animated gif how to

பண்பாடுகள் சீராகும்போது வழிபாடுகள் அங்கீகரிக்கப்படும்

March 02, 2012 |

எஸ். எச். எம். பளீல் (நளீமி) எம்.ஏ.
சிரேஷ்ட விரிவுரையாளர் - ஜாமியா நளீமியா

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒழுக்கப் பண்பாடுகள் என்பவை கட்டாயக் கடமைகளாகும். அவற்றை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் ஒரு முஃமினது ஈமான் கூட பாதிக்கப்படுகிறது. பண்பாடுகளது பலவீனம் ஈமானின் பலவீனமாகவே கணிக்கப்படுகிறது. எனவே, ஈமான் செயலாகப் பரிணமிக்காதபோது அதனால் எப்பயனுமில்லை என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.

அல்லாஹ் ஏதாவதொரு நன்மையின் பால் மக்களை அழைக்கும்போது அல்லது ஒரு தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்ளும்படி வேண்டும் போது அதனை ஈமானின்பாற்பட்ட அம்சமாகவே கருதுகிறான். “ஈமான்கொண்டவர்களே!” என விளிக்கும் அல்குர்ஆன் பின்னர் அவர்கள் கைக் கொள்ள வேண்டிய பண்புகளைப் பல இடங்களில் அடுக்கிக் கொண்டு செல்கிறது. “நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உண்மையாளர்களுடன் இருங்கள்.” (அத்தெளபா - 119) என்று கூறுகிறது.

எனவே, பலமான ஈமான் நிச்சயமாக நல்ல பண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்ற கருத்தை நபி (ஸல்) பல சந்தர்ப்பங்களில் கூறி வைத்தார்கள். உதாரணமாக.

“வெட்கமும் ஈமானும் இணை பிரியாதவை. இரண்டில் ஒன்று உயர்த்தப்படுமாயின் மற்றையதும் உயர்த்தப்படும்.” (அல்ஹாகிம், அத்தபரானி) என்றார்கள். எனவே இங்கு ஈமானுக்கும் பண்பாடுகளுக்குமிடையிலான இறுக்கமான பிணைப்புப் பற்றி மிகத் தெளிவாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தனது அண்டை வீட்டானை துன்புறுத்தி, நெருக்குதல்களைக் கொடுப்பவனைப் பற்றிய மார்க்கத்தின் தீர்ப்பு மிகக் கடினமானதாகும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மீது சத்தியமாக அவன் ஈமான் கொண்டவனாக மாட்டான்” என மூன்று தடவை கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! அவர் யார்?” என வினவப்பட்டது. அதற்கவர்கள்: “எவருடைய தீங்குகளிலிருந்து பக்கத்து வீட்டான் விமோசனமடையவில்லையோ அவர் தான் (ஈமான் கொண்டவராகமாட்டார்)” என்றார்கள். (புகாரி) இங்கும் கூட அண்டை வீட்டானுக்கு நோவினை செய்வது என்ற தீய பண்பு உண்மை விசுவாசியிடம் இருக்கமாட்டாது எனக் கூறப்படுகிறது.

அது மாத்திரமன்றி, உண்மை முஃமின் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவன் வீணான, தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்கள் பற்றிப் பேசி, தன்னையும் பிறரையும் சங்கடத்துக்கு உள்ளாக்கமாட்டான் என்ற கருத்தைக் கூற வந்த நபியவர்கள்: “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும். அல்லது மெளனமாக இருக்கட்டும்” என்றார்கள் (புகாரி)

எனவே, ஒழுக்கவிழுமியங்கள் ஈமானுடன் இரண்டரக் கலந்ததாக இருக்கும் என்பதையும் துர்க்குணங்கள் இருக்குமிடத்தில் ஈமான் இருக்க மாட்டாது என்பதையும் விளக்கும் இது போன்ற பல நபிமொழிகள் இருப்பதை நாம் காண முடிகிறது.

ஒழுக்கமும் இபாதத்களும்

மேலும், நற்குணங்களைக் கைக்கொள்ளாத ஒருவர் அல்லது துர்க்குணங்களைக் கொண்டுள்ள ஒருவர் புரியும் வணக்க வழிபாடுகள் கூட அல்லாஹ்வின் பார்வையில் எந்தப் பெறுமதியும் அறவை என்ற கருத்தை நபி (ஸல்) பல சந்தர்ப்பங்களில் கூறிவைத்தார்கள்:

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. அவள் தொழுகை, நோன்பு, ஸதகா போன்ற நற்கருமங்களில் அதிகமதிகம் ஈடுபடுவதாகவும் ஆனால், அவள் தனது அண்டை வீட்டாரை தனது வார்த்தைகள் மூலம் துன்புறுத்துவதாகவும் கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் “அவள் நரகத்திலிருப்பாள்” எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (அஹ்மத்)

மற்றுமொரு தடவை நபி (ஸல்) அவர்கள் தனது ஸஹாபாக்களைப் பார்த்து “ஓட்டாண்டி (திவாலா) யார் என உங்களுக்குத் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் “திர்ஹமோ உலக செல்வகங்ளோ இல்லாதிருப்பவரே எம்மிடத்தில் ஓட்டாண்டி” என்றார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எனது சமூகத்திலுள்ள ஓட்டாண்டி யாரென்றால் அவன் தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றியவனாக மறுமையில் வந்திருப்பான். அதேவேளை ஒருவரைத் தூஷித்திருப்பான். வேறு ஒருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பான்.

இன்னுமொருவரது சொத்துக்களை அநியாயமாகப் புசித்திருப்பான்: மற்றுமொருவரது இரத்தத்தை ஓட்டியிருப்பான், வேறு ஒருவரை அடித்திருப்பான். எனவே, இவனது நன்மைகள் இவனது அநீதிக்கு உட்பட்ட ஒவ்வொருவருக்கும் பங்கீடு செய்யப்படும்.

இவ்வாறு பங்கிடப்படும் போது சரியான தீர்ப்பு வழங்கப்பட முன்னர் இவனது நன்மைகள் முடிந்துவிடுமாயின் இவனது அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களது தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இவன் மீது போடப்படும். பின்னர் இவன் நரகில் எறியப்படுவான்.” (முஸ்லிம்) என்றார்கள்.

எனவே, ஒருவனது வணக்க வழிபாடுகள் எவ்வளவு அதிகமானதாக இருந்த போதிலும் அவனது பண்பாடுகள் அந்த அளவுக்கு வளராதபோது அல்லது அந்த வணக்கவாளியால் சமுதாயம் துன்பங்களை அனுபவிக்கும்போது அவன் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்குவதை எவராலும் தடுக்க முடியாது. அவன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவு செய்தால் மாத்திரம் போதாது.

அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவர நிறைவேற்றியாக வேண்டும் என்பதையே இந்த நபிமொழிகள் தெரிவிக்கின்றன. இவற்றிலிருந்து பண்பாடுகள் சீராக இருக்கின்றதா என்பதை வைத்தே வழிபாடுகள் கூட அங்கீகரிக்கப்படும் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. எனவே, ஒழுக்கப் பண்பாடுகளுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிய முடியும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!