தினகரன்: ஜனாதிபதியின்
மதவிவகார ஆலோசகர் கலகம தம்மரன்ஸி தேரர்: முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாள் காலத்தில்
குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு மகா சங்கத்தினரோ, பெளத்த
மத குருமாரோ எதுவிதமான இடைஞ்சல்களையும் செய்ய மாட்டார்கள் என்று
ஜனாதிபதியின் பெளத்த மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலகம தம்ம ரன்ஸி
தேரர் தெரிவித்தார்.
வட
மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில்
போட்டியிடும் அபேட்சகர்களை ஆதரித்து அநுராதபுர மாவட்ட சுதந்திர முஸ்லிம் சங்கம்
(அதீமா) ஒழுங்கு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர்கள்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில்
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த
நாட்டில் வாழும் சகல இன, மத மக்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனை எவருமே
மறுக்க மாட்டார்கள்.
இவ்வாறான
நிலையில் சில தீய சக்திகள் ஹஜ் பெருநாள் காலத்தில் முஸ்லிம்கள் குர்பான் கடமையை
நிறைவேற்றக் கிடைக்காது எனக்கூறி அப்பட்டமான பொய்ப் பிரசாரத்தை
மேற்கொண்டுள்ளார்கள் அவற்றில் எதுவிதமான உண்மையுமே இல்லை. தீய சக்திகளின் பொய்ப்
பிரசாரத்தை நம்பி முஸ்லிம்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது.
இந்நாட்டில்
எல்லா இன, மத மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தத்தமது மத, கலாசார
உரிமைகளை முழுமையாக அனுபவிக்கின்றார்கள்.
முஸ்லிம்களை
அரசாங்கத்திலிருந்து தூரமாக்கும் தீய நோக்கில் தான் சில தீய சக்திகள் பொய்ப்
பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. இதனை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டு விழிப்புடன்
செயற்பட வேண்டும்.
எமது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமான உறவைக்
கொண்டிருப்பவர். முஸ்லிம்களின் பள்ளிவாசளை திறந்து வைத்த தேசத் தலைவர் என்ற பெருமை
கூட அவரைச் சாரும். அவர் பலஸ்தீன் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் மிக நெருங்கிய
நண்பனாக இருக்கின்றார். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் முழு உலக
முஸ்லிம்களும் அறிவர்.
இந்த நாட்டில் வாழும் எந்தவொரு மதத்தினரதும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும்
அதிகாரம் கிடையாது. சகல மதத்தவர்களதும் மத உரிமைகளை அரசாங்கம்
உறுதிப்படுத்தியுள்ளது. எனெவே எம்மை விட்டுக் கை நழுவிப் போயிருந்த சமாதானத்தைப்
பெற்றுத் தந்திருக்கும் ஜனாதிபதியையும் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு. முன்னணியையும்
நன்றியுணர்வோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment