-ஜெஸா-
கொழும்பு மாவட்ட
முஸ்லிம்களின் கல்வி குறித்த கவனஈர்ப்பு முக்கிய தலைப்பாக கடந்த சில வருடங்களாக
பதிவாகி வருகின்றது.
கொழும்பு மாவட்ட
முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் கல்விக்குமிடையில் காணப்படும் மிக
நெருங்கிய பிரதிபலிப்பு மற்றும் அதனுடன் இணைந்தாக எழும் பல்வேறு சவால்கள் குறித்த
ஆய்வுகளும் மாநாடுகளும் நடைபெற்றன. இனங்காணப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும்
வகையிலான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
எனினும்
கொழும்பு முஸ்லிம்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை
என்பதற்கான பல்வேறு சுட்டிகளில் ஒன்றாக அண்மையில் வெளியிடப்பட்ட தரம் ஐந்து
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை அடையாளப்படுத்தலாம்.
தரம் ஐந்து
புலமைப் பரிசிற் பரீட்சை பெறுபேறுகள் என்பது பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை
மதிப்பீடு செய்வதற்கான மிகச்சிறந்த குறிகாட்டியாக அமையாத போதிலும் தரம் 1-5 வரையான வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயன்முறை மற்றும் வேலைத்திட்டங்களின்
அடைவு மட்டம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான கருவி இதனை விட வேறொன்று இருக்க
முடியாது.
குறிப்பாக
கொழும்பு மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்கள்
மற்றும் பாடசாலை சமூகம் பெற்றோர் காட்டும் அக்கரை, ஈடுபாட்டிலிருந்து
இதற்கான முக்கியத்துவத்தினை அளவிட்டுக்கொள்ளலாம்.
கொழும்பு
மாவட்டத்தில் 19 முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன.
ஸாஹிறாக் கல்லூரி மற்றும் முஸ்லிம் மகளிர் கல்லூரிகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் மாணவர்களின் பொற்றோர்
தமது பிள்ளைகளை பிரபலமான பாடசாலைகளுக்கு அனுமதி பெற்றுச் செல்லும் நடைமுறை குறித்த
குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும்
தனது மாணவர்கள் மிகச் சிறப்பாக சித்;;தியடைய வேண்டும்
என்பதை இலக்கு வைத்தே உழைக்கின்றனர்.
பாடசாலைச்
சமூகம் மிகத் தீவிரமாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்ந்த
மட்டத்தில் பேணுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. சில பாடசாலைகள் தரம் 5 வரையான வகுப்பறைகளுக்கான திட்டங்கள் மீது லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றோர்
மற்றும் தனவந்தர்கள் பழைய மாணவர்களிடமிருந்து திரட்டி செலவிட்டுள்ளனர். மேலதிக
வகுப்புகளுக்கான பிரபலமான பாடசாலைகளின் ஆசிரியர்களின் மேலதிக வகுப்புக்கள் ஓழுங்கு
செய்யப்படுகின்றன.
கொழும்பு மாவட்ட
முஸ்லிம் பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்
தரம் முதலானவற்றின் பெறுபேறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பல்வேறு
எச்சரிக்கை மிக்க செய்திகளை வழங்கின.
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்
பரிசில் பரீட்சை பெறுபேறுகள்,
கொழும்பு மாவட்ட
முஸ்லிம் பாடசாலைகள் குறித்து சமூகத்தின் முழுக் கவனமும் குவியவேண்டியதன்
அவசியத்தையும் அவசரத்தையும் வேண்டி நிற்கின்றன. அட்டவணையை பார்க்க.
மாணவர் தொகை
அடிப்படையிலும் வரலாற்றுத் தொன்மை,
அமைவிடம் முதலான
இதர அம்சங்களினூடாகவும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும் கொழும்பு 12 ஹமீத் அல் ஹுஸைனி தேசிய பாடசாலை, மருதானை
கைரிய்யா மகளிர் கல்லூரி, பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி, மருதானை ஸாஹிறாக் கல்லூரி,
மாளிகாவத்தை
தாருஸ் ஸலாம் முஸ்லிம் வித்தியாலயம் முதலாவற்றில் பரீட்சைக்கு தோற்றியவர்களின்
எண்ணிக்கைக்கும் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கைக்குமிடையே ஒப்பிட்டுக்கூட
பார்க்க முடியாத அசாதாரண நிலை காணப்பபடுகின்றது.
ஹமீத் அல்
ஹுஸைனி தேசிய பாடசாலை, தாருஸ் ஸலாம் மு.வி ஆகியவற்றில் தலா 135 மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் ஒருவரேனும் சித்திடையாதவில்லை என்பதும் ஒரு
சாதாரண செய்தியாகிவிட்டது.
ஆனால், இப்பாடசாலைகள் இரண்டிலும் தரம் 5 வரையான
வகுப்புக்களுக்கு தொடராக கடந்த நான்கு ஆண்டுகளாக விஷேட செயற்திட்டங்கள் பாடசாலை
சமூகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. பழைய மாணவர்கள், பாடசாலை ஒத்துழைப்புக்கும் உதவிக்குமான பல்வேறு அமைப்புக்களின் ஊடாக பாடசாலையை
கட்டியெழுப்ப மிகத்தாராளமாக செலவிடுகின்றனர். வேறு எந்த பாடசாலைகளையும் விட
இவ்வமைப்புக்கள் தீவிரமாக இங்கு செயற்படுகின்றன.
இதர
பாடசாலைகளில் அல் அமீன் வித்தியாலயம், அல் ஹிஜ்ரா
மு.வி. என்பன அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகளாகும். அமைவிடம் மற்றும்
குறைவடைந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை முதலான காரணங்களினால் இப்பாடசாலைகள்
இரண்டும் மூடப்படுவதற்கான அச்சுறுத்தல் நிலவுகின்றது. மூடப்படாமல் பாடசாலையை
தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலான
பாடசாலைகளில் கடந்த பல வருடங்களாக இதனை ஒத்த நிலையே காணப்படுகிறது என்பதும்
கவனத்திற்குரியது.
பாடசாலைக்
கட்டமைப்பு, மற்றும் சமூக சூழல் என்பன தரம் ஐந்து புலமைப்
பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை மிக தீவிரமான தயார்படுத்தல்களில் ஈடுபத்தும்
அதேவேளை மறுபக்கம் பெறுபேறுகள் மேலும் மேலும் தீவிரமாக வீழ்ச்சி நிலையையே
காண்பிக்கின்றன.
கொழும்பு மாவட்ட
முஸ்லிம் பாடசாலைகள் அனைத்திற்கும் ஒருசில பொதுவான இயல்புகளும் காரணங்களும்
காணப்பட்டாலும் கூட அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் பெறுபேறு இந்தளவுக்கு
குறைவதற்கான காரணங்கள் என்ன என்பதே இங்கு எழும் வினாவாகும்.
பாடசாலை
அபிவிருத்தி என பாடசாலை சமூகம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கும் கற்றல்
கற்பித்தலுக்கான மேலதிக வகுப்புகள் வழிகாட்டல்கள் மாணவர்களின் பெறுபேறுகளில் ஏன்
தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதும்; தவிர்க்கமுடியாத
வினாவாகும்.
கடந்த பல
வருடங்களாக பாடசாலை அபிவிருத்தி மீது முதலிடப்பட்ட முயற்சிகளும் நேரமும் செல்வங்களுக்குமான
பிரதிபலன்தான் என்ன?
எனவே எங்கோ
அடையாளம் காணப்படாத கோளாறு அல்லது கோளாறுகள் பாடசாலைக் கட்டமைப்பினுள்ளும்
செயற்திட்ட நடைமுறை மீதும் காணப்படுகின்றன.
இந்த
பின்னணியில் பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்கள்
மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த உள்ளர்ந்த சுய மதிப்பீட்டினை ஒவ்வொரு
பாடசாலைகளும் அவற்றுடன் தொடர்பான அமைப்புக்களும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சனையின்
மையப்புள்ளி எது என்பதை நோக்கிய நகர்வுகளும் தேடல்களும் கட்டாயமாக மேற்கொள்ளப்படல்
வேண்டும்.
அபிவிருத்தித்
திட்டங்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் மேற்கொள்ளும்
செலவீனங்கள் என்பன விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவுகளின் படி துறைசார்ந்தவர்களின்
வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அபிவிருத்தி எனும் பெயரில் சமூக
தனவந்தர்களின் நன்கொடைகளும் ஏழைப் பெற்றாரின் வருமானங்;களும் வீணான திட்டங்கள் மீது செலவிடப்படுவது அநியாயமாகும்.
இதற்கு
மேலதிகமாக கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் ஒவவொன்றிலும் இயங்கும்
அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒரே வழிகாட்டலின் கீழ் கொண்டுவர
முயற்சி செய்யவேண்டும். அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பு முயற்சிகளுக்கான பரஸ்பர
ஒத்துழைப்பையும் அனுபவப் பரிமாறல்களையும் மேற்கொள்வதன் மூலம் வினைத்திறன் மிக்க
அபிவிருத்தியினை நோக்கி நகரலாம்.
கொழும்பு மாவட்ட
முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த
வேண்டிய திட்டங்கள் குறித்தும் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்தும் அவற்றை முகாமைசெய்தல் மற்றும்
மதிப்பீடு செய்தல் முதலான நடவடிக்கைகளையும் கண்காணித்தல் வேண்டும். இச்செயன்
முறைக்கான தொழிநுட்ப ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஒன்றினைக்கும் வண்ணம்
அனைத்துப் பாடசாலைகளினதும் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆய்வாளர்கள்
அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய கட்டமைப்புபொன்று தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment