animated gif how to

இஸ்லாமிய விரோதிகளின் சதித்திட்டங்களை ஒன்றிணைந்து தோற்கடிப்போம்

September 21, 2012 |

-மூதூர் முறாசில்-

அமெரிக்காவில் சற்குண சீலரின்-தூதரின் குணவொழுக்கத்தை சிதைத்து சித்தரித்து காணொளியாக காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து முஸ்லிம்களது உணர்வுகள் கொதித்தெழுந்து கொண்டிருக்கம் இவ்வேளையில் பிரான்ஸ் பத்திரிகையொன்றில் நபிகளார் பற்றிய கேளிச்சித்திரம் பிரசுரமாகி பிரச்சினையை மேலும் சூடேற்றியுள்ளது.

இஸ்லாத்திற்கெதிரான விரோதிகளின் இத்தகைய சதிமானங்கள் இஸ்லாத்தின் தோற்றத்தோடு தொடர்ந்து வந்தவையாகும். காலத்திற்குக் காலம் பல்வேறு வடிவங்களில் இத்தகைய இஸ்லாத்திற்கெதிரான வெளிப்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இவ்வெளிப்பாடுகள் அனைத்தும் நபிகள் பெருமானாரையும் சன்மார்க்கத்தையும் கேவலப்படுத்தும் ஒரு நோக்கத்தை வெளிப்படையாகவும் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து முன்னெடுப்பதனை மறைமுகமான நோக்கமாகவும் கொண்டு ஆக்கப்பட்டவைகளாகும்.
எனவே, எஹுதி நஸராக்களின் இத்தகைய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் சமூகத்தினரின் செயற்பாடுகள் அமையுமெனில் இவ்விடயத்தில் வெற்றி பெறுவபவர்கள் அக்கயவர்களேயாவர். ஆதலால், முஸ்லிம்களின் ஒவ்வொரு நகர்வும் கவனமாக இடம்பெறவேண்டும்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் மீது அன்பையும் அவர்களது பெருமையையும் வெளிக்காட்டுவதற்கும் அவர்களை தூசித்த கயவர்களை தண்டிக்கக் கோருவதற்கும் அன்னவரின் வாழ்கை வழிகாட்டலிலிருந்து பொருத்தமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
அதற்கு மாறாக சிலர் திட்டமிட்டுச் செய்த இப்பாதகத்திற்காக அதனோடு சம்பந்தமில்லாத வேறு நபர்களைத் தாக்குவதோ, கொலை செய்வதோ, உடைமைகளை அழிப்பதோ, தற்கொலைத்தாக்குதல்களை நடத்துவதோ இத்தகைய விரோதிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சரியான தீர்வாக அமையுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
இஸ்லாத்திற்கெதிரான ஒரு வெளிப்பாடு இடம்பெற்றதும் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள்; நடைபெறுவதும் அதன்பின்பு அது நாளடைவில் நளிவடைந்து விடுவதும் கடந்த கால வரலாறுகளாகும்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவனும் பரித்தானியாவின் செல்லப்பிள்ளையுமான சல்மான் ருஸ்தி, பங்காளதேஸ் பூர்வீகமாகக் கொண்ட தஸ்லிமா நஸ்ரின் முதலான முஸ்லிம் பெயரேந்திகளின் இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் விரோதமான எழுத்தாக்கங்களுக்கு எதிராக சரியான நடவடிக்கையொன்றை எடுப்பதற்கு முஸ்லிம் உலகம் தவறியதே அதன் பின்னைய நிலைமைகளுக்கு உந்து சக்தி வழங்கியிருக்கின்றது.

1988ஆம் ஆண்டில் சாத்தானிய வாசகங்கள்’(ளுயவயniஉ ஏநசளநள ) என்னும் நாவலை எழுதி வெளியிட்ட ஸல்மான் ருஸ்திக்கு இற்றைக்கு சுமார் 24 வருடங்கள் கடந்த போதும் அவருக்கெதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பதும் அது போல 1993ஆம் ஆண்டில் லஜ்ஜா’(டுயததய) என்னும் நூலை எழுதிய தஸ்லிமா நஸ்ரின் இற்றைவரை எந்தவொரு நடவடிக்கைக்;கும் உள்ளாகாது இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிவதும் முஸ்லிம் உம்மாவின் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகின்றது.


இது போலவே நபிகளாரை தூசித்து கேளிச்சித்திரம் வரையப்பட்டதும் அதைத் தொடர்ந்து எமது வழமையான எதிர்ப்பைக் காட்டி பின்பு நாம் அப்பாதகனுக்கெதிராக எதுவும் செய்யாது ஓய்வெடுத்துக் கொண்டதும் மிக அண்மையில் நடந்த விடயங்களேயாகும்.


இதே நிலைமை இப்போது நம்மெல்லோரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய அமெரிக்க யூதன் சாம் பாசிலி விடயத்திலும் பிரான்சின் கரிலி ஹெப்டோபத்திரிகை ஆசிரியர் ஸ்டிபன் கார்பொனியர் விடயத்திலும் இடம்பெறாதிருப்பதற்கு திட்டமிட்டு காரியம் சமைக்க வேண்டும்.


எனவே, இஸ்லாம் கூறும் வழிமுறைகளை கண்டிப்பாக அனுசரித்து நமது எதிர்ப்புக்களை மிகவும் முன்மாதிரியாக மேற்கொண்டு இஸ்லாத்தின் விரோதிகளுக்கு நல்லதொரு செய்தியை தெரிவிப்பதோடு நடுநிலைமையானவர்களினதும் உரிய அரசாங்கத்தினதும் மனசாட்சியை பேசவும் வைக்க வேண்டும்.

இந்தவகையில் நாம் மக்கள் பேரணியை நடத்துவதாக இருந்தால்கூட அப்பேரணியை ஒழுங்கு செய்பவர்களும்; பேரணியில் கலந்து கொள்பவர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

இஸ்லாத்தின் எதிரிகளை கண்டித்து பேரணியில் கலந்து கொள்பவர்கள் நாகரிகமற்ற வார்த்தைகளை சத்தமிட்டு கூறுவதோ, அத்தகைய வார்த்தைகளை பெனர்அல்லது அட்டைகளில் பொறித்து காட்சிப்படுத்துவதோ நபிகளாரின் முன்மாதிரிக்குப் பொருந்துமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.( ஏனெனில் நாங்கள் முஸ்லிம்கள், எதிலும் முன்மாதிரியானவர்கள்.)


ஆதலினால், பொருத்தமான ஓரு இடத்தில் ஏறத்தாழ ஓரே வகையான ஆடையை அணிந்து, அழகாக அணிவகுத்து, மௌனமாக நின்று, மனதை ஈர்க்கத்தக்க சில வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்தி நின்றால் கூட சத்தமிடுவதிலும் பார்க்க கூடிய பலனை அடையக்கூடியதாக இருக்கும். உரிய தரப்பினருக்கு நாம் எதிர்பார்க்கும் செய்தியை சென்றடையச் செய்யவும் முடியும்.
அமெரிக்காவில் நபிகளாரை எள்ளி நகைக்கும் வகையில் காணொளி வெளியிட்டிருப்பதும் அதன் பின்பு அடிமேல் அடியாக பிரான்ஸின் கேளிப் பத்திகையொன்று நபிகளாரை மோசமாக சித்தரித்து கேளிச் சித்திரத்தை பிரசுரித்துள்ளதும் எந்தளவு பிழையான காரியம் என்பதையும் மதவுரிமைக் கெதிரான செயற்பாடு என்பதையும் அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் உளரீதியிலான சொல்லொண்ணா துன்புறுத்தல் பற்றியும் மாற்று மதத்தவர்கள் மனங்கொள்ளும் வகையில் பரப்புரை ஒன்றை மேற்கொள்ளவும் முடியும்.
பேரணியை நடத்துவதை அல்லது அதில் பங்கெடுப்பதை மாத்திரம் நாம் பிரதான ஆயுதமாக கைக்கொள்ளாது இறைதூதருக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு முறையான தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும்; வகையில் உள்ளத்தை உசுப்பக்கூடிய கண்ணியமான ,நாகரீகமான முறையிலமைந்த நமது வேண்டுதல்களை பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் விடுக்கவும் முடியும்.
இத்தகைய நமது செயற்பாடுகள் வெற்றியளிக்காத போது மத நிந்தனை சம்பந்தமாக குறித்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச சட்டங்கள் வாயிலாக முறையான தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கு தொடரான அழுத்தங்களை கூட்டுச் செயற்பாட்டின் மூலம் இலகுவில் மேற் கொள்ளலாம்.

எனவே, உலகளாவியரீதியில் உள்ள இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் சன்மாக்க ஆர்வலர்களும் அவசரமாக ஓரிடத்தில் ஒன்றிணைந்து தீவிரமாக ஆலோசித்து மதநிந்தனைக்கெதிராக முறையான செல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இக்காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஒழுங்கமைத்து வழிநடத்தவது யார்? அறிஞர்களே, உலமாக்களே,செல்வந்தர்களே,ஈமானிய ஊடகவியலாளர்களே அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வழியைக் காட்டுங்கள்!

இதற்கெல்லாம் முந்தி முஸ்லிம்களாகிய நாம் நபிகளாரின் முழுமையான வழிகாட்டலில் வாழ்கின்றோமா என்பதை சுய பரிசோதனை செய்து முழுமையான முஸ்லிமாகசீரமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வாருங்கள் சகோதரர்களே ! முஸ்லிம் உம்மாவின்வெற்றி அண்மித்து விட்டது!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!