அமெரிக்காவினதும்
இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத
பார்வையாளர் அந்தஸ்தினை பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.
193 நாடுகளில்
பலஸ்தீனுக்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
நேற்று
நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி
மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீனை அங்கீகரித்து அதற்கான பிறப்புச்
சான்றிதழை வழங்குவதற்காக வாக்களிக்குமாறு சகலரிடமும் வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார் .
பலஸ்தீனுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரமானது, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம், காஸா பள்ளத்தாக்கு என்பன பலஸ்தீனின் நிர்வாகத்திற்குட்பட்ட
பகுதிகளே என்பதற்காக மறைமுக அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் பலஸ்தீன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஐ.நா. முகவர்
நிறுவனங்களுடனும் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, செக் குடியரசு, மார்ஷல் தீவு, மிக்ரோனேசியா, நாஉரு, பலாஉ, பனாமா ஆகிய 9 நாடுகளே பலஸ்தீனுக்கு எதிராக வாக்களித்தவையாகும்.
பலஸ்தீனுக்கு ஐ.நா.வில் உறுப்பு நாடல்லாத பார்வையாளர்
அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு பாரிய மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள்
இடம்பெற்று வருகின்றன. மக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப் பாடியும் பலஸ்தீன கொடிகளை
அசைத்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறுவதை முன்னிட்டு
பலஸ்தீனிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பலஸ்தீனுக்கு ஆதரவான பாரிய பேரணிகள்
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment