அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி் தத்துவஞானி் சிந்தனையாளர் ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக்குரியதன்று. இந்த வகையிலேயே வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது சிந்தனையின் ஒரு முக்கிய துறையாக விளங்கியது.
இக்பாலுக்கு முன்னர் வாழ்ந்த, இஸ்லாமியப் பண்பாடும் நாகரிகமும் உன்னத நிலையிலிருந்த காலப் பிரிவைச் சார்ந்த முஸ்லிம் வரலாற்று அறிஞர்களின் பாரம்பர்யம் பற்றிய மிகத் தெளிவான அறிவும் பரிச்சயமும் அவரில் காணப்பட்டது...
வரலாறு என்பது ஆட்சியாளர்கள், அரண்மனை வாழ்வு, படையெடுப்புக்கள் பற்றிய ஒரு பதிவாக அன்றி, மக்கள் சமூகத்தின் செயற்பாடு, மாற்றங்கள் பற்றிய விளக்கமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம் வரலாற்றறிஞர்கள் பலர் கொண்டிருந்தனர். ‘ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைவார்கள். ஆனால் சமூகங்கள் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்’ என்ற வரலாற்று உண்மையை இக்பால் அவரது ‘பயாம் மஷ்ரிகில்’ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
‘’மாவீரன் அலெக்ஸான்டர் மறைந்தார்.
அவருடன் அவரது வாள், போர்க்கொடி,அவர் வெற்றிகொண்ட நாடுகளிலிருந்துபெற்ற வரிகள், முத்து, இரத்தினம்அனைத்தும் மறைந்துவிட்டன.ஆனால்-சமூகங்கள் மன்னர்களை விடநிலைத்திருக்கும் சக்தி படைத்தவை.ஈரானிய மாமன்னன் ஜெம்ஷித்இன்று இல்லை.ஆனால் ஈரானிய சமூகம்இன்றுவரை நிலைத்து நிற்கிறது”
இக்பாலின் இந்த வரலாற்றுத் தத்துவம் மத்தியகால முஸ்லிம் வரலாற்றறிஞர் இப்னு மிஸ்கவையின் கருத்தோடு ஒத்துள்ளது. இப்னு மிஸ்கவை பின்வருமாறு கூறுகின்றார்:
“எங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களின் நிகழ்வுகள், அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளை நான் படித்தபோதும், அச் சமூகத்தின் ஆட்சியாளர்கள், அவர்களது நகரங்கள், அதனைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி நான் அறிந்தபோதும், ஒரு முக்கிய வரலாற்று உண்மை எனக்குப் புலனாகியது. ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவை, அவற்றினை ஒத்தவை, மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்பதே இந்த உண்மையாகும்.”
இப்னு மிஸ்கவை இதன் காரணமாகவே அவரது வரலாற்று நூலை “இனங்களின் அனுபவங்களும் முயற்சிகளின் முடிவுகளும்” (தஜாரிபுல் உமம் வ அவாகிபுல் ஹிமம்) எனப் பெயரிட்டார். இனங்கள், சமூகங்களின் அனுபவங்களின் தொகுப்பே வரலாறாகும் என்ற கருத்தை இப்னு மிஸ்கவை கொண்டிருந்தார்.(2)
இப்னு மிஸ்கவையின் இந்த வரலாற்றுத் தத்துவத்தை ஒத்த கருத்தை இக்பால் அவரது ‘அஸ்ராரேகுதி’யில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
‘’உனக்கு வரலாறு என்றால்
என்ன என்பது தெரியுமா?அல்லது உன்னைப் பற்றியாவதுஉனக்குத் தெரியுமா?அது ஒரு வெறும் கற்பனை- புராணக் கதைஎன்று நீ எண்ணுகிறாயா?இல்லை! அது உன்னைப் பற்றிநீயே அறியத் துணைபுரிகின்றது.உனது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்திஉன் சாதனைகளுக்கான பாதையைஅமைத்துத் தருகின்றது.அது வாளைப்போன்றுஉன்னைக் கூர்மையாக்குகின்றது.பின்னர் அது உன்னைஉலகத்துடன் போராடவைக்கின்றது.அது நன்கு பயிற்றுவிக்கப்பட்டகண்களைப் போன்றது.இறந்த காலத்தை வாசித்துமீண்டும் அதனை சிருஷ்டித்துஉனக்கு முன்னால் அது சமர்ப்பிக்கிறது.உன் கடந்த காலம் நிகழ்காலமாய் வெடித்து அதிலிருந்து உன் எதிர்காலம் உருவாகிறது. நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்உன் இறந்த காலத்தைநிகழ் காலத்திலிருந்தும் எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே!”
‘’வரலாற்றை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து அது மனித ஆத்மாவின் அசைவும் இயக்கமுமாகும். ஏனெனில், மனித ஆத்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட சூழல் இல்லை. முழு உலகமுமே அதன் சூழலாகும். எனவே வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு, தேசத்திற்கு உரியதாகக் கொள்வது குறுகிய மனப்பான்மையாகும்” என இக்பால் கருதுகின்றார். எனவே இக்பாலின் கருத்துப்படி, வரலாறு அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அது அனைவருக்கும் போதனை செய்கின்றது. அது அனைவருக்கும் சொந்தமான ஒரு புதையலாகும். நாடுகளுக்கு இடையில் காணப்படும் எல்லைகள் என்பன வெறும் சடத்தோடு தொடர்புடையன.
0 கருத்துரைகள் :
Post a Comment