animated gif how to

தம்புள்ளை மஸ்ஜித் – முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்குமா..?

April 30, 2012 |

-மானா-
இனங்களின் பலப்பரீட்சை மீண்டும் துளிர் விடுகிறதா எனும் ஆழ்ந்த கேள்வியை ஒவ்வொரு இலங்கையருக்குள்ளும் தூண்டிவிடுவதற்கு அண்மைய தம்புல்லை மஸ்ஜித் விவகாரம் அடித்தளம் அமைத்திருக்கிறத என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.

உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதற்கும், அவர்கள் உணர்ச்சியோடு விளையாடுவதற்கும் மிக இலகுவான ஆயுதங்கள் மூன்று, அவையாவன : இஸ்லாத்தின் திருமறை திருக் குர்ஆன் , முஸ்லிம்களின் பேரன்புக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லது முஸ்லிம்கள் தொழுகைக்காகக் கூடும் பள்ளிவாயல்கள் (மஸ்ஜித்) போன்ற விடயங்களில் வீணாண சர்ச்சைகளைத் தொடுத்தலாகும்.

இந்த மூன்றில் எதையாவது ஒன்றில் அத்துமீறுவதன் மூலம் முஸ்லிம்களின் உணர்ச்சியை மிக இலகுவாகக் கிளறி விட முடியும் என்பது உலகறிந்த உண்மை.இந்திய, இலங்கை முஸ்லிம்களும் இதற்கு விதி விலக்கானவர்கள் அல்ல என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு நிரூபித்திருக்கின்றன.

எனினும், இந்தியாவைப் போன்றல்லாது, இலங்கையின் இன விரோத சக்திகள் சமூகப் பிளவுகளை அரசியலாக்குவதை விட சமூகப் பலப் பரீட்சையாக்குவதில் வல்லவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள், அதன் பின்னரே நல்லோர்கள், வல்லோர்கள் கை கோர்த்து ஒற்றுமைஎனும் கயிற்றை இறுக்கிப் பிடித்து வடுக்களை அகற்றுவதற்குப் படாத பாடு படுகிறார்கள், அதற்குள் இன்னொரு வடு உருவாகி, வரலாற்றில் கரும்புள்ளிகளும் கூடிக் கொண்டே செல்கின்றன.

தற்போது, நடக்கும் தம்புல்லை விவகாரம் இனங்களில் பலப்பரீட்சை மாத்திரமன்றி இரு தனி மனிதர்களின் அரசியல் பலப்பரீட்சையும் கூட என்பது இங்கு மிக அவதானமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

குறிப்பிட்ட புத்த பிக்கு (சுமங்கல தேரர்), தம்புள்ளை பிரதேசத்தில் ஒரு மதத்தலைவர் எனும் அந்தஸ்தை விட மிகப் பெரும் அரசியல் செல்வாக்கும் (தற்போதைய அரசில்) பண பலமும் படைத்தவராவார். பிரதேச வாசிகளின் ஊகப்படி அன்னாரின் மாத வருமானம் கோடிகளைத் தாண்டுவதாகக் கூறப்படுகிறது, இது வெறும் ஊகமாகக் கூட இருக்கலாம்.

எனினும், தம்புல்லை பிரதேச அரசியலில் அசைக்க முடியாத அரசியல் பிரதிநிதியாக இருக்கும் ஜனக பண்டாரவிடம் குறிப்பிட்ட தேரர் அரசியல் போட்டியில் தோற்றுப்போனதும், ஜனகவின் முஸ்லிம் மக்களுடனான மிக இறுக்கமான உறவும், பிணைப்பும் அவர்கள் ஆதரவும் குறிப்பிட்ட தேரரின் சமூக நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களாகும்.

பெளத்த மதத்தவருக்கு தம்புல்லை பிரதேசம் புனிதமான பிரதேசம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, அதே போன்று தம்புல்லை வாழ் பெளத்தர்கள் கடந்த நாற்பது வருட காலத்தில் எப்போதுமே குறிப்பிட்ட மஸ்ஜித்தின் இருப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதும் இல்லை. பிரதேச மக்களிடம் தன் பண பலத்தாலும் விகாரை மூலமான ஆதிக்கத்தாலும் தொடர்பு வைத்திருக்கும் குறிப்பிட்ட தேரரால் பிரதேசத்தின் மூவின மக்களின் பிரதிநிதியாக எப்போதுமே உருவெடுக்க முடியாத நிலையிலேயே  இவ்வாறான ஒரு சர்ச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது.

தீவிர பொளத்தவாத கொள்கையிலும், மிக இலகுவாக, மத சார்பான உணர்ச்சியூட்டலுக்குள்ளாக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கக்கூடிய சாதாரண பக்தர்களையும் சேர்த்து, சுமங்கல தேரர் சட்டத்தைத் தன் கையில் எடுத்துச் செயலாற்ற விளைந்த விதமும், அது குறித்த அவரது இனவாத கருத்துக்களும், பொது மக்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அவர் விடுத்த எச்சரிக்கைகளும், ஒரு சாதாரண குடிமகனின் மத நம்பிக்கையை அவர் புண்படுத்திய விதமும் இன்று உலகறிந்த விடயமாக மாறிவிட்டது.

அதை இது வரை பார்க்காதவர்கள் யுடியுப் போன்ற காணொளி (வீடியோ) மையங்களில், Dambulla Mosque attack என்று தேடினால் பார்த்தறிந்து கொள்ளலாம்.

அவரது இனவாதத்தின் வடிவம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டியது, மனித உரிமைகள் ரீதியாக விசாரிக்கப்பட வேண்டியதாக இருப்பினும் அவ்வாறு எதுவும் இலங்கையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகும்.

குறிப்பிட்ட தேரர் தனி மனிதரும் இல்லை, இவர் போன்று இனியொருவர் உருவாகாமல் இருக்கப் போவதும் இல்லை. எனவே, இதன் விளைவாக இது இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு இனத்தின் பலப்பரீட்சையாக மாறியிருக்கிறது.  

அந்தப் பலப் பரீட்சை, ஒரு நாட்டிற்கெதிரான பலப் பரீட்சையல்ல, தீவிர பெளத்தவாத குழுக்களுக்குஎதிரான பலப் பரீட்சையாகும். பெளத்த குழுக்கள், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை, மத உணர்வை, இன உணர்வை, வணக்கஸ்தலங்கள் மீதான பற்றை, நிலைப்பாட்டைப் பரீட்சிக்க விளையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைவரும் ஒரு குடையின் கீழ் திரள வேண்டிய கட்டாயத்தினை இந்த தம்புள்ளை சம்பவம் எடுத்துக் காட்டி நிற்கப் போகிறது, வரலாற்றில் பதிவாகப் போகிறது என்பது திண்ணம்.

இது நாடளாவிய சிக்கலாக உருவெடுக்கும் என்பது ஒரு வேளை குறிப்பிட்ட மதத்துறவியே நினைத்துப் பார்க்காத விடயமாக இருந்தாலும், அவருக்கு இந்தளவு துணிவைக் கொடுத்த அவரது அரசியல் பலங்களும் இங்கு அலசப்பட வேண்டும்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியான மிகக் குறுகிய காலத்திற்குள்,பொதுவாக தீவிர மதப்பற்றுள்ளவராக அறியப்படும் நாட்டின் பிரதமரது அலுவலகம், குறிப்பிட்ட மஸ்ஜித்தை அந்த இடத்திலிருந்து அகற்றப் போவதாக முதலிலும், அதன் பின் இது தொடர்பாக ஏலவே முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் கலந்துரையாடப்பட்டதாகவும், இணக்கப்பாடுகள் ஏற்பட்டதாக வும், ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டதாக இன்னொரு தகவல் கசிவையும் விட்டு தமது அரசியல் இருப்பை நிலை நாட்டிக்கொண்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் பிரமுகர்களோ தாம் தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்பு படுவதை முடிந்தளவு தவிர்த்தே வருவதால் பிரதமர் அலுவலகம் கசிய விடும் அரசியல் ஊகங்கள் இங்கே எடுபடவில்லை.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை தொழுகைக்கான இடம் குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை, தொழுகைக்காக உருவாக்கப்படும் இடம் அதற்கான முறைகளோடு பரிபாலிக்கப்படுவதும், தொழுகைகள் அவற்றிற்குரிய வகையில் நடத்தப்படுவதும் மட்டுமே முக்கியம்.

எனவே, பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது, “விசேடத் தன்மை மிக்க இடங்கள் தேடப்படுவதில்லை, மாறாக முடிந்தளவு, போக்குவரத்து போன்ற பொதுவான வசதி வாய்ப்புகள் இருக்கும் இடங்களே தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் குறிப்பிட்ட மஸ்ஜித் உருவாக்கப்பட்டபோதும் சரி, கடந்த நாற்பது வருட கால இருப்பின் போதும் சரி, முஸ்லிம்களைப் பொறுத்தவரை அது இறைவனைத் தொழும் இடம் என்பதே வரையறை.

இந்த வரையறையின் அடிப்படையிலும், நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், குறிப்பிட்ட வளாகத்தினை இலங்கைக் குடியரசின் சட்டதிட்டங்களுக்கு அமைய கடந்த 1982ம் ஆண்டளவில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட வணக்கஸ்தலங்களுக்கான சட்ட திட்டங்களுக்கமைய பதிந்து கொள்ளப்பட்டது மாத்திரமன்றி, 1962ம் ஆண்டு முதல் பல தசாப்தங்களாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தம்புல்லையைத் தாண்டிச் செல்லும் பிரயாணிகள் தம் தொழுகைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் கூடிய இடமாக செயற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையை மீறி, இன்று தனது சொந்த அரசியல் மற்றும் சமூக நிலைக்காக, ஒரு இனத்தின் பலத்தைப் பரீட்சிக்க விளைந்த தேரருக்கு மேல் மட்ட அரசியல் செல்வாக்கு இல்லாமல் இல்லை.

அவர் ஒரு மதத்துறவியாகவும் இருப்பதனால் அவரது செல்வாக்கு, நேரடியாகவே உயர் மட்ட அரசியல் வாதிகளோடு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிரதமர் அலுவலகத்தோடு மிக நெருங்கிய தொடர்புகள் வைத்திருக்கிறார். எனவே, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் ஒரு தலையிடியாகவே இருக்கப் போகிறது.

இஸ்லாமிய சமூகம் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட ஜம் இயதுல் உலமா (இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை), முடிந்தளவு அமைதி வழியை நாடி, பிரார்த்தனைகள், நோன்பு நோற்றல் போன்ற காரியங்களை ஊக்குவித்தாலும், நாட்டில் வாழும் இன்னொரு பகுதியினர் தமது உணர்ச்சிகளையும் வெளிக்காட்டியே தீர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அமைதியான கண்டனப் பேரணிகள், ஊர்வலங்கள், கடையடைப்புகள் என்று மக்கள் உடமைகளுக்கு தீங்கு விளைவிக்காத, நாட்டின் சட்ட ஒழுங்கிற்குப் பங்கம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், தேவையேற்படின் அவற்றை அனுமதி பெற்றே நடாத்துவதும் கூட மக்களின் உரிமையும் கடமையுமாகும்.

தற்போது தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியிருக்கும் ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என்பதிலேயே எல்லோருடைய கவனமும் தற்போது திரும்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அமைச்சரவை மட்டத்திலிருந்து, தேரரின் நடவடிக்கையைக் கண்டித்தும், முஸ்லிம் மக்கள் உரிமை தொடர்பான சாதகமான அறிக்கைகளும் வெளியாகியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அரசியல் நிலவரம் இவ்வாறு இருக்க, இன்றைய நிலையில் தம்புல்லை மஸ்ஜித் பரிபாலனம், பிரதேச மக்களின் மன நிலை மற்றும் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிவதற்காக, சோனகர்.காம் வலைத்தள சார்பில், பள்ளி நிர்வாகம் முதல் பல தரப்பட்ட பிரதேச வாசிகள், அரசியல்வாதிகள், வணிக சமூகத்துடனும் நாம் தொடர்புகளை மேற்கொண்டிருந்தோம்.

ஏலவே, கடந்த வெள்ளியன்று (27-04-12) அங்கு ஜும்ஆத் தொழுகை, வழக்கத்திற்கும் மாறாக அதிக எண்ணிக்கையான மக்களுடன் மிகச் சுமுகமாக நடைபெற்றதும், அதனைத் தொடர்ந்த அனைத்து தொழுகைகளும் தற்போது வழமை போன்று நடைபெறுவதாகவும் பல செய்தி ஊடகங்கள் மூலம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவ்வாறாயின், இச்சிக்கல் தீர்ந்து விட்டதா என்பதே அனைவர் மனதிலும் எழும் அடுத்த கேள்வியாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக இல்லைஎன்பதே தற்போதைய பதிலாக இருக்கப்போகிறது. ஏனெனில், இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை தேரர் மற்றும் அவர் சார்ந்தோரைப் பொறுத்தவரை இதுவொரு “Waiting game”, அதாவது அவர்கள் பொறுமை காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இதற்கான காரணம், ஒரு புறத்தில் மக்கள் எழுச்சியாக இருக்க, மறு புறத்தில் மேல் மட்ட நிர்வாகத்தின் பதில் அறிவதற்கான கால அவகாசமுமாகும்.

தேரர் எதிர்பார்ப்பது போன்றோ அல்லது இன்றைய இஸ்லாமிய உணர்வுகள் பிரதிபலிப்பது போன்றோ ஒரு உடனடித் தீர்வினை மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கப் போவதில்லை என்பதும் ஊகிக்கப்பட வேண்டிய அரசியல் விளைவாகும்.

எனவே, தற்போதைய நிலையில் இந்த விடயத்தை ஆறப்போடுவதே அரசுக்கும், தேரருக்கும் நல்லதாக அமையும்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த இடத்தில் தான்தொழுகை நடத்த வேண்டும், இந்த இடத்தில் தான் மஸ்ஜித்இருக்க வேண்டும் என்ற கட்டாயத் தேவை இல்லாததல், மாற்றீடு என்பதே அரசியல் உயர் மட்டத்தின் உண்மையான நிலைப்பாடாக இருக்கலாம்.

ஆனாலும், குறிப்பிட்ட மஸ்ஜித் அங்கிருந்து இடம்பெயரக் கூடாது என்பதில் பள்ளி நிர்வாகம், பிரதேச மக்கள் உட்பட, ஜம் இயதுல் உலமா, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட அரசியல் தலைமைகள் இன்று உறுதியாக இருக்கின்றார்கள்.

அதற்கு ஏதுவாக, முதலில் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை மதித்து, குறிப்பிட்ட பள்ளிவாசல் அங்குதான் செயற்பட வேண்டும் என்று கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அமைதியாக, வேறு ஒரு இடத்தில், சற்று பெரிய இடத்தில், அரச நிதியுதவியும் தரப்பட்டு, புதியதோர் பள்ளிவாசல் உருவாக்கப்பட்டலாம், அதுவரை சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட பிரதேச மஸ்ஜித் வழமை போல் செயற்படலாம், தேரர் அமைதி காக்கலாம்.

அரசாங்கம் இவ்வாறனதொரு தீர்வினை முன் வைக்கும் போது, கடந்த நாற்பது வரு காலங்கள் அந்த இடத்தில் இயங்கிய மஸ்ஜித் என்பதற்காக மீண்டும் போராடுவதா அல்லது, கட்டிடத்தினைப் பெரிதாக்க முடியாத அப்பிரதேசத்தினை விட்டு விட்டு, புதிய வசதிகளுடன் கூடிய இடத்திற்கு மாற்றம் செய்து கொள்ள இணங்கிக்கொள்வதா எனும் புதியதேர் சிக்கலுக்கு விடைகாண இஸ்லாமிய சமூகம் தள்ளப்படும்.

பிரதேசவாசிகளைப் பொறுத்தவரை மேலும் வசதிகளுடனான வேறொரு இடம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனும் கருத்து இச்சிக்கல் உருவாக முன் வரை இருந்திருந்தாலும், தற்போது அவ்வாறான மன நிலை இல்லை என்பதை நாம் நேரடியாகக் கேட்டறியக்கூடியதாக இருந்தது.

இதற்கு முன்னர் அநுராதபுர நகரில் இவ்வாறான இனவாதம் அரங்கேறிய போது, அது சியாரம்” (முஸ்லிம் பெரியார் ஒருவரின் அடக்கஸ்தலம்) எனும் அலட்சியம் முஸ்லிம் தலைமைகளிடம் இருந்ததே தவிர அது ஒரு சமூகம் 400 வருடங்களுக்கு மேலாக அம்மண்ணில் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளமாகப் பார்க்கப்படவில்லை. எனவே, அதனைப் பயன்படுத்திக் கொண்ட சக்திகள் இன்று ஒரு பழமை வாய்ந்த வணக்கஸ்தலத்தை அகற்றவும், இடிக்கவும் கோரி இனவாதம் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட மஸ்ஜித் விவாகரம் தொடர்பாக வெளிவந்த பல விடயங்கள், ஊகங்களாக இருக்குமோ எனும் ஊகத்தில் கூட நம்ப முடியாமல் போகும் அளவுக்கு திரிபான செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது.

எனினும், எமது நேரடி விசாரணைகள் மூலம் குறிப்பிட்ட இனவாத சக்திகள் மஸ்ஜிதுக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததும், சில உடமைகள் சேதமாக்கப்பட்டதும், ஆகக்குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட குர்ஆன் பிரதிகள் வீசியெறியப்பட்டிருந்ததும், பழைய கட்டிடத்தில் சில பகுதிகள் சேதமாக்கப்பட்டதும் நடந்தேறிய உண்மைகளாகும்!

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டதாகவும், இதற்கு மேலும் தம்மால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று கட்டளையாகஇல்லாமல் வேண்டுகோளாகமுன் வைத்து, குறிப்பிட்ட குழப்பத்தின் போது மஸ்ஜிதுக்குள் இறுதிவரை காத்திருந்த, பள்ளி நிர்வாக சபையினர் உட்பட சுமார் 20-25 பேரை வெளியேறும் படி கேட்டுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மத, மற்றும் அரசியல் செல்வாக்கு நிறைந்த சுமங்கல தேரரையும் அவர் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்று காவற்துறை டி.ஐ.ஜி வெட்கங்கெட்டுப் பேசியது அவதானிக்கப்படும் அதே வேளையில், இந்த விடயத்தைக் கட்டுப்படுத்த சாதாரண இராணுவத்தினரும், பொலிசாரும், சிரத்தையெடுத்ததும், முஸ்லிம் மக்களுக்கும், மஸ்ஜிதுக்கும் பாதுகாப்பு வழங்கியதையும் நாம் மறக்கக்கூடாது.

சம்பவத்தின் பின்னர் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதின் மற்றும் பெளசி ஆகியோர் முன் நிலையில் தன் கையாலாகாத் தன்மையை டி.ஐ.ஜி விளக்கும் போது, ரிஷாத் அவர்களே வெகுண்டெழுந்ததும், காவற்துறையை வன்மையாகக் கண்டித்ததும், பிரதேச மக்கள் நேருக்கு நேர் காரசாரமான கருத்துக்களை முன்வைத்ததையும் கூட இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனெனில், இலங்கையின் சாதாரணக் குடிமக்கள் எனும் உரிமையில் தமக்கும், தம் மத நம்பிக்கைக்கும், தம் வணக்கஸ்தலத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், இனத்துவேச சக்திகள் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனும் அவர்களது நியாயமான உணர்வு அது.

இந்த உணர்வை, நிலைமையை அறிந்து உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொண்ட அரச ஊழியர்களைத் தவறாகப் பார்க்க முடியாதாகினும், குறிப்பிட்ட சம்பவம் குறித்து ஏலவே அறிந்து வைத்திருந்த பிரதேச அரசியல் மற்றும் மத்திய அரசாங்கப் பிரதிநிதிகள் இதற்குப் பதில் சொல்லக் கடமைப்படுகிறார்கள்.

அரசில் அங்கம் வகிக்கும் ஜனகவின் வாக்கு மூலம் இங்கு முக்கியம் பெறும் அதே வேளை, அவரின் நேரடி அரசியல் எதிரியாக இருக்கும் தேரருக்கு மத்திய அரசாங்கத்தின் ஊத்தியோகபூர்வ அறிக்கை அல்லது தீர்வொன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் பாரம்பரிய மிக்க மாத்தளை மாவட்ட முஸ்லிம் வாக்குகள், அதனை அண்டிய கண்டி மற்றும் குருணாகலை எல்லைகளிலிருந்து பெறப்படவேண்டிய முஸ்லிம் வாக்குகள் தொடர்பிலும் அரசு மிக நிதானமாக சிந்தித்துச் செயற்படப்போவதும் எதிர்பார்க்கப்பட வேண்டிய உண்மைகளாகும்.

அதே போன்று, நாட்டில் என்னதான் நடக்கிறது என்று அறியாத சிறுபிள்ளைகளாக இருக்கும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியினரான யு.என்.பியினர் இது குறித்து ஆக்கபூர்வமாக எதையும் செய்யப்போவதில்லை என்பதும் இங்கு மிக அவதானமாக உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அப்படியாயின், முஸ்லிம்கள் தம் நலன்களைத் தாமே தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதன் அடிப்படையில், பிரதேச மக்களின் முழு எதிர்பார்ப்பும் பள்ளி நிர்வாகத்தின் தோள்களில் ஏற்றப்பட்டிருப்பதும், பள்ளி நிர்வாகம் சட்டத் தேவைகளுக்காக ஜம் இயத்துல் உலமாவின் வழிகாட்டலை வேண்டி நிற்பதும், இவற்றிற்கு மேலாக ஆளும் கட்சி முஸ்லிம் பிரதிநிதிகள் தம் சமூகக் கடமையை சரி வரச் செய்யத் துணிந்திருப்பதையும் கூட நாம் காண்கிறோம்.
  
அகில இலங்கை முஸ்லிம்களின் கட்சியாகக் கூறும் முஸ்லிம் காங்கிரசோ இல்லை சனநாயக சோஷலிசக் குடியரசின் பாதுகாவலர்களாகத் தம்மைக் கூறும் மஹிந்த அரசோ அல்லது அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களோ, அல்லது பிரதேச அரசியல் வாதிகளோ இந்த விடயத்தை அரசியல் நோக்கில் நகர்த்திச் செல்லாமல் தடுக்கும் சக்தி மக்களிடம் மாத்திரமே இருக்கிறது.

அந்த வகையில் தம்புல்லை மக்களுக்காக ஒன்றிணையும் தேவை நாட்டில் வாழும் அனைத்து இஸ்லாமிய சமூக அங்கத்தவர் மேலும் சுமத்தப்படுகிறது.

இந்த இடம் விட்டுக்கொடுக்கப்பட்டால்…..? நாளை நாட்டில் எந்த இடத்திலும் இது நடக்கலாம் எனும் தம்புல்லை முஸ்லிம் பிரதிநிதிகளின் நியாயமான ஆதங்கம் உணரப்படுவதும் இங்கு காலத்தின் தேவையாகவே இருக்கிறது.

இவ்வாறு ஒரு சிக்கல் ஏற்படாமல் இருந்திருந்தால், பேச்சு வார்த்தை மூலமாக மிகச் சுமுகமான ஒரு தீர்வை, அவ்வளவு ஏன், பள்ளியைக் கூட வேறு இடத்திற்கு மாற்றும் தீர்வு இணங்கப்பட்டிருக்கலாம், ஆனால் இப்போது பலமும் பலாத்காரமும் பிரயோகிக்கப்பட்டு சர்வதேச அவதானத்திற்கு இவ்விடயம் வந்திருப்பதால், இது ஒரு இனத்தின் இனவாதிகளுக்கெதிரான, இன்னொரு சமூகத்தின் பலப் பரீட்சையாகவும் மாறியிருக்கிறது என்பதே உண்மை!

இதற்குப் பிறகு கூட மஸ்ஜித் இடம் மாறுவதில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனை இருக்கப்போவதில்லை, ஆனால் குறிப்பிட்ட மதவாதியும் அவர் இனவாதமும் சட்டத்தின் முன் சமமாகப் பார்க்கப்பட்டு, தண்டிக்கப்படுமாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாக இருக்கும். ஆனாலும், அதுவும் நடக்கப் போவதில்லை. ஏனெனில், அவர் ஒரு மதத்துறவியாவார்.

ஆக, சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது, அப்படியானால் அரசு நிர்ப்பந்திக்கப்படுவதைத் தவிர வேறு மாற்றீடு கிடையாது, இதற்கு முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதும், அடுத்து, அமைதியான முறையில் ஆனால் தெளிவான போராட்டங்களை நடத்துவதும், குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம், பிரதேச மக்களின் கருத்தறிந்து அவர்களுக்குத் தோள் கொடுப்பதுமே காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

இதை விடுத்து, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பதன் மூலமோ, அல்லது அறிக்கைகள் மூலமோ வெளியுலகில் இருந்து பிரதேச மக்களுக்குத் துன்பத்தை அள்ளிக் கொடுப்பதில் பிரயோசனமுமில்லை, கட்சி நலனுக்காக அரசியலைக் கலப்பதிலும் பிரயோசனமுமில்லை.

எனவே,அறிக்கைப் போர்கள் அவசியமில்லை, வன் முறைகள் தேவையில்லை, ஆனால் இன ஒற்றுமையும், உரிமைக்கான குரலும் ஓங்கியெழுப்பப்பட வேண்டும், இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதற்கு தம்புல்லை சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இலங்கை நாட்டில் இஸ்லாமியர்களாக வாழும் மக்கள் பொதுவாகவே சுயமரியாதையுடன், தமக்குரிய உரிமைகளை நல்ல முறையில் பேணிப் பாதுகாத்து வாழ்ந்து வருபவர்கள், எனவே நாட்டில் உருவாக்கப்படும் இவ்வாறான இன்னல்களில் இன ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் அதே வேளை, மேலதிக முடிவுகள் தொடர்பில் புத்தி சாதுர்யத்துடனும், நடைமுறைக்கு ஏற்பவும் செயற்பட வேண்டிய கடமைக்கும் உட்பட்டவர்களாவார்கள்.

ஒற்றுமையே வெற்றிக்கு வழி வகுக்கும் !

- சோனகர் வலைத்தளம் -

2 கருத்துரைகள் :

ammuzni said...

mashallah ஒரு ஆக்கபூர்வமான கட்டுரையாக இதை நான் பார்கிறேன். அண்மையில் வெளிவந்த தம்புள்ளை சம்பந்தமான கட்டுரைகளில் இதுவே மிக்க பொருத்தமனதகவும் பொறுப்புடனும் எழுதப்பட்டுள்ளது. எனது ஆசை என்னவேன்றால் இதனை தயவு செய்து ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலும் பிரசுரியுங்கள், ஏனனெனில் எமது தமிழ் வாசித்தறிய முடியாத சகோதரர்கள் அம்மொழியில் பிரசுரிக்கப்படும் தவறான செய்திகளை வாசித்து தவறான கருத்தை கொண்டுள்ளனர். நிச்சயமாக இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் அவர்களும் உண்மை என்ன என்பதை அறிவர். Jazakallah........

seyed said...

காலத்தின் தேவை கறுதி எழுதப்பட்டுள்ள இந்த ஆக்கம் அணைத்து முஸ்லிம்களாலும் வாசிக்கப்பட்டு சிந்திக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். சகோதரர்களே ஒன்று திரல்வோம் ஒற்றுமையுடன் முன்னெடுப்போம் அடுத்த நகர்வை.

Post a Comment

Flag Counter

Free counters!