March 26, 2011.... AL-IHZAN World News
அரசுக்கெதிரான போராட்டம் உக்கிரமடைந்துள்ள யெமனில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடந்த பிரம்மாண்ட பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்.
எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆதரவாளர்களும் பேரணி நடத்தியதால் ஸன்ஆ நகரில் மோதல் சூழல் உருவானது.
அரசுக்கு எதிரான எதிர்ப்பாளர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஸாலிஹ் அரசு ராஜினாமாச் செய்யும்வரை ஓயமாட்டோம் என பிரகடனப்படுத்தியவாறு வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடந்தது.
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் ராணுவ யூனிட்டும் வீதியில் இறங்கியதைத் தொடர்ந்து யெமனில் உள்நாட்டுப்போர் உருவாகிவிடுமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
யெமன் ராணுவத்தில் பிரபல நபரான ஜெனரல் அல் முஹ்ஸினும், இன்னும் சில ஜெனரல்களும் ஏற்கனவே எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வியாழக்கிழமை இரவு கிழக்கு யெமனில் அல் மாஃபிர் நகரத்தில் திரண்ட 200க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களும் பாதுகாப்பு படையினரும் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
பிப்ரவரி 11-ஆம் தேதிக்குப் பிறகு ஏராளமானோர் அரசுக்கெதிரான போராட்டத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment