கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ்
(பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். ஆசிரியர் ஏ.ஆர்.எம். இஸ்மாயில், எஸ்.எம். சல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவரது கணவர் எஸ். இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
கல்விப் பணியிலும் இஸ்லாமிய தஃவாப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள், தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கடமையாற்றி வருகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நேர்காணல்: இன்ஸாப் ஸலாஹுத்தீன்
* உங்களது கல்விப் பயணம் பற்றி முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறோம்...
எனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பயின்றேன். அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1995 இல் B.Sc. சிறப்புப் பட்டம் பெற்று, பின்னர் பேராதனை விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்டப் பின்படிப்பு நிறுவகத்தில் (PGIS) 1997 இல் M.Sc. பட்டத்தினை நிறைவு செய்து அதனைத் தொடர்ந்து பேராதனை விவசாயக் கற்கைகளுக்கான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தில் (PGIA) 2005 ஆம் ஆண்டில் எனது Ph.D. படிப்பினைப் பூர்த்தி செய்தேன்.
Ph.D. கற்கைநெறியில் அடைந்த சிறந்த பெறுபேற்றிற்காக "ஜெனரல். சேர். ஜோன் கொத்தலாவல ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை" இலங்கை PGIA இன் இருபத்தி நான்கு வருடகால வரலாற்றில் முதன்முதலில் பெற்ற Ph.D. மாணவர் என்ற சிறப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்.
* சமூகப் பணிகளில் பெண்களது ஈடுபாடு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தனியாள் வாழ்க்கை சமூக வாழ்க்கை என்ற புரிதல் வழக்கில் இருப்பதைச் சுட்டியே தங்களின் இந்த வினா எழுவதாக நான் கருதுகிறேன். எந்தவொரு ஆணாயினும் பெண்ணாயினும் தனித்து ஒதுங்கி வாழ இயலாது. இதைத்தான் பேச்சுவழக்கில் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்கிறார்கள்.
ஆனால், இஸ்லாமியப் பார்வையில் தனிமனிதன் சமூகத்தின் ஒரு அலகு. ஒருவர் மற்றவரை நேசிக்கவும் மதிக்கவும் அவரின் உரிமைகளைப் பேணவும் அவரின் தேவைகளை நிறைவேற்றவும் அவருடன் கலந்து வாழவும் கஷ்டங்களில் அவரைச் சுமக்கவும் பொறுப்பு உள்ளவர்.
இவ்வாறு அடுத்தவர் பற்றிய பொறுப்புணர்வுகளோடும் தியாகங்களோடும் வாழும் ஒருவர் பல்வேறு பொதுச் செயற் திட்டங்களில் ஈடுபட்டு உழைக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இதுதான் சமூகப் பணியாகப் பார்க்கப்படுகிறது.
பெண்களைப் பொறுத்தவரையில் வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்ணாயின், அவரின் வீட்டிலிருந்து காரியாலயம் வரை பணிக்கான களமும் சந்தர்ப்பங்களும் விரிந்து கிடக்கின்றன. இவர்கள் குடும்பரீதியான கடப்பாடுகள் மற்றும் அலுவலகக் கடமைப்பழுக்கள் என்பவற்றிற்கு உள்ளாகின்றனர். ஆனால், கணவன் மனைவிக்கு இடையிலான ஒருமித்த சிந்தனையும் வீட்டு வேலைகளில் புரிந்துணர்வும் ஒரு பெண்ணை சமூகத்தில் அதிக தூரம் பயணிக்கச் செய்ய முடியும்.
மறுதலையாக வேலைக்குச் செல்லாத பெண்களின் சமூகப் பங்களிப்பு மிகைத்திருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கில்லை. அவர்கள் சமூகப் பணிக்கான சந்தர்ப்பங்களைப் போதுமானளவு பயன்படுத்துவதில்லை என்றே நான் கருதுகின்றேன்.
ஸஹாபாப் பெண்மணிகள் தொடக்கம் இந்த நூற்றாண்டின் இஹ்வானியப் பெண்கள் அடங்கலாக எமது நாட்டின் தஃவாக் களத்திலும் பல வாழும் முன்னுதாரணங்கள் (Living exemplenary) எமக்குப் படிப்பினையாக உள்ளனர்.
* உங்களது ஆய்வுக் கட்டுரை பற்றிச் சொல்லுங்கள்?
விஞ்ஞான முதுமானிப் பட்டத்திற்காக “Post-harvest technology” என்ற தலைப்பில் ஆய்வொன்றைச் செய்திருந்தேன்.
அதன் பின்னர் எனது கலாநிதிப் பட்டத்திற்காக உயிரியல் தொழிநுட்பத்தில் (Biotechnology) “DNA Finger printing” தொடர்பான ஆய்வைச் செய்திருந்தேன். இத்துறையில் மேலதிகமான ஆய்வு ஒன்றிற்காக அமெரிக்காவின் மிச்சிக்கன் மாநில பல்கலைக் கழகத்தின் “post doctoral fellowship” இற்கு இலங்கையிலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
உயிரியலில் புரட்சிகளை ஏற்படுத்திவரும் இத்துறை தற்போது பல பல்கலைக்கழகங்களில் தனியான ஒரு துறையாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
* கல்வித் துறையில் பெண்களது ஈடுபாடு போதுமானதாக உள்ளதா?
முன்னரை விட நிலைமை தற்போது பரவாயில்லை. ஆனாலும் அது போதாது. ஏறத்தாழ எல்லாப் பிள்ளைகளும் பாடசாலை செல்கிறார்கள். அதேவேளை பின்தங்கிய கிராமங்களில், பாடசாலை இடைவிலகல் இன்னும் கணிசமாக இருக்கிறது.
க. பொ. த (சா/த) பரீட்சை, க. பொ. த (உ/த) பரீட்சைகளின் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவிகளுக்கு இன்று எத்தனையோ மாற்றுக் கல்வி வாய்ப்புக்கள் அரசினாலும் தனியார் துறைகளினாலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றை அதிகமானோர் பயன்படுத்துவதில்லை.
பல்கலைக் கழகங்களுக்கும் வேறு உயர்கல்வி நிறுவகங்களுக்கும் செல்லும் மாணவிகளுள் 98% ஆனோர் தமது முதலாவது பட்டத்துடன் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தை இழந்து விடுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் விஷேட நிபுணத்துவம் பெற்ற எத்தனை முஸ்லிம் பெண்கள் எம்மிடையே இருக்கின்றார்கள்? இது பற்றிய விழிப்புணர்வூட்டல் தொடரப்படுவது அவசியம்.
* நீங்கள் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் உயர் துறையில் கற்கும் போது விசேடமாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் உண்டா?
எனது பல்கலைக்கழகக் கல்வியிலிருந்து தொடர்கின்ற எல்லா விதமான மேற்படிப்புக்கள், செயலமர்வுகள் என்பன எல்லாம், முஸ்லிமல்லாத இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சமூகத்தில் அல்லது நாட்டிலே தான் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும், எனது இஸ்லாமிய அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் சவாலான நிர்ப்பந்தங்களை யாரும் ஏற்படுத்தவில்லை. இஸ்லாமியப் பெண்கள் பற்றிய ஒரு நல்ல புரிதல் எல்லா இடத்திலும் இருப்பது உறுதுணையாக இருக்கிறது.
அத்தோடு எல்லா மேற்படிப்புக்களும் வெளிநாட்டுப் பயணங்களும் எனது திருமணத்தின் பின்னரே இடம்பெற்று வருகின்றன. ஒரு குடும்பத் தலைவியாக, மனைவியாக, தாயாக இருந்து கொண்டு எனது பணிக்கூற்றை நோக்கி நான் பயணிப்பதற்கு ஆதரவாக கணவர், பெற்றார், குடும்ப உறவுகள், பிள்ளைகளின் புரிந்துணர்வுகளும் ஒத்தாசைகளும் கிடைப்பது முக்கியமான உந்து சக்திகளாகும்.
* ஒரு பெண் பீடாதிபதியாக இருந்து கொண்டு தஃவா பணியில் ஈடுபடுவதை சிரமமாக பார்கின்றீர்களா?
பீடாதிபதியாக இருந்து கொண்டு அதன் பணிகளில் குறைவிட முடியாது. அதேநேரம் தஃவா ஒருவர் மீதுள்ள இஸ்லாமியக் கடமை என்பதால் அதனை இரண்டாம் பட்சமாக்கவும் முடியாது. இரண்டும் அமானிதங்கள், இரண்டிலும் நேர்த்தி வேண்டும் என்பதால் சிரமமான காரியம்தான் ஆனால் செய்தாக வேண்டும். தற்போது ஜமாஅதுஸ் ஸலாமாவுடன் இணைந்து செயலாற்றக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இப்பணியில் பூரணமாகச் செயற்பட எண்ணியுள்ளேன்.
* கல்வித்துறையில் உயர் நிலை அடைந்த ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கல்வி ஒரு மூலதனம். அதில் முடியுமானளவு முதலீடு செய்ய வேண்டும். மாற்றமடைந்து வரும் தொழிநுட்ப உலகில் ஒவ்வொரு துறையிலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் ஒரு வெற்றிகரமான, இயங்கும் சமூகமாகத் திகழ வேண்டுமாயின் நிகழ்கால தொழிநுட்ப மாற்றங்களுடன் உடனுக்குடன் எம்மைப் புதுப்பித்துக் கொள்ள (update) வேண்டும்.
எதிர்கால நவீன உலகு இஸ்லாத்திற்கே. இஸ்லாமிய மயமாக்கப்படாத எந்தவொரு துறையும் ஒருநாள் ஒவ்வாமையாக ஒதுக்கப்பட்டுவிடும் அன்றேல் செயலிழந்துவிடும். எனவே ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வாழ்வியல், கல்வி, தொழில், வியாபாரம் என எல்லாத் துறைகளையும் இஸ்லாமிய மயமாக்கிக் கொள்ள உறுதிகொண்டு செயற்பட வேண்டும்.
* நீங்கள் விசேடமாக எதுவும் குறிப்பிட விரும்பினால்...
யாரும் வாழ்க்கையில் தோற்று விட்டதாக ஒருபோதும் எண்ணக் கூடாது. தோல்வியாக எமக்குத் தோன்றுவதில் அல்லாஹ் ஒரு நன்மையை மறைத்து வைத்திருக்க முடியும். எந்தவொரு தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகக் கருதவேண்டும். எல்லோருக்கும் சமமான சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொருவரின் திறமை முயற்சி அல்லாஹ்வின் நாட்டம் என்பவற்றிலேயே வெற்றிகள் தங்கியுள்ளன.
0 கருத்துரைகள் :
Post a Comment