animated gif how to

எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா ? – பசீர் ஷேகுதாவூத்

February 08, 2012 |


ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரசின் மறைந்த ஸ்த்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா என்பதை தற்போதாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் முபீன் பெண்டேசன் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.2.2012) நடைபெற்ற வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத்,
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்த்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் தொடர்பில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய சந்தேகம் உள்ளது.
அஷ்ரபின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த விசாரணை ஆணைக்குழு தமது அறிக்கையினை சமர்ப்பித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அந்த குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அந்த அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கேட்கின்றேன்.
இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து சமாதனம் ஏற்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபினது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும.
அவரின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. இவரின் மரணம் சதியா அல்லது விபத்தா என்பதை அறிய வேண்டியுள்ளது.
இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்பும் முஸ்லிம்களின் பலம் என்ன?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்த பின்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குரிய அபிவிருத்தியின் பங்கு சரியாக கிடைத்தள்ளதா என்பதை நாம் கேட்கவேண்டியுள்ளது.
முஸ்லிம் கட்சிகளுக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் ஆணையைப் பெற்ற பெரிய முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குரிய அபிவிருத்தியின் பங்கை சரியாக அரசாங்கம் வழங்க வேண்டும்.
இதை தீர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு முண்டு.
அரசாங்கம் 18வது திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதற்கு முதன் முதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர்.
சிறிய கட்சிகள் யோசித்துக்கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் ஆதரவு தெரிவித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 3, 4, 5வது தடவைகள் தேர்தலில் போட்டியிடமுடியும் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு அவரை வெற்றியடையச்செய்வதற்கு காங்கிரஸ் ஆதரவையும் இதன் மூலம் வழங்கியுள்ளது.
இந் நிலையில் அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குரிய பங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் உண்டு.
அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் இவ்வாறான உதவிகளை வழங்க முடிந்துள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் எமது பேரம் பேசும் சக்தியினை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலுமாகும்.
இந்த சந்தர்ப்பங்களின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் அரசாங்கம் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் தோல்வியடையவில்லை.
கடந்தகால பாராளுமன்ற தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியடையவில்லை.
தனி நபர்கள் தோல்வியடைந்துள்ளார்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கடந்த கால பாராளுமன்ற தேர்தல்களின் போது மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் பிரதேசமாவது நூறுவீதம் ஒன்று பட்டு காங்கிரசின் பக்கம் நின்றுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகள் கிடைத்து பாராளுமன்ற பிரதி நிதித்துவம் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்தது.
எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு பிரதேசமாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்காக நூறு விதம் ஒன்றுபடும். அதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய ஆயத்தமாக உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தியினை இல்லாமல் செய்ய முற்படக்கூடாது” எனவும் பிரதியமைச்சர் பசீர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன, எம்.ஜெமீல், எம்.எம்.இஸ்மாயில் உட்பட பலரும் கலந்து கொணடனர்.
தகவல் kattankudi.info

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!