May 31, 2011.... AL-IHZAN World News
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் வந்த விமானம் இந்தியாவுக்கு வரும் வழியில் ஈரான் மீது பறக்க வழங்கியிருந்த அனுமதியை திடீரென ஈரான் திரும்பப் பெற்றது. இதனால் அனுமதி கிடைக்கும்வரை சுமார் 2 மணி நேரம் துருக்கி நாட்டை அந்த விமானம் சுற்றிக் கொண்டிருந்ததால் அவரது இந்தியப் பயணம் மிகவும் தாமதமானது.
இது இந்தியப் பயணத்தின் அசாதாரணமான தொடக்கம் என ஜெர்மன் அதிபர் மெர்கலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானம் பறக்க ஈரான் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் தில்லிக்கு வருவது தாமதமானது என அவர் கூறினார்.
ஈரான் நாட்டின் மீது பறக்க முன்னதாக அந்த நாடு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் ஈரானைச் சென்றடைவதற்கு சற்றுமுன்பாக திடீரென அனுமதிக்க மறுத்துவிட்டது என மெர்கலுடன் பயணம்செய்த.... ராய்ட்டர் நிறுவன செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.மெர்கலுடன் பயணம் செய்த ஜெர்மன் குழுவினர் இதை ஒருங்கிணைப்புக் கோளாறு எனத் தெரிவித்தனர். அந்த விமானத்தில் தொழில்துறைப் பிரமுகர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர்.
இதனிடையே ஜெர்மன் அதிபரை அனுமதிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க பெர்லினில் உள்ள ஈரான் தூதருக்கு ஜெர்மன் சம்மன் அனுப்பி உள்ளது.
அதிபரின் விமானம் பறக்க தடைசெய்த விவகாரம் முற்றிலும் ஏற்கக்கூடியதல்ல. ஜெர்மனி மீது மரியாதை இல்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் குய்டோ வெஸ்டர்வில்லி தெரிவித்தார்.
இதேவேளை ஜேர்மன் பல பொருளாதார தடைகளை இரான் மீது விதித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment