animated gif how to

இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்போம்!

November 25, 2011 |

November 25, 2011.... AL-IHZAN 
முஹம்மத் மிப்றாஹ் முஸ்தபா
ஜாமிஆ நளீமியா


இஸ்லாமிய கணக்கின்படி இறுதி மாதமான துல்ஹிஜ்ஜாவில் இருக்கின்ற நாம் இன்னும் சில தினங்களில் இஸ்லாமியப் புத்தாண்டில் கால்பதிக்க இருக்கின்றோம். ஆனால், யாருமே அதனை வரவேற்கத் தயாராக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், எம்மில் அதிகமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் புத்தாண்டாக கொண்டாடுகின்ற ஜனவரி மாதத்தையே வரவேற்கத் தயாராகி வருகின்றனர் என்பது கசப்பானதோர் உண்மையாகும். இவ்வாறானதொரு நிலையில் இது தொடர்பாக சில விடயங்களை ஞாபகப்படுத்துவது சிறந்ததென கருதுகின்றேன்...

அந்த வகையில் இஸ்லாமியப் புத்தாண்டு நபி (ஸல்) அவர்களினதும், முஸ்லிம்களினதும் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட சத்தியத்தூதை மக்கா மண்ணில் முன்வைத்த போது அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்டோரும் குறைஷிக் காபிர்களால் வேதனை செய்யப்பட்டார்கள்.
இப்படியான இக்கட்டானதொரு சூழ்நிலையில் அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் நபி (ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் மதீனாவுக்குச் செல்லுகின்றனர். வரலாற்றில் இதுவே ஹிஜ்ரத் என அழைக்கப்படுகிறது.


இந்நிகழ்வானது, இஸ்லாம் மிகவும் வேகமாகப் பதவுவதற்கும், அது உலகை ஆழ்வதற்குமான அத்திவாரமாக அமைந்தது. அந்நிகழ்வானது முஹர்ரம் மாதத்தில் இடம்பெற்றபடியால் இது இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாக கருதப்படுகின்றது. இச்சங்கைமிக்க மாதத்தைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறித்துக் காட்டுகிறது.


“அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்துக்கு) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றுள் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும்”. (தெளபா) மேலே குறிப்பிட்ட புனிதமான நான்கு மாதங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் அவை துல்ஹிஜ்ஜா, துல்கஃதா, முஹர்ரம், ரஜப் என விளக்கம் கொடுத்துள்ளார்கள்.


இம் முஹர்ரம் மாதத்திலே ஹிஜ்ரத் நிகழ்வு மாத்திரமின்றி பல தியாகங்கள் இடம்பெற்றுள்ளமை அதன் தனிச் சிறப்பம்சமாகும். ஆதம் (அலை) படைக்கப்பட்டது. அவர்கள் செய்த தவறுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. நூஹ் (அலை) அவர்களும், அவர்களை ஏற்றுக்கொண்ட சமூகமும் வெள்ளப் பிரளயத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இப்றாஹீம் (அலை) நெருப்புக் கிடங்கில் இருந்து காப்பாற்றப்பட்டது. நபி (ஸல்) அவர்களது அருமைப் பேரன் ஹுஸைன் (ரழி) கர்பலா களத்தில் கொலை செய்யப்பட்டது என்பன இம்மாதத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாகும்.


இந்த வகையில், மீண்டுமோர் புது வருடத்தை எதிர்நோக்கி இருக்கின்ற நாங்கள் (ஹிஜ்ரி 1433) பல விடயங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிக் கடமைப்பட்டுள்ளோம்.


அவற்றுள் மிகமிக முக்கியமானதொரு விடயம்தான் நேரத்தைத் திட்டமிடலாகும். இன்று முஸ்லிம் நாடுகளிலும் அரபு நாடுகளிலும் மாற்று மதத்தவரின் புத்தாண்டு வெகு விமர்சையாகவும், கேளிக்கைகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுவதை கண்களினூடாகப் பார்க்க முடியும். ஆனால், எவருமே தனது உலக வாழ்வில் ஒரு வருடத்தை இழந்துவிட்டோம். மரணமானது தன்னை ஒரு வருடம் நெருங்கி வந்துவிட்டது என சிந்திப்பதில்லை. ஒரு முஃமின் இதனைப் பற்றி சிந்திப்பானாயின் இவ்வாறான நாட்களில் அவன் தனது இரட்சகனின் பக்கம் அதிகம் திரும்புபவனாகக் காணப்படுவான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


எனவே இந்தக் காலப் பகுதியில் செய்யக் கூடியதொரு முக்கியமான அமல் முஹாஸபா ஒவ்வொரு தனி மனிதனும் தான் கடந்த வருடத்தில் செய்த இபாதத்கள், மனிதர்கள் மீதான கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றி இருக்கின்றேனா என சுய விசாரணை செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஏனெனில், இதுதான் தான் விட்ட பிழைகளை சுட்டிக் காட்டுவதோடு, வருகின்ற புதிய வருடத்தில் இவ்வாறான பிழைகள், பாவங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் துணை செய்கின்றது.
அது போலவே, இந்த முஹர்ரம் மாதத்தில் பல அமல்கள் செய்து அல்லாஹ்வுடனான எமது தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான அமல்களுள் தாkஆ, ஆஷ¤ரா நோன்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ரமழான் நோன்பிற்குப் பிறகு சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரமின் (ஆஷ¤ரா) நோன்பாகும்”. (முஸ்லிம்)


எனவே, தியாகங்களும், அருள்களும் நிரம்பிய இப்புனித முஹ்ரம் மாதத்தில் அல்லாஹ்வின் திருப்தியையும், பாவ மன்னிப்பையும் பெறும் வகையில் எமது நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துக் கொள்வதோடு வர இருக்கின்ற புதிய ஹிஜ்ரி ஆண்டிலிருந்து புதியதோர் அத்தியாயத்தைப் படைக்க எம்மனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!