animated gif how to

லிபியா விவகாரம் - மத்தியஸ்தம் வகிக்க ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு

June 12, 2011 |

June 12, 2011.... AL-IHZAN Local News
லிபிய நெருக்கடியை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் கடாபியுடனும், கிழக்கு லிபிய கிளர்ச்சியாளர்களுடனும் பேச்சு நடத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த முன்வருமாறு ரவூப் ஹக்கீமிடம் அவரைச் சந்தித்த லிபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கத்தின் இலங்கை பிரதிநிதி தரிக் அலீஷ் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கடாபிக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி லிபியாவில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான பேச்சில் மத்தியஸ்தம் வகிப்பதைப் பொறுத்தவரை அதற்குத் தாம் தயாரென்றும், ஆனால் தற்போதைய உலகளாவிய அரசியல் சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு ஏற்படுவது சாத்தியமாகுமென தாம் நம்பவில்லையென்றும், அந்த விடயத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாமென்றும் அமைச்சர் ஹக்கீம் பதிலளித்தார்.....

லிபியத் தலைவர் கடாபிக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடை யில் ஏற்பட்டுள்ள மோதல் உக்கிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கத்தின் இலங்கைப் பிரதிநிதி தரிக் அலீஷ் சனிக்கிழமை பிற்பகல் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

லிபியாவில் ஏற்பட்டுள்ளதை போன்ற ஒருவிதமான வெளிநாட்டுத் தலையீடு இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இங்கு இராணுவ தலையீடாக அன்றி, அது இராஜதந்திர தலையீடாகவே காணப்படுவதாகவும் லிபியப் பிரதிநிதியிடம் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

கேர்ணல் கடாபி பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்ட, வறிய, நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு நிறைய நிதியுதவிகளையும், ஏனைய உதவிகளையும் வழங்கியிருப்பதாகவும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அவரால் இயன்ற அனைத்து பங்களிப்புகளையும் செய்திருப்பதாகவும் இறைவனின் புறத்திலிருந்து அவருக்கும் லிபியாவுக்கும் பாதுகாப்பும், அருளும் கிட்ட வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

தற்பொழுது லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைப் பொறுத்தவரை அரபு நாடுகள் மெளனம் சாதிப்பதாகவும், ஆபிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட சில ஆபிரிக்கக்கண்ட நாடுகளைத் தவிர பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் லிபியாவை ஆதரிப்பதாகவும் உலக இஸ்லாமிய அழைப்பு இயக்க பிரதிநிதி கூறினார்.

News: Yarlmuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!