June 06, 2011.... AL-IHZAN India News
"பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் தொடரவேண்டாம் என்பதற்காகத்தான் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதேயொழிய வேறு காரணங்களுக்காக அல்ல" என்று திமுக தலைவர் எம். கருணாநிதி நேற்று திருவாரூரில் கூறியுள்ளார்.
நேற்று இரவு திருவாரூரில், தன்னை எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டதில் கருணாநிதி பேசியபோது, பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய தலைமைச் செயலகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடர்வது என்று பலர் தன்னிடம் கேட்டதாகவும், அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டது என்றும், தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மரியாதை செய்யும் விதமாக புதிய கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறினார். மேலும் அவர் பேசும்போது, "தமிழ் மொழியின் புகழை உலகெங்கும் எடுத்துச் செல்வது புதிய அரசின் குறிகோள் என்று ஆளுநரின் உரையில் சொல்லப்பட்டது. ஆனால், அரசின் செயல்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கின்றன........
தமிழ் செம்மொழி மையம் மாற்றப்பட்டுள்ளது. செம்மொழி தமிழ் நூலகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்கா என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை" என்று கூறினார்.மேலும் அவர், "திமுக அரசு குடிசைகளை மாற்றி, கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 21 லட்சம் வீடுகள் இத்திட்டத்தில் கட்டப்படவிருந்தன. ஆனால், இத்திட்டம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. ஏன் கைவிடப்பட்டது என்று ஏழை நிச்சயமாக ஆச்சரியப்படுவான்.
விவசாய பம்புசெட்டுகளுக்கு, இலவச மின்சாரத் திட்டத்தை திமுக அரசு அமுல் படுத்தியது. இடையில் மின் வினியோகம் செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. மக்கள் இலவச மின் வினியோகத்தை எண்ணிப்பார்த்து, மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டுமே அல்லாது வெளியேற்றியிருக்கக்கூடாது" என்று பேசினார்.
முன்னாதாகப் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, இ.வி. வேலு, பரிதி இளம்வழுதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, சிவா ஆகியோர், புதிய அரசு தலைமைச் செயலகத்தை மாற்றியதைப் பற்றியும், சமச்சீர் கல்வி மற்றும் கான்கிரீட் வீடு ஆகிய திட்டங்களைக் கைவிட்டதற்கும், கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், திமுகவின் தோல்வி தற்காலிகமானது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறினர். கூட்டத்தில் கருணாநிதியின் மகள் செல்வியும், மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், ஏகேஎஸ். விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உரையின் இறுதியில் கருணாநிதி, திகார் சிறையிலுள்ள அவரது மகள் கனிமொழிக்கு ஆதரவாகப் பேசினார். "எனக்கு மகளாகப் பிறந்தது ஒன்றுதான் கனிமொழியின் தவறு. அவள் ஏதாவது தவறு செய்திருந்தால் அது நான் செய்த தவறே அன்றி அவள் செய்தது அல்ல. அவள் மறுத்தபோது கூட, நான்தான் அவளைக் கலைஞர் டிவி -க்குப் பங்குதாரர் ஆக்கினேன். அவளுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நான் செய்தேன். ஆனால், கம்பெனியில் நடந்த குறைக்கு, அவள் விலையாகியிருக்கிறாள். இப்பொழுது திகார் ஜெயிலில் கஷ்டப்படுகிறாள். ஒரு பூவை திகார் சிறையில் வைத்தால் அது வாடிவிடும். திகார் ஜெயிலின் உஷ்ணம் அப்படி." இவ்வாறு கருணாநிதி பேசினார்.
எப்படியிருப்பினும், தானும், மகள் செல்வியும் திகார் ஜெயிலில் சந்தித்துப் பேசுகையில், "கஷ்டங்களைச் சந்தித்து, சுத்தமானவளாக வெளிவருவேன்" என்று கனிமொழி கூறியதாக கருணாநிதி கூறினார். மேலும், "கனிமொழிக்கு திராவிட இயக்கம் கொடுத்துள்ள துணிவை இது காட்டுகிறது" என்றார்.
மேலும் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தன் குடும்பத்தைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடுவதாகச் சாடினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment