அரசுக்கு எதிராக போராட்டம்
நடத்திய மக்களில் 850 பேரைக் கொலைச் செய்த வழக்கில் முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி
ஹுஸ்னி முபாரக்கிற்கு(வயது 84) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 10 மாதகாலமாக நடந்த விசாரணையின்
முடிவில் நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளாக நீண்ட முபாரக்கின்
சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கடந்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பித்த மக்கள்
எழுச்சிப் போராட்டத்தின் போது 850 பேர் கொலைச் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முபாரக்கிற்கு
மரணத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
முபாரக்கிற்கு
ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது குறித்து மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கொலைச்
செய்யப்பட்ட 27 வயது
இளைஞர் ஒருவரின் தாயாரான ஹனாபி எல் ஸய்த் கூறுகையில், “மரணத் தண்டனையை விட குறைவான
தண்டனை முபாரக்கிற்க்கு கொடுக்கப்படக் கூடாது என்பதே எனது விருப்பம்” என தெரிவித்தார்.
முபாரக்கிற்கு
எதிரான எழுச்சிப் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியான ஸோஹா
ஸய்த் இத்தண்டனைக் குறித்து கூறுகையில், “எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.
முபாரக்கிற்கு
மரணத் தண்டனை வழங்காமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில்
கூடியிருந்த மக்கள் கூச்சல் மற்றும் மோதலில் ஈடுபட்டனர்.
இன்னும்
சிலர் முபாரக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்காக “அல்லாஹ் அக்பர்” என முழக்கமிட்டனர்.
குற்றவாளிக்
கூண்டில் ஸ்ட்ரெச்சரில் இருந்து கூலிங் க்ளாஸ் கண்ணாடியை அணிந்துகொண்டு விசாரணையை
எதிர்கொண்ட முபாரக், தான்
நிரபராதி என எழுத்து மூலம் தெரிவித்தார்.
முபாரக்குடன்
முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அத்லி, ஆறு முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரபுலக
எழுச்சிக்குப் பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் முன்னாள் ஆட்சியாளர் முபாரக்
ஆவார்.
முபாரக்கிற்கு
தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி அஹ்மத் ரஃபாத் முபாரக்கின் ஆட்சியைக் குறித்து
கூறுகையில், “30 ஆண்டுகால இருள்” என்றும் “இருளடைந்த கனவு” என்றும் குறிப்பிட்டார்.
0 கருத்துரைகள் :
Post a Comment