-மூதூர் முறாசில்-
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளினதும்
ஒப்புதலைப் பெற்றநிலையில் பாராளுமன்றம்
செல்ல விருக்கும் ஓரு சட்டமூலம்தான் திவிநெகும சட்டமூலமாகும். இச்சட்டமூலம் கிழக்கு
மாகாண சபையில் வெற்றி பெற்றபோதும்
சிறுபான்மை மக்களின் அபிலாசைகள்
தோல்வியுற்றதாகவே பலரும் கருதுகின்றனர்.
எனினும், இச்சட்ட மூலத்தை
பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ்
திவிநெகும அபிவிருத்தி தினைக்களம் என்னும் புதிய திணைக்களமொன்று
உருவாக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் சமூர்த்தி அதிகார சபை, தென்மாகாண
அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை முதலான நிறுவனங்களை
ஒன்றிணைத்தே இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது.
வறுமையை ஓழிப்பதற்கும் சமூக ஒப்புரவை
உத்தரவாதமளிக்கும் சமூகமொன்றை உருவாக்குவதற்கும் தேவையான செயற்பாடுகளை
நிறைவேற்றுதலே இத்திணைக்களத்தின் முதன்மையான குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம்
அமைக்கப்படுகின்ற போது சமூர்த்தி அதிகார சபை உள்ளிட்ட அதிகார சபைகளின் 27000 ஊழியர்களை விதவைகள், அனாதைகள்
ஓய்வூதியத்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விடயம்
ஏனையவர்களைக் காட்டிலும் குறித்த ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியேயாகும்.
ஆனால், இச்சட்டமூலம் பற்றி சாதகமாகவும்
எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு விமர்சனம்
செயப்பவர்களில் சிலர் குறித்த சட்டமூலத்தை வாசித்துப் பார்க்காது அல்லது நாடு நகர
திட்டமிடல் சட்டமூலத்தை மனதில் இருத்தி கருத்துக்கூறுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்தையும்
திவிநெகும சட்டமூலத்தையும் எடுத்து நோக்குகின்றபோது இரண்டு சட்ட மூலங்களும்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து வௌ;வேறு தரப்பினரால்
நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதும் குறித்த சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றுவதற்கு முன்பு அனைத்து மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெறவேண்டுமென நீதி
மன்றத்தினால் கூறப்பட்டதும் இவ்விரண்டு சட்ட மூலங்களுக்கும் ஏற்பட்ட
தலைவிதியாகும்.
நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்தை
முன்னைய மாகாணசபை நிராகரித்ததன் மூலம் அச்சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு
செல்ல முடியாது வலுவிழந்து சென்றது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மையினருக்கு
எதிர்காலத்தில் ஏற்படவிருந்த ஆபத்தொன்று நீங்கியதாகவே பலரும் நினைத்தனர்.
அதுபோலவே தற்போது
விமர்சனத்திற்குள்ளாகி வரும் திவிநெகும அபிவிருத்தி திணைக்கள சட்டமூலமும்
உருவெடுத்துள்ளது. இச்சட்மூலத்தைப் பொருத்தமட்டில் மாகாண அதிகாரத்தில் ஓரளவு
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகின்ற போதும் இதில் 'தெளிவாக' குறிப்;பிடப்படாதுள்ள
மேலும் சில விடயங்கள் சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம் என்பதே
இங்கு கவனத்திற்குரிய ஒன்றாகும்.
அந்தவகையில் பார்க்கின்றபோது இச்சட்டமூலத்தில்; பிரிவு 8 (1) இல் அமைச்சர்
நிர்வாக வலயங்களை தாபித்தல் சம்பந்தமாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'அமைச்சர், வர்த்தமானியில்
வெளியிடப்படும் கட்டளை மூலம் இச்சட்டத்தின் ஏற்பாடுகளினது பயனுள்ள மற்றும் தகுந்த
செயற்படுத்துகையை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக முழுத்தீவையும் மேவுகின்றதாக, இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட மாவட்டங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை ஒன்றிணைக்கின்ற நிர்வாக
வலயங்களைத் தாபிக்களாம்' என்று.
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் இச்சட்ட ஏற்பாட்டின் மூலம்
திருகோணமலை மாவட்டத்தை பொலநறுவை மாவட்டத்தோடோ அல்லது அநுராதபுர மாவட்டத்தோடோ
அல்லது வேறு மாவட்டத்தோடோ இணைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது.
அத்தோடு, திவிநெகும
சட்டமூலத்தில் பிரிவு 45 இல் 'இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் எழுத்திலான வேறு ஏதேனும்
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் அல்லது ஒவ்வாமை இருக்கும்
பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளே மேலோங்கி நிற்றல் வேண்டும்' எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாம் மேலே உதாரணத்தில் கூறியவாறு மாவட்டங்களை
ஒன்றிணைக்கின்ற நிர்வாக வலயங்களை உருவாக்குகின்றபோது அது நடைமுறையில் இருக்கின்ற
சட்டத்திற்கு முரணாக இருக்குமெனில் அதனை கவனத்தில் கொள்ளவேண்டிய
அவசியத்தையும் இச்சட்டமூலம் இல்லாமற் செய்துள்ளது.
மேலும் திவிநெகும சட்டமூலமானது
இரகசியத்தின் வெளிப்படுத்துகை சம்பந்தமாகவும் பிரிவு 38 இல்
குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி அமைக்கப்படவுள்ள திவிநெகும அபிவிருத்தித்
திணைக்களத்தின் பணிப்பாளர்கள்,அலுவலகர்கள், சேவையாளர்கள் அனைவரும் அவர்களது கடமைகளில் பிரவேசிக்கும் முன்னர்
திணைக்களத்தின் தொழிற்பாடுபற்றிய எல்லா விடயங்கள் தொடர்பிலும் கண்டிப்பான
இரகசியத்தை பேணும் ஆவணத்தில் கையொப்பமிடுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விரகசியம் பேணும் விடயத்தோடு நாம்
மேலே உதாரணத்தில் கூறியவாறு மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக அலகொன்றை
உருவாக்கினால் அல்லது உருவாக்கப்படுகின்ற அவ்வாறான நிர்வாக அலகில் இணைக்கப்படும்
மாவட்டங்களில் ஒன்றுக்கு திட்டமிட்ட பாரபட்சம் இடம்பெறுவதாக இருந்தால்கூட அதுவும்
இரகசியமாகப் பேணப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறாகப் பார்க்கின்றபோது
சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் இச்சட்டமூலத்திற்கும் முன்பு
தோற்கடிக்கப்பட்ட நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்திற்கும் இடையில் இருப்பு
மற்றும் உரிமை சம்பந்தப்பட்டவிடயத்தில் பெரிதாக வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.
இது ஓரு புறமிருக்க, 1978ஆம் ஆண்டின் இலங்கை
குடியரசு யாப்பில் 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரத்தில்
பல்வேறு விடயங்களில் திவிநெகும சட்டமூலமானது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மாகாண
சபைகளின் அதிகாரப்பட்டியலில் இச்சட்டமூலமானது குறைந்தது 15 விடயங்களில்
செல்வாக்குச் செலுத்துகின்றது. சொல்லப்போனால் இச்சட்டமூலமானது குறித்த
திணைக்களத்தோடு சம்பந்தப்பட்ட அமைச்சரை அரசனாக்கும் வேலைத்திட்டம் ஒன்றேயாகும்.
ஆனால், இச்சட்டமூலமானது அனைத்து மாகாண
சபைகளுக்கும் பொதுவாகத்தானே இடம்பெறுகின்றது, இதனால் சிறுபான்மையினர் மட்டும்
எவ்வாறு பாதிக்கப்படுவர்? என்று வினவும் பலர் மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பதையும்
பார்க்கமுடிகிறது.இத்தகையவர்களுக்கு மாகாண சபையானது எதற்காக – எவருக்காக தோற்றம்
பெற்றது என்ற அடிப்படை அறிவுதானும் இருப்பதாகத் தெரியவில்லை.
மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக
குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு சில சிறுபான்மை கட்சியினர்
தீவிரப்பிரசாரம் செய்து விழிப்புணர்வூட்டியபோதும் நல்லாட்சி சம்பந்தப்பட்ட
இயக்கமொன்று இச்சட்டமூலம் சம்பந்தமாக அறிக்கைகள்,கடிதங்கள், குறுந்;தகவல்கள் ஊடாக
இறுதிநேரம்வரை மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெளிவூட்டிய போதும் சட்டமூலத்திற்கு
ஆதரவு தெரிவிப்பதிலே உறுப்பினர்கள் முனைப்பாக இருந்துள்ளனர்.
மாகாண சபையில் ஆளும் தரப்பில்
இருப்பதனால் அரசாங்கம் கொண்டுவரும் அத்தனைக்கும் ஆதரவளிக்கத்தான் வேண்டும் என்பது ஒரு
நிர்ப்பந்தமாக இருந்தாலும்கூட தாம் சார்ந்திருக்கும் மக்களுக்கு பாதகமாக
அமையாதவாறு குறித்த சட்டமூலங்களில் காப்பீடுகளை- திருத்தங்களை மேற்கொள்வதற்கு
முடியாது இருப்பின் இல்லை அது சம்பந்தமாக பேசுவதற்குக் கூட அவகாசம்
இல்லாதிருப்பின் 'உங்களுக்கு ஏன் ஐயா இந்தவேலை ?' என்று கேட்டு 'ஓட்டு'ப் போட்;ட கையை
நிந்திப்பதைத்தவிர இந்த சமூகம் இப்போதைக்கு வேறு எதைத்தான் செய்ய முடியும்?
ஆனால், முன்னைய கிழக்கு மாகாண சபையில் நாடு நகர சட்டமூலத்தை
எதிர்த்தவர்களும் நடைபெற்ற தேர்தலில் மக்களின் உரிமை,இருப்பு சம்பந்தமான
விடயங்களில் அதீத ஈடுபாடு காட்டி அதனையே மூலதனமாகக் கொண்டு வெற்றி பெற்றவர்களும் இச்சட்டமூலத்திற்கு ஏகோபித்த ஆதரவு செலுத்துவதில் ஈடுபாடு
காட்டியதற்கு காரணத்தை கூற வந்த முஸ்லிம்களின் தனிப் பெரும் கட்சியின் பொதுச்
செயலாளர் 'சூழ்ச்சி'யொன்று இடம்பெற்றுள்ளதாகவே கூறியுள்ளார்.
அவ்வாறெனில், மாகாண சபை
உறுப்பினர்களை சட்டமூலத்தை ஆறஅமர இருந்து வாசிப்பதற்குக்கூட அவகாசம் வழங்காது, அவசர அவசரமாக
விவாதிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ் மொழியில் பேசத்தெரியாத மாகாண சபை
தவிசாளரது தெரிவும் அதேபோல் தமிழ் மொழியில் பேசத்தெரியாத பிரதம செயலாளரது
நியமனமும் ஒரு சூழ்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இவ்வாறு எல்லாமே சூழ்ச்சியெனில்
இம்மகாண சபையினால் ஆளுநரின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதோ காணி முதலான அதிகாரங்களை
பெற்றுக்கொடுப்பதோ, தமிழ்மொழிதெரிந்த சிவில் அதிகாரிகளை மாவட்ட செலாளர்களாக நியமிப்பதோ, பெரும்பான்மை
இனத்தவரின் திட்டமிட்ட குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதோ இன்னும் சிறுபான்மையினரின்
கிடப்பில் கிடக்கும் அத்தனை அபிலாசைகளும் வெறும் கனவாகவே களைந்து செல்லும்.
எது எவ்வாறாக இருந்தபோதும் இச்சட்ட மூலம்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் மாகண சபைக்கு இருந்த அதிகாரங்களும்
குறைந்து, மக்களது எதிர்பார்ப்புக்கள் எல்லாமே சிதைந்து, வருந்தத்தக்க
நிலையொன்று வருவதற்கு முன்பு இனியாவது இவர்கள் ஆகுமானதை செய்வார்களா?
0 கருத்துரைகள் :
Post a Comment