animated gif how to

அதிகாரப் பகிர்வுக்கான பேச்சு வார்த்தைகள் குறித்து முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றுபட்டு ஆராய வேண்டும்.

December 13, 2011 |

December 13, 2011.... AL-IHZAN Local News

அஷ் ஷேய்க்- மஸிஹுதீன் இனாமுல்லாஹ் 
போருக்குப் பின்னரான இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் திருப்பங்கள் சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் அதி கூடிய கரிசனை, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இராஜ தந்திர நகர்வுகள், தமிழர் தேசிய கூட்டணியினதும் ஏனைய குழுக்களினதும் அரசியல் நகர்வுகள் என்பன குறித்து முஸ்லிம் அரசியல் வாதிகள் போதிய கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

உண்மையில் இது வரை காலமும் இலங்கையில் யுத்தம் அல்லது சமாதனம் குறித்த தீர்வுகள் மற்றும் நிரந்தர சமாதானத்திற்கான பேச்சு வார்த்தைகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனதிபதியவர்களின் நேரடி தலையீடுகளில் தங்கியிருந்தது, வட்ட மேசை மாநாடு, சர்வ கட்சி மாநாடு, அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகள் யாவும் இறுதியில் ஜனாதிபதியவர்களின் இறுதி முடிவுக்காக சமர்ப்பிக்கப் பட்டன.

 சர்வதேச சமூகத்தினதும், இந்தியாவினதும் தொடர்தேர்ச்சியான அழுத்தங்களுக்கு இசைவாக ஜனாதிபதியவர்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஓரிரு மாதங்களுக்குள் தமிழ் தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தாலும் தற்போது இணக்கம் காணப் பட்ட விடயங்களை அமுலுக்கு கொண்டு வருமாறு விடுக்கப் படுகின்ற அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காகவும், காலம் தாழ்த்தும் யுக்தியாகவும் சகல இணைக்கப் பாடுகளும் ஒரு பாராளு  மன்றத் தெரிவுக்  குழுவினால் ஆராயப் பட வேண்டும் என ஜனாதிபதியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் எட்டப் படுகின்ற எந்தவொரு தீர்வும் சகல தரப்புகளையும் திருப்திப் படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பாக சிங்கள பௌத்த பெரும்பானம்யினரை திருப்திப் படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது, எனவே கடும் போக்காளர்களை பங்காளிகளாகக் கொண்டுள்ள மகிந்த  அரசு பந்தை பாராளுமன்றத்தின் பக்கம் எறிந்திருப்பது வியப்புக்குரிய விடயமல்ல. ஏலவே அதிகாரப் பகிர்வுக்கான பகிரங்க எதிரிகளான ஜே வீ பீ யையும் சந்திரிக்காவின் அதிகாரப் பகிர்வு யோசனைகளை கிழித்தெறிந்த ஐக்கிய தேசியக் கட்சியையும் சர்ச்சிக்குள் இழுத்துவிடுவதில் மகிந்த அரசிற்கு அரசியல் இராஜ தந்திர சௌகரியங்கள் நிறையவே உள்ளது என்பதனை தமிழ் முஸ்லிம் தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 நிலைமை இவ்வாறு இருக்க, வட கிழக்கில் குடிசன பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் அரசு துரித கதியில் முடுக்கி விட்டுள்ளது; இராணுவ மயமாக்கல், திட்டமிட்ட குடியேற்றங்களுக் காகவும் , இராணுவ மயமாக்கல், கலாசார பாரம்பரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாது காப்பதற்காகவும், புதிய முதலீடுகள் அபிவிருத்தி நடவடிக்கைகள், வர்த்தக பயிர்ச் செய்கைகள் எனவும்  பாரம்பரிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உரித்தான இடங்கள் காணிகள் அரசினால் சுவீகரிக்கப் படுகின்றன. அவற்றிற்கேற்ப பிரதேச செயலாளர் மற்றும்  உள்ளூராட்சி மன்ற எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப் படுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கி விடப் பட்டுள்ளன.

இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதன் மூலம்   தத்தமது நலன்களிலேயே அதிகூடிய கரிசனை செலுத்துகின்றன, பெரும் பான்மை சமூக அரசியல் கட்சிகள் தமது அரசியல் எதிர்காலம் குறித்து குறியாய் உள்ளனன, தமிழ் சமூகம் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை இயன்றவரை சரியாக செய்ய முற்பட்டாலும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளத்தை அங்கீகரிக்க மறுக்கின்ற அல்லது தேவைக்கேற்ப அங்கீகரிக் கின்ற வரலாற்றுத்தவறை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது.

 எவ்வாறு நாட்டில் 17 வீத தமிழர்கள் சிங்கள பெரும்பான்மையினரது மேலாதிக்கத்தை விரும்பவில்லையோ அதைவிடவும் கூடுதலாக வடகிழக்கில் 17 வீத முஸ்லிம்கள் தமிழர்களது  மேலாதிக்கத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அதற்கான நியாயங்களை முஸ்லிம்களது இரத்தத்தினால் மாத்திரமன்றி இனச்சுத்திகரிப்பினாலும் தமிழ்த்  தலைமைகளும் போராளிகளும் எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு சமூகங்களும் தமக்கிடையே பரஸ்பர உடன்பாடுகளுக்குள் வருவது காலத்தின் கட்டாயமாகும்.

 தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரை ஆயுத முனையில் அவர்கள் ஒரு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளில் ஓரளவு வெற்றிகரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள், தமிழர் தேசியக் கூட்டணி , கடல் கடந்த தமிழீழ அரசு என அவர்கள் தமது உரிமைகளுக்கான சுய நிர்ணயத்திற்கான அடித்தளங்களை சர்வதேச நியமங்களுக்கேற்ற்ப இட்டு வருகின்றனர், அவர்கள் தங்களைத் தொடர்ந்தும் விடுதலை புலிகளின் போராட்ட வாரிசுகளாக் அடையாள படுத்திக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் விடயத்தில் இழைத்த கொடூரங்களுக்காக வருந்தினாலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கான  நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என தமது அரசியல் இராஜ தந்திர நகர்வுகளில் அவர்கள் செயல் வடிவம் கொடுக்க மறுக்கிறார்கள்.

உண்மையில் தமிழ்  மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்களாகிய எங்களிடம் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை, அதேபோன்று முஸ்லிம்களுக்கான நீதி நியாயங்களை மத்திய அரசிடமிருந்து அவர்கள் பெற்றுத் தர வேண்டுமென்று நாங்கள் எதிர் பார்க்கவுமில்லை, துரதிஷ்ட வசமாக இனப்பிரச்சினை அரசியலில் அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் சகலரும் இன்று சரணாகதி அரசியல் செய்து கொண்டிருப்பது எமது எதிர்காலம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழ் தரப்புகளுடனான பேரம் பேசல் களாக இருந்தாலும் சரி, தனித்தரப் பாகவும், தமிழ் முஸ்லிம் தரப்பாகவும் மத்திய அரசுடன் அரசியல் தீர்வுகள் குறித்து பேசுவதாக இருந்தாலும் சரி பிளவுண்டு சிதறிப் போயுள்ள முஸ்லிம் அரசியல் -தலைமைகள்  அல்ல- குழுக்கள் காத்திரமான எத்தகைய பங்களிப்புகளையும் செய்யவில்லை.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவை ஒரு அரசியல் இராஜ தந்திர தடைக் கல்லாக அரசியல் அவதானிகள் கணிப்பிட்டிருக்க " அரசியல் தீர்வுகள் குறித்த முஸ்லிம்களது நிலைப் பாட்டினை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்வைப்போம்"  என முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது முஸ்லிம் சமூகத்தின் கையாளாகத் தனத்தை காட்டுகின்ற அரசியல் இராஜ தந்திர ஞான சூணியத்தை வெளிப் படுத்துகிறது. 

 எதுவித ஆவணங்களும் ஆய்வுகளும்  ஆயத்தங்களும் இல்லாது கடந்த கால சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது போன்று, தமிழ் தரப்புகள் எதையாவது பேசும் போது மாத்திரம் குறுக்கீட்டு அறிக்கைகள் விடுவதோட முஸ்லிம் அரசியல் குழுக்கள் தொடர்ந்தும் அரசியல் செய்வதனை புதிய தலை முறையினர் ஒரு போது ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

முஸ்லிம்கள் சமகால அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை இந்தியாவுடனும் பிராந்திய சக்திகளுடனும் சர்வதேச சமூகத்துடம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். வேற்று அறிக்கைகளுக்கும் கொசங்களுக்குமப்பால் சகல் முஸ்லிம் குழுக்களும் அமர்ந்து கூடிப் பேசி தெளிவாக ஆராயப் பட்ட வேலைத் திட்டமொன்றை நாட்டிற்கும் சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்கப் படுத்த வேண்டும்.

ஜனாதிபதியவர்கள் கடும்போக்காளர்களுடன் இணைந்து யுத்தத்தை முழு அளவில் முடுக்கி விட்டு முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம், கடும் போக்காளர்களின் கூட்டணி ஆட்சித்  தலைவராக இருக்கலாம், மிகவும் தூர நோக்குடன் சிந்திப்பின் மூன்றிலொரு பெரும் பான்மை கொண்ட ஒரு பாராளுமன்றமும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியும் மீண்டும் மீண்டு எதிர்காலத்தில் அமையலாம் என எதிர்பார்க்க முடியாது, அதே போன்று தற்போதுள்ள சர்வதேச பிராந்திய அழுத்தங்களும் எதிர்காலத்தில் நிலைத்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்க முடியாது.

பலவீனமான அரசியல் எதிரிகளுடன் பேரம் பேசுவதை விட முழு பலத்தையும் வெளிக் கொணர்ந்துள்ள பேரின சக்திகளுடன் பேரம் பேசி ஒரு அரசியல் தீர்வை வென்று கொள்வதே நிரந்தர சமாதானத்திற்கும் சக வாழ்விற்கும் வழி வகுக்கும் என்பதனை தமிழ் முஸ்லிம் தரப்புகள் சரியான பரிமாணத்தில் புரிந்து வேகமாகவும் விவேகமாகவும் செயலாற்ற வேண்டும்.

 சகலரும் கூடிப் பேசுகின்ற ஒரு ஏற்பாட்டைச் செவதற்கு சகல முஸ்லிம் அரசியற்கட்சிகளும் தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமித்து இரண்டு வாரங்களுக்குள் எனக்கு அறியத் தருமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!