ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் தடை அமுலில் இருந்தாலும், ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை இந்தியா குறைக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரணாப் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:-
சவூதி அரேபியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிச் செய்யப்பட்டாலும், வளர்ந்து வரும் பொருளாதார சக்தி என்ற நிலையில் எங்களது எரிசக்தி தேவைகளை நிறைவுச்செய்யும் நாடுகளில் ஈரானுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆகையால் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை குறைக்க இயலாது.
வருடத்தில் 1100 லட்சம் டன் கச்சா எண்ணெயை இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஈரானின் எண்ணெய்க்கு தடை விதித்திருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை ஈரான் முக்கியமான நாடாகும்.
இந்தியாவிற்கு புறத்திறனீட்ட(out soucing) ஒப்பந்தங்களை வழங்குவதை நிறுத்த முயலும் அமெரிக்காவின் நடவடிக்கை சுயமாக தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமமாகும். பொருளாதார பாதுகாப்பு வாதம் ஒரு நாட்டிற்கும் பயன் தராது. மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடற்ற வரத்தும், வரி இல்லா வர்த்தகம் ஆகியன ஆதரவான பலன்களை ஏற்படுத்தியுள்ளன. பொருளாதார பாதுகாப்பு கொள்கையை கைவிடுவதுதான் நாடுகளுக்கு விரும்பத்தக்கது.
சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்த தீர்மானம் தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடனே அதனை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்
உலகின் நான்காவது கச்சா எண்ணெய் நுகர்வு நாடான இந்தியா, சீனாவுக்கு அடுத்த படியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
ஈரானின் அணுசக்தி சோதனைகளின் நோக்கம் அணு ஆயுதம் தயாரிப்பதே! என குற்றம் சாட்டி மேற்கத்திய நாடுகள் ஈரானின் மீது தடை விதித்துள்ளன. ஈரானின் மத்திய வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களை குறி வைக்கும் மசோதாவில் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டிருந்தார். அதற்கு பிறகு இந்தியா உள்பட ஆசிய நாடுகள், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்வதை குறைக்க அமெரிக்கா நிர்பந்தம் அளித்து வருகிறது.
அமெரிக்க முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைப்பதுதான் பிரணாபின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment