animated gif how to

சுயநலத்தினால் பிளவுபடுமா முஸ்லிம் காங்கிரஸ்?

January 05, 2012 |

றிப்தி அலி- தமிழ்மிரர்
திஸ்ஸமஹரமவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் விசேட மாநாட்டில் சோமவன்ஸ அமரசிங்க மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணிக்குள் நிலவிய உட்கட்சி பூசலுக்கு ஏதோ ஒரு வழியாக தீர்வு காணப்பட்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராக தெரிவானார். இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு அக்கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்.

ஆனால் தலைவருக்கான தேர்தல் முடிவடைந்தாலும் உட்கட்சி பூசல் தொடந்துகொண்டே செல்கிறது. இதற்கிணங்க ரணில் அணி மற்றும் சஜித் அணி என இரண்டு அணிகள் செயற்படுகின்றன. 

இதற்கு மேலதிகமாக இரு அணியினரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்துவதுடன் ஊடகங்களில் ஒருவரை ஒருவர் பகிரங்கமாகவும் விமர்ச்சிக்கின்றனர்.

இவ்வாறு சிங்கள மக்களின் ஆதரவினை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் உட்கட்சி பூசல் நிலவுகின்ற நிலையில், இந்த உட்கட்சி பூசல், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கொண்ட கட்சி என மார்தட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் விட்டுவிடவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது முதல் நிலவுகின்ற உட்கட்சி பூசல் காரணமாக கட்சியை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். இவர்களில் சிலர் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் வேறு கட்சிகளை உருவாக்கி செயற்படுகின்றனர். இன்னொரு குழுவினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற பெரிய கட்சிகளின் உறுப்புரிமையையும் பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவுக்கு முன்னர் என்றும் இரண்டாவதாக அவரின் மறைவிற்கு பின்னர் என்றும் பிரிக்க முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொது செயலாளராக செயற்பட்ட சேகு இஸ்ஸதீன் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் என்றழைக்கப்படும் எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட சிலரே 2000ஆம் ஆண்டு அமைச்சர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட முன்னர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.

ஆனால், சேகு இஸ்ஸதீன் - ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி என கட்சி மாறி பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து - தற்போது அதன் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை வகித்து வகின்றார். 

மற்றவரான பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட போது, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். பின்னர் அக்கட்சியினால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினாராக கடமையாற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து பிரதியமைச்சராக செயற்பட்ட நிலையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்லியடைந்தார். இவை முதலாவது பிரிவாகும்.

ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் மறைவையடுத்து ரவூப் ஹக்கீம் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டவுடனேயே அஷ்ரபின் மனைவி பேரியல் அஷ்ரப் கட்சியை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய போது அஷ்ரபுடன் நெருங்கிச் செயற்பட்ட பலர் அவருடன் சென்றதுடன் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியையும் பறித்து சென்றனர். இவருடன் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் பிரிந்து சென்றார்.

மீண்டும் இணைந்த ஹிஸ்புல்லா கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரிந்து சென்றார்.

இதனையடுத்து, 2002ஆம் ஆண்டு கால பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக செயற்பட்ட ரவூப் ஹக்கீம், அரசாங்கத்திற்கும் தமீழிழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

இதன்போது, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவிருந்த அதாலாவுல்லா தலைமையிலான குழுவினர் கட்சி தலைமை பதவியை ரவூப் ஹக்கீமிடமிருந்து பறிக்க முயற்சித்தனர்.

இந்த முயற்சி பயனளிக்காமையினால் அதாவுல்லா கட்சியை விட்டு வெளியேறினார். அவருடன் சில கட்சி முக்கியஸ்தர்களும் வெளியேறினர்.

பின்னர் அவர், அஷ்ரப் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து இன்று வரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக செற்பட்டு வருகின்றார்.

அஷ்ரப் காங்கிரஸ் - தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என மாற்றப்பட்டு பின்னர் தேசிய காங்கிரஸாக மாற்றப்பட்டது.

இதேவேளை 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் வெளியேறி அதாவுல்லா தலைமையிலான தேசிய முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

பின்னர் எச்.எம்.எம்.ஹரீஸ் - முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட நிலையில் அன்வர் இஸ்மாயில் மரணமாகினார்.

2005ஆம் ஆண்டு கால பகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்றபட்ட றிசாட் பதியுதீன், எம்.எஸ்.அமீர் அலி மற்றும் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோருடன் இன்னும் சில முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.

இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்ததுடன் அமைச்சர்களாகவும் செயற்பட்டனர். இந்நிலையில் அமைச்சர் றிசாட் தலைமையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. 

இதனையடுத்து தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட ஏ.பாயிஸ் மற்றும் எஸ்.நிஜாமுடீதீன் ஆகியோரும் 2009 ஆண்டு கால பகுதியில் கட்சியை விட்டு வெளியேறினர். இவை இரண்டாவது பிரிவாகும்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு வெளியேறி அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகித்தவர்கள், கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டனர்.

இவர்களில் ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தவிர்ந்த ஏனைய அனைவரும் தோல்வியடைந்தனர்.

இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் - அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்ற கோஷம் கட்சி போராளி முதல் உயர் மட்ட உறுப்பினர் வரை எழுப்பப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் 18ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானித்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது. 

இதனால் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு நீதி அமைச்சர் பதவியும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திற்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு துறை பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இதன்போது, இன்னும் சில முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது இறுதி நேரத்தில் கிடைக்காமல் போனது.

இதனையடுத்து முஸ்லிம்கள் தொடர்பாக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வாய் மூடி மௌனியாக இருக்கும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டது.

இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட நிலையில் முஸ்லிம் காங்கிரஸிற்குள் பல உட்கட்சி பூசல்கள் இடம்பெறத்தொடங்கின.

அதாவது, கல்முனை மாநாகர சபை தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பரை மேயராக்குவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை தோற்கடிக்கலாம் என்ற எண்ணத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத் மற்றும் ஜெமீல் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.


இதனால் சட்டத்தரணி நிசாம் காரியப்பரை தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய எம்.பி.ஹரீஸ் இறுதியில் வெற்றி பெற்றார்.
எவ்வாறாயினும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேயராக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சிறியதொரு பிளவும் கட்சிக்குள் எற்பட்டிருக்கும். ஆனால் சிராஸ் மீராசாஹிப் வெற்றிபெற்றதால் அது தவிர்க்கப்பட்டது.


இதேபோன்று, அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையில்சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் இறங்கினர். எனினும் அது தோல்வியில் முடிவடைந்தது.

அடுத்து கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் ஜவாத் ஆகியோருக்கிடையில் நீண்ட காலமாக பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சிப்பர்.

இது எந்தளவிற்கு என்றால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் கூட்டத்திலும் விமர்சிப்பதும் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தலைவர் கண்டுகொள்ளவதாக தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் தான் அடுத்த உட்கட்சி பூசலொன்று முஸ்லிம் காங்கிரஸிற்குள்   தற்போது ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதாவது அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது தனக்கு அமைச்சர் பதவி வழங்கினால் மாத்திரமே ஏனைய எம்.பிக்களுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கலாம் என முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, தங்களுக்கு பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பாத்திருந்த எம்.பிக்களுக்கு இச்செய்தி பாரிய இடியாக மாறியுள்ளது.

தங்களுக்கு பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாய் திறக்காமல், அரசாங்கத்தின் செல்ல பிள்ளைகளாகவே செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க பிரதியமைச்சு பதவி கிடைக்காமல் போனால் சுமார் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசின் பக்கம் சென்று பிரதி அமைச்சு பதவியை பெறவும் தயாராகவுள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.

அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளினால் சில மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

இப்படியான புறக்கணிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காகவே பிரதி அமைச்சு பதவியை கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு, பிரதி அமைச்சர் பதவி தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளமையை உணர்ந்த அமைச்சர் றிசாட் பதியுதீன் தனது கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக்கிற்கு பிரதி அமைச்சு பதவி வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும். அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் விஜயம் மேற்கொள்வதற்கு டயர் எரித்து தடை விதிக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் பல முன்னர் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சு பதவியினை வழங்காமல் அரசாங்கத்தின் மீது அதிருப்தியினை ஏற்படுத்த முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் எதுவும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகியவற்றின் அபிவிருத்தி குழு தலைவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது இதற்கு உதாரணமாகும்.

அரச தரப்புக்கு தாவுவதற்கு தயாராகவுள்ள மூன்று  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து கொண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவே சிரேஷ்ட உறுப்பினர் முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட வைக்கும் முயற்சியில் பல வெளிநாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில், முஸ்லிம் முதலமைச்சரின் அவசியம் தொடர்பாகவும் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பாகவும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படியான மாறுபட்ட கருத்துக்கள் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியி;ட வேண்டும் என்பதற்கு சாதகதமாகவே உள்ளது.

இது போன்ற கருத்துக்களினால் முஸ்லிம் காங்கிரஸிற்குள் பாரிய பிளவுகள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் கட்சி தலைமை சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சமூகத்தின் நலன் கருதி சுய நலமின்றி செயற்பட வேண்டிய தேவை கட்சி தலைமைக்கு இருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பீடம் சமூகம் பற்றி சிந்திக்குமா? அல்லது சுயநலத்திற்காக கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துமா?

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!