February 02, 2011.... AL-IHZAN Local News
சேனாநாயக சமுத்திரம் என அறியப்படும் இங்கினியாகல குளம் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இன்று திறந்து விடப்படும் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எமக்குக் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலக உயர் அதிகாரி ஒருவர், அதிகளவில் ஏற்பட்ட மழை வீழ்ச்சி காரணமாக இக்குளம் சேமிக்கக்கூடிய உச்ச அளவை தாண்டி விட்டிருப்பதால் திறந்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் 80 அடி உயரமுடைய இக்குளம் உன்னிச்சைக் குளத்தை விட 50 அடிகள் உயரம் கூடியதாகும். இக்கினியாகல மின் உற்பத்தித் திட்டத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கான நீர்ப்பாசனத்துக்கும் இக்குளம் பயன்படுகிறது.
முதற்கட்டமாக 50,000 கன அடி நீர் இன்று திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாடசாலைகள் இவ்வறிவித்தலையடுத்து மூடப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளும் மட்டக்களப்பு சில பகுதிகளும் இதன் காரணமாக நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது கிடைத்த தகவலின் படி இக்குளத்தின் அணைக்கட்டின் 5 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், 1 அடி உயரமான நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனக் கால்வாய்களினூடாகப் பாய்ந்து வரும் நீர் வயல் பிரதேசங்களையும் கரையோர மற்றும் தாழ்ந்த பிரதேசங்களையும் பாதிக்கும் என தெரிகின்றது. இன்னும் (பி. ப. 1:45) கரையோரப் பகுதிகளை நீர் எட்டவில்லை ஆயினும் சில பகுதிகளில் இரண்டு மூன்று அடிகள் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மலை நாட்டுப்பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையே இவ்வாறான நீர்மட்ட அதிகரிப்புக்கு காரணம் எனவும் மன்னம்பிட்டிப் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டு பாதை தடைப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது.
News: kattankudy.info
0 கருத்துரைகள் :
Post a Comment