிலேயே ஏற்பட இருப்பதால் அக்காலத்தில் லீவை ரத்துச் செய்யும் திட்டம் காலத்துக்கு ஒவ்வாததாகவுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழுந்திருப்பதன்  பின்னால் வேறு ஏதும் திட்டங்கள் இருக்குமோ தெரியவில்லை. நாம் ரமழான் மாத விடுமுறைத் திட்டத்தை 1942ஆம் ஆண்டு முதல் அனுபவித்து வருகின்றோம். அதனால் முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கிவிட்டதாக புள்ளிவிபர தகவல்கள் ஏதும் இதுவரையில்லை. எனவே சில முஸ்லிம்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை முஸ்லிம் சமூகத்தின் கருத்தாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இஸ்லாம் பெயரளவிலுள்ள மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கையை ஒப்பு நோக்குவது சாலச்சிறந்ததல்ல.  
 
முஸ்லிம் பாடசாலைகளில் ரமழான் மாத விடுமுறை தொடர்ந்தும் நடைமுறையிலிருக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!