-அ.செய்யதுஅலீ-
பொதுவாகவே வர்த்தக நோக்கில் வருடந்தோறும் சில தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சில தினங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. வர்த்தக நோக்கில் அனுஷ்டிக்கப்படும் தினங்களை குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவதும், கட்டுரைகளை எழுதுவதும் அந்த தினங்களுக்கு மேலும் செல்வாக்கையே பெற்றுத் தரும் என்பது எனது கருத்து.
காதலர் தின கொண்டாட்டத்தின் பின்னணியும் வர்த்தகமே. என்றாலும் கலாச்சார ரீதியான, பண்பாட்டை சீரழிக்கும் அம்சங்களும் இத்தினத்தையொட்டி நடைபெறுவது குறித்தும், காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாசிச ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் போலி நாடகங்களை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை காதலர் தின கொண்டாட்டம் முடிந்த பிறகு எழுதப்படுகிறது.
மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு பல்வேறு உணர்வுகளையும் அளித்துள்ளான். அன்பு, இரக்கம், கோபம், தாகம், பசி போலவே காமமும், காதலும் மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள உணர்வுகளாகும். இந்த உணர்வு சில வேளைகளில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் வேளையில் மனிதன் அவனது இயல்பான தன்மையை விட்டும் விலகிவிடுகிறான்.
காதல் – அது மனிதர்களிடம் ஏற்படும் இனிமையான உணர்வு. அந்த உணர்வுக்கு நாகரீகமான அந்தஸ்தை அளிக்கும் மனிதன் கலாச்சாரத்தில் உயர்ந்தவனாக மாறுகிறான். பெரும்பாலான மனிதர்கள் காதல் என்பதற்கு தவறான வியாக்கியானங்களையும், அதனை களங்கப்படுத்தும் முயற்சிகளையும் தான் இதுநாள் வரை செய்து வருகின்றனர். அத்தகைய ஒரு இழிவாகத்தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பிப்ரவரி 14- காதலர் தினத்தையும் நாம் காணவேண்டும்.
காதலை கடைச்சரக்காக மாற்றியவர்கள் மேற்கத்தியர்களே! ‘West is best Rest is Worst’ என்ற சாமுவேல் ஹண்டிங்டனால் புகழப்படும் மேற்கத்திய கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கம்தான் இன்று உலகின் பலநாடுகளிலும் சீரழிவை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பும் அசுர வேகத்தில் முன்னேற்றமடைந்து வரும் காலக்கட்டத்தில் கலாச்சார படையெடுப்புகளுக்கும் எவ்வித குறையும் இருக்கப் போவதில்லை. மேற்கத்தியர்கள் இந்த உலகிற்கு பல கண்டுபிடிப்புகளை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்திய கலாச்சாரம் பண்பாட்டு சீரழிவை உருவாக்கவே உதவக்கூடியது. மேற்குலக நாடுகளில் வழக்கொழிந்துவரும் இத்தினம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் செல்வாக்கு பெற்று வருவதை காண்கிறோம். வழக்கொழிந்து விட்டது என்றால் அதன் பொருள் அந்த நாடுகளெல்லாம் கலாச்சார ரீதியாக முன்னேற்றமடைந்து விட்டார்கள் என்பது அர்த்தம் அல்ல. அதைவிட மோசமான கலாச்சாரம்தான் அங்கு நிலவி வருகிறது.
உணர்ச்சிகளின் உந்துலால் எழும் வேட்கையையும், ஹார்மோன்களின் எழுச்சியையும் காதலாக சித்தரித்து அதன் பின்னணியில் சில கதைகளையும் கட்டிவிட்டு அதனை வர்த்தக சந்தையில் அமோக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது முதலாளித்துவம்.
‘வேலண்டைன்ஸ் டே’ என அழைக்கப்படும் இந்த காதலர் தினம் உருவானது குறித்து பல்வேறு கதைகள் புனையப்படுகின்றன.
நான்காவது நூற்றாண்டில் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த வேலன்டைன் கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.
கி.பி.496-ல் போப் கிளாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.
துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார். இருப்பினும் கிறிஸ்தவக் கதைகளில் விதவிதமாக 50 வேலன்டைன்கள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன.
ஒரு கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு ‘காதல் துறவி’யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக் காவலரின் மகளை அவர் காதலித்தாராம்.
இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரஞ்சு அரசு, கி.பி.1776-ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது. அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.
இங்கிலாந்தில் ‘புரித்தான்கள்’ என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார். இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகிற்கு அறிமுகமாகியது.
வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர். கி.பி. 1840ல் எஸ்தர் ஏ. ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர் தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.(மேற்கோள்:இம்பாக்ட்இண்டர்நேசனல்,விடியல்வெள்ளி)
இதன்பிறகு பணம் கொழிக்கும் தொழிற்சாலையாக வேலண்டைன்ஸ் டே அமோக வளர்ச்சியை அடைந்தது.
மேற்குலகில் காதலின் தேடுதலுக்கு ஒரு கதையை கூறுகிறார்கள்: ஆதியில் மனிதன் நான்கு கால்களுடனும் நான்கு கைகளுடனும் ஒரு தலை ஆனால் இரு முகங்களுடனும்தான் இருந்தானாம். அவனது ஆற்றலினால் அச்சுறுத்தப்பட்ட கடவுளர்கள் கூடி விவாதித்தனராம். பின் ஸீயஸ் கடவுளின் ஆலோசனைப்படி, மனிதன் இருபாதியாக வெட்டப்பட்டு அவன் தன் மறு பாதியைத் தேடி அலைவதிலேயே தன் ஆற்றலைச் செலவிடும்படி சபிக்கப்பட்டானாம். இந்தத் தேடலை எளிதாக்கும் பொருட்டு பொருத்தமான காதலரை அறிமுகப்படுத்தவென்றே பல டேடிங் ஏஜென்ஸிகளும், ஆலோசகர்களும் மேலைநாடுகளில் உண்டு. ஆனால் இப்போது டேடிங் இணையதளங்கள்தான் இந்த வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி ஒரு இணையதளமான கெமிஸ்ட்ரி.காம் தான் மானுடவியல் அறிஞரான ஹெலன் ஃபிஷரின் காதலை குறித்த ஆராய்ச்சிக்கு நிதி அளித்திருக்கிறது.
ஃபிஷர், தமது ஆராய்ச்சியில் மனிதர்களின் மூளையின் ஒருபகுதி அவர்கள் தங்கள் காதலர்களின் புகைப்படத்தைக் கண்டபோது ஒளிர்ந்ததைக் கண்டறிந்தார். எனவே காதல், ஆரம்ப கட்டத்தில் கலவியைக் குறித்த உந்துதலே என்கிறார். ஃபிஷர் தனது நூலில் டெஸ்டோஸ்டீரான், எஸ்டோரஜன் என்ற இரு ஹார்மோன்களுடன் டோபமைன் மற்றும் செரோடோனின் என்ற இரு வேதிப் பொருட்களுமே நாம் யாரால் கவரப்படுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன என்கிறார். ஆகவே ஃபிஷரின் ஆராய்ச்சியில் காதலுக்கு முன்னுரிமை காமமும், உணர்வுப்பூர்வமான காதலுக்கு இரண்டாவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபிஷரின் ஆராய்ச்சி முடிவுகளுக்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னணி சங்க்பரிவார வகையறாக்கள் நடத்திவரும் அரசியல் கேலிக்கூத்தானது. தமிழகத்தில் இராமகோபால அய்யர் காதலர் தினம் பண்பாட்டு சீரழிவு என கத்தும் வேளையில் கர்நாடகா மாநிலத்தில் ஸ்ரீராமசேனாவின் தொண்டர்கள் பஃபுகளில் கூடும் பெண்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். பெண்களை தானமாக கோயிலுக்கு கொடையாக அளித்து அங்கு முக்கிய புள்ளிகளின் இச்சைகளை தணிக்கும் தாசிகளாக வலம்வரச் செய்யும் கோட்பாடுகளை கொள்கையாக ஏற்றுக்கொள்ளும் இந்த குள்ளநரி கும்பல்கள் பண்பாட்டை பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
பண்பாட்டு சீரழிவுகளை உருவாக்கும் மீடியாக்களையோ, அதற்கு துணைபோகும் அரசுகளையோ இவர்கள் விமர்சிப்பதில்லை. டிஸ்கோத்தேகள் மற்றும் கிளப்புகளில் நடத்துவோருக்கு எதிராக இவர்கள் என்றாவது போராட்டம் நடத்தியிருக்கின்றார்களா? திரைப்படம் என்ற காட்சி ஊடகம் விதைக்கும் காம கண்றாவிகளுக்கு எதிராக போர் குரலை என்றாவது எழுப்பியிருப்பார்களா?
இவர்களின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது பண்பாடு இல்லை பார்ப்பன வாதமாகும். மதவாத அரசியலுக்காகவும், இனத் தூய்மைக்காகவும் தான் ஹிந்து முன்னணி போன்ற சங்க்பரிவார கும்பல்கள் காதலுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளனர்.
சாதிக் கலப்பு திருமணங்களை தடுப்பதே இவர்களது நோக்கமாகும். சாதிவெறிப் பிடித்த வடமாநிலங்களில் கெளரவ கொலைகளை நிகழ்த்திய கல் நெஞ்சக்காரர்களின் உணர்வுகள்தாம் இராமகோபாலன் கும்பல்களிடம் காணப்படுகிறது. பண்பாடுகளின் மீது இவர்களுக்கு அவ்வளவு தூரம் அக்கறையிருக்குமானால் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அசிங்கமான சிற்பங்களை கோயில்களிலிருந்து அகற்றுவதற்கு போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். காஞ்சி காமகோடி, நித்யானாந்தா என தொடர்ந்து வெளிவரும் சாமியார்களின் காமலீலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக ஹிந்துத்துவத்தின் பெயரால் அவர்களை பாதுகாக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இனப் படுகொலைகள், கலவரங்களின் போது சிறுபான்மை சமூக பெண்களின் மானத்தை பறித்து அவர்களை கொடூரமாக கொலைச் செய்யும் இந்த படுபாதகர்களுக்கு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் குறித்து பேச என்ன அருகதை உள்ளது. ஆகவே நாம் இத்தகைய பண்பாட்டு கோஷம் எழுப்பும் காவி கயவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இஸ்லாத்தை பொறுத்தவரை உணர்வுகளுக்கு உன்னதமான இடத்தை வழங்கிய மார்க்கமாகும். காதலுக்கும் இஸ்லாத்தில் இடம் உண்டு. ஆனால், இன்றைய கலாச்சார கருவறுப்பு காதலை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.
திருமணத்திற்கு முன்னால் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர் ஒரு பெண்ணை விரும்புவதையோ, அவளை திருமணம் செய்ய விரும்புவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை.
கீழ்கண்ட இறைவசனமும், இறை தூதரின் வழிமுறையும் அதற்கு சான்றாக உள்ளன.
“(கணவனை இழந்த பெண் காத்திருக்கும்(இத்தா) காலக்கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடைமாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்)விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்!”
“உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!” (திருக்குர்ஆன் 2:234,235)
நபித் தோழர் ஒருவர் பெண்ணை மணமுடிக்க நிச்சயம் பேசியதை கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள், நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்வீராக: ஏனெனில், அது உங்களிருவருக்கிடையே அன்பையும், நட்பையும், இணக்கத்ததையும் ஏற்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். ஆதாரம்:அஹ்மத்,திர்மிதி
ஆனால், காதல் என்ற பெயரால் தனிமையில் இருப்பது, சுற்றித் திரிவது உள்ளிட்ட இஸ்லாம் தடுத்த காரியங்களை செய்வதோ கூடாது.
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:புஹாரி
நூல்:புஹாரி
உங்களில் எவரும் (அந்நியப்)பெண்ணுடன் தனித்து இருக்கவேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
திருமண ஒப்பந்தத்திற்கு பிறகே ஓர் பெண் ஓர் ஆணுக்கு சொந்தமாகிறாள். கணவன்-மனைவி இடையே உருவாகும் பாசப் பிணைப்பையும், பரஸ்பர இரக்கத்தையும் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
“நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” அல்குர்ஆன்(30 : 21)
இன்று அறியாமைக் கால அந்நிய கலாச்சாரத்தின் தாக்குதல்களுக்கு முஸ்லிம் சமுதாயமும் பலியாகி வருவது பரிதாபத்திற்குரியது. நமது சிந்தனைகளை கொலைச் செய்யும் இத்தகைய கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகளில் இருந்து முஸ்லிம்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் இலட்சியமாக கொண்ட ஆண்களும், பெண்களும் எப்படி தங்களது பணிகளை அமைத்துக் கொள்வார்கள் என்பதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
“முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்;(ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்)கொடுத்து வருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணைபுரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்9:71).
இஸ்லாத்தை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வசனத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதோடு பிறருக்கும் இப்பாடத்தை கற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment