animated gif how to

கேபிள் டி.வி. வியாபாரத்தை பெருக்குவதற்காகவே இலவச கலர் டி.வி. திட்டம்

June 11, 2011 |

June 11, 2011.... AL-IHZAN India News
கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் கேபிள் டி.வி. வியாபாரத்தை பெருக்குவதற்காகவே, முந்தைய திமுக ஆட்சி இலவச கலர் டி.வி. திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்னும் விநியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள, 1.27 லட்சம் கலர் டி.வி.பெட்டிகள் அனாதை இல்லங்கள், பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


சட்டப்பேரவையில் கவர்னர் உரையின் மீது கடந்த நான்கு நாட்களாக நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, இலவச கலர் டி.வி. திட்டம் பற்றி கூறியதாவது:......
திமுக அரசு ஆறாவது முறையாக 10 லட்சம் டி.வி. பெட்டிகளை விநியோகம் செய்ய முடிவு செய்தது. இதில்7.48 லட்சம் பெட்டிகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றை கொள்முதல் செய்வது ரத்து செய்யப்படுகிறது.


ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு, இன்னும் விநியோகிக்கப்படாமல் உள்ள, 1.27 லட்சம் கலர் டி.வி.பெட்டிகள் அனாதை இல்லங்கள், பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள் அனைத்தும் ஊழலை அடிப்படையாகக் கொண்டவை. அதற்கு இலவச டி.வி. திட்டம் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு டி.வி. பெட்டியின் சராசரி விலை ரூ.2265 என்றால், திமுக அரசு விநியோகித்துள்ள 1.64கோடி  டி.வி.பெட்டிகளின் விலை ரூ.3687.10 கோடி ஆகிறது.


கேபிள் டி.வி. இணைப்பு வியாபாரத்தில் கருணாநிதியின் குடும்பத்தினரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பேரன் துரை தயாநிதி ஆகியோர் கோலூச்சியுள்ளனர். இவர்களுக்கு பொது மக்கள் கேபிள் கட்டணமாக ஆண்டிற்கு ரூபாய் 4000 கோடி செலுத்துகின்றனர். பொதுமக்கள் பணம் ரூ.3687 கோடி செலவு செய்ததன் மூலம், கருணாநிதி அவரது குடும்பத்தினர் ஆண்டிற்கு ரூ.4000 கோடி வருமானம் பெற உதவியுள்ளார்.


இலவச கலர் டி.வி.வழங்கப்படுவதற்கு முன் எத்தனை பேரிடம் கலர் டி.வி.பெட்டிகள் இல்லை என்று கணக்கெடுப்பு எதையும் முந்தைய அரசு எடுக்கவில்லை.  கலர் டி.வி. இல்லாத வீடுகள் மட்டுமே இலவச டி.வி. பெறுவதற்கு தகுதியானவை என்று அரசு உத்தரவில் குறிப்பிட்டிருந்தும், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் டி.வி. பெட்டி வழங்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது.


2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ் நாட்டில் வசிக்கும் 1.42 கோடி குடும்பங்களில் 56 லட்சம் குடும்பங்கள் டி.வி. பெட்டி வைத்துள்ளனர். எவ்வாறாயினும் கலர் டி.வி.பெட்டி வைத்திருப்பவர் பற்றிய புள்ளிவிபர கணக்கெடுப்பு  எடுக்கப்படவில்லை.


இதில் பாதி குடும்பங்களிடம் டி.வி. பெட்டி இல்லை என்று வைத்துக்கொண்டாலும், திமுக அரசு விநியோகித்துள்ள 1.64கோடி  டி.வி. பெட்டிகளும் இல்லாதவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுப்பினர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!