-றவூப் ஸெய்ன்-
சமீபத்திய அறபுப் புரட்சிகளின்போது மிகவும் பிரபலம் பெற்ற அறப் லீக் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. ஒருபுறம் அதன் சாதனைகள் குறித்து சிலாகிக்கப்படுகின்றபோது இன்னொரு புறம் அதற்கெதிரான தீவிர விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அரை நூற்றாண்டில் அறப் லீக் அடைந்த சாதனைகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஒரு நேர்மையான மதிப்பீடு அவசியமாகியுள்ள சூழ்நிலையில், இப்பத்தி அது குறித்து விளக்க முயல்கின்றது.
1945 மார்ச் 25 இல் ஆறு நாடுகளுடன் தொடங்கிய இக்கூட்டமைப்பில் தற்போது 22 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அத்தோடு நான்கு பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அங்கத்துவ நாடுகளிடையே கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் பலதரப்புப் பொருளாதார அரசியல் நலன்களை எட்டுவதே இவ்வமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கென கிளை நிறுவனங்களும் செயல்படுகின்றன.
அறபு லீக் கல்வி, கலாசார, விஞ்ஞான அமையம் (Alesco), அறபுப் பொருளாதார ஒன்றியம் (CAEU) என்பன இக்குறிக்கோளை அடைவதற்கென செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் எகிப்து,ஈரான், ஜோர்தான், சவூதி அறேபியா, சிரியா, யெமன் ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்தன.
தற்போது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள அறபைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து முஸ்லிம் நாடுகளையும் இவ்வமைப்பு உள்வாங்கியிருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதியிலேயே அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
அறபு லீக் பல்வேறு நோக்கங்களோடு செயல்பட்டு வருகின்றது. அரசியல், பொருளாதாரம்,பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற நான்கு பிரதான தளங்களில் செயல்பட்டு வரும் அறப் லீக்,பின்வரும் வேலைத் திட்டங்களிலும் கவனம் குவித்து வருகின்றது.
1. அறபு நாடுகளிலுள்ள பாடசாலைகளின் கலைத் திட்டத்தை மேம்படுத்தல்.
2. சிறுவர் நலன்களைப் பாதுகாத்தல்.
3. இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையை முன்னேற்றல்.
4. அறபுக் கலாச்சாரப் பாரம்பரியத்தை வளர்த்தல்.
5. அறபு இலக்கியத்தை மேம்படுத்தல்.
6. ஆய்வுகளை முன்னெடுத்தல்.
7. தொழில்நுட்ப வசதிகளைப் பகிர்தல்.
அறபு லீக் சமகால இஸ்லாமிய உலகிலுள்ள மிக முக்கியமான சர்வதேச நிறுவமாகத் திகழ்கின்றது. ஏனெனில், அறபு லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார வளமும் மக்கள் தொகையும் மிகவும் முக்கியமானவை. 13,000,000 சதுர கி.மீ. பரப்பை இதில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன. புவியியல் ரீதியில் ஆசியாவை மட்டுமன்றி,ஆபிரிக்காவையும் உள்ளடக்கியுள்ளது. பாலைவனங்கள் உள்ளிட்டு, மிகப் பரந்தளவிலான பசுமையான நிலங்களை, உலகின் மிக நீளமான நதிகளை, உயர் மலைத் தொடர்களை, அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய பரந்துபட்ட புவியியல் அதன் மிகப் பெரும் பலமாக உள்ளது. நைல் நதி,உயர் அட்லஸ் மலைத் தொடர் என்பவை அறப் லீக் அங்கத்துவ நாடுகளை ஊடறுக்கின்றன.
அறப் லீக்கின் கடந்த கால கல்வி, கலாச்சார வேலைத் திட்டங்கள் பாரியளவு வளர்ச்சி கண்டுள்ளன. மிகப் பெரும் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளும் இதில் உள்ளடங்கியிருப்பதால்,எண்ணெய் வளத்தின் பலாபலன்களை அறபு நாடுகளிடையே பகிர்வதற்கான வாய்ப்புள்ளது. மற்றும் சர்வதேச சந்தையில் இடம்பிடித்துள்ள Orascom, Etisalat போன்ற தொலைத்தொடர்பு கைத்தொழில் நிறுவனங்கள் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றன.
இது தவிர, அறபு நாடுகளிலுள்ள இயற்கை எரிவாயுவை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதற்கான அறபு எரிவாயுக் குழாய்த் திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து, ஈராக்கில் உள்ள எரிவாயு ஜோர்தான், சிரியா, லெபனான், துருக்கி என்பவற்றுக்கு குழாய்த் திட்டம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2008 முதல் அமுலாகி வரும் Gafta எனப்படும் சுங்கவரி நீக்கத் திட்டம் அறபு நாடுகளுக்கு பயனளித்து வருகின்றது. இதன் மூலம் அறபு நாட்டு உற்பத்திகளில் 95வீதமானவற்றுக்கான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம் 340,000,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள அறப் லீக்கின் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நிலவி வரும் பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதில் அறப் லீக் முழு வெற்றி காணவில்லை என்ற விமர்சனம் கறாராக முன்வைக்கப்படுகின்றது.
அறபு நாடுகளின் உணவுத் தொட்டி என அழைக்கப்படும் சூடான், மிகவும் வளமான நிலத்தைக் கொண்டுள்ளது. அங்கு விவசாயத்தை தொழில்நுட்ப மயமாக்குவதன் மூலம் முழு அறபு முஸ்லிம் நாடுகளின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்யலாம். ஆனால் சூடானில் அறபு லீக்கில் அங்கத்துவம் பெறும் குவைத், சவூதி அறேபியா போன்ற நாடுகள் எதிர்பார்த்தளவு முதலீடு செய்யவில்லை.
கொமொரோஸ், ஜிபூத்தி, மொரிட்டானியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க அறபு முஸ்லிம் நாடுகளும் அறப் லீக்கில் அங்கத்துவம் வகித்து வருகின்றன. சவூதி அறேபியா, குவைத் என்பவற்றின் தலாவீத வருமானம் 35,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள நிலையில்,சோமாலியாவில் 250 டொலரையேனும் பெறாத மக்கள் பட்டினியோடு போராடும் நிலை நீடிக்கின்றது.
அறப் லீக்கின் பொருளாதாரத் திட்டம் சரியான திசை வழியில் செல்கின்றதா எனும் கேள்வியை இது எழுப்பியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களை விட அறப் லீக்கின் அரசியல் செயல்பாடுகள் வினைத் திறனற்றவை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 1945 இல் அறப் லீக் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இது வரை 32 உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் தீர்மானங்கள் எந்தளவுக்கு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது பெருத்த கேள்வியாகும்.
22 அங்கத்துவ நாடுகளில் பலஸ்தீனும் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். கொள்கை அளவில் பலஸ்தீனை ஓர் இறைமையுள்ள தேசமாக அறப் லீக் அங்கீகரித்துள்ளபோதும் பலஸ்தீன் நெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதில் அறப் லீக் தோல்வி கண்டுள்ளது. இவ்வமைப்பிலுள்ள சில நாடுகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே இத்தோல்விக்கான மூல காரணம் எனலாம்.
2002 றியாதில் கூடிய அறப் லீக்கின் உச்சி மாநாட்டில் சவூதி அறேபியா முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரேலுடனான அறபு நாடுகளின் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், அதற்குப் பகரமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து இஸ்ரேல் பின்வாங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அதன் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
2007 இல் மீண்டும் சவூதியின் திட்டம் அறப் லீக்கில் அங்கீகரிக்கப்பட்டது. எனினும்,இஸ்ரேலுடனான உறவுகளை அறபு நாடுகள் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததே ஒழிய, சவூதி அறேபியா முன்வைத்த எந்தவொரு திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.
2010 ஜூன் மாதம் முன்னாள் செயலாளர் அம்ர் மூஸா காஸாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இஸ்ரேல் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு பொருளாதாரத்தடை நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
அறப் லீக்கிடம் உள்ள எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு என்பவற்றை அவ்வமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகக் கையாள முன்வருமாயின், பலஸ்தீனர்களுக்கு நீதியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம். அறப் லீக் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.
ஆனால், அறப் லீக்கிலுள்ள சில நாடுகள் மறைமுகமாக இஸ்ரேலின் இருப்பை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளமையால், பலஸ்தீன் விவகாரம் குறித்து அறப் லீக் எதிர்கொள்ளும் விமர்சனங்களை ஒருபோதும் துடைத்தழிக்க முடியாத துரதிஷ்டம் தொடர்கின்றது.
சிரிய விவகாரத்தில் சில முற்போக்கான தீர்மானங்களை அறப் லீக் எடுத்துள்ளபோதும் உள்ளார்ந்த அரசியல் நெருக்கடிகளைக் கையாள்வது ஒரு பெரும் பலப்பரீட்சையை உருவாக்கியுள்ளது. அறப் லீக் அதில் வெற்றி பெற வேண்டியுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment