animated gif how to

கடாபி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமை எமக்கு படிப்பினை: பிரதி மேயர் நிசாம் காரியப்பர்

October 25, 2011 |

October 25,2011.... AL-IHZAN Local News
-எஸ்.எம்.எம்.றம்ஸான்-

நான் கட்சித் தலைமைக்கு எதிரானவனல்லன் ஆனால், பிழைகள் செய்வது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பேன். எமக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு கட்சித் தலைமை சரியான நியாயத்தைப் பெற்றுத் தருமென்று நம்பிக்கையில் இன்று வரை இருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண் போனால், மீண்டும் மக்கள் நீதிமன்றத்தின் முன் தோன்றுவேன். 


இவ்வாறு மக்கள் நீதிமன்றத்தின் முன் நிசாம் காரியப்பர் என்ற தொனிப் பொருளில் கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் பிரதிமேயரும், சட்டத்தரணியும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்...


முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிசாம் காரியப்பர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
லிபியாவின் தலைவராக இருந்த மும்மர் கடாபியுடன் மக்கள் இருந்த போது அவரை அழிக்க வேண்டுமென்ற மேற்கத்தைய நாடுகளின் முயற்சிகள் தோல்வியை தழுவிக் கொண்டன. அதே மக்களே அவரை கொடூரமாகக் கொன்றுள்ளார்கள். அந்த சம்பவம் நமக்கெல்லாம் படிப்பினையாகும். இஸ்லாத்தை விட்டு விட்டு அரசியலில் இறங்கியுள்ள அரசியல்வாதிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை நிறைவேற்றாவிட்டால் யாருக்கும் இது நடக்கலாம். 


2000 ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரப் மரணித்த போது அரசியல் கிரீடமென்பது முட்களினாலானது என்று தெரியும். அதனால்தான் அன்று உங்களை விட்டும் ஒடினேன். அன்று அதற்கான முதிர்ச்சி இருக்கவில்லை. இன்று அதற்கான முதிர்ச்சியுடன், உங்களுடன் இருந்து செயற்பட எண்ணியுள்ளேன். அரசியல் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையாயின் அரபு நாடுகளில் நடப்பதுதான் இங்கும் நடக்கும். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அரசியல் செய்ய வந்தவர்கள் அதனை மறந்து செயற்படக் கூடாது.


மரச் சின்னத்தில் வந்தால்தான் பாராளுமன்ற உறுப்பினராகலாம்,  மாகாண சபை உறுப்பினராகலாம், மேயராகலாம், பிரதேச சபை உறுப்பினராகலாம் என்று சிந்திக்கின்றார்கள். அது அவர்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியல்ல. முஸ்லிம் காங்கிரஸூக்கு நீங்கள் கொடுத்துள்ள கண்ணியமாகும். இதனை மறந்து எனக்காக கிடைத்த வாக்குகள், எனது பின்னால்தான் மக்கள் உள்ளார்கள் என்று மமதை வந்து விட்டால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். இதனை சிலர் இன்னமும் புரிந்துகொள்ளாதிருக்கின்றார்கள். 


எனது வீட்டில் மக்கள் முன் நான் கூறிய கருத்துக்களை வேறுவிதமாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸூடன் இருந்த இரு பிரதேசங்களை தமது அரசியல் இலாபத்திற்காக பிளவுபடுத்தியுள்ளார்கள். கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரினால் நடத்தப்படும் கல்வி நிலையமொன்று உடைக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு தலைமைக்கு இருக்கின்றதென்றே கூறியுள்ளேன். தவிர அதன் பொறுப்பை தலைமை ஏற்க வேண்டுமென்று சொல்லவில்லை. இவைகள் பற்றி விசாரணை செய்யவிருப்பதாக தலைவர் உறுதியளித்துள்ளார். மேற்படி சம்பவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகில் தப்பிக் கொண்டாலும் மறுமையில் தப்ப முடியாது. 


கல்முனை மாநகர மேயருக்கு கண்ணாடியாக இருப்பேன். அவரின் கீழ் வேலை செய்வதனை அவமானமாகக் கருதவில்லை. மக்களின் தீர்ப்பும் தலைமையின் முடிவும் இதுவாக இருப்பதனால் அதனை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். 


கல்முனை மாநகரசபை மேயருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலாளர் எழுதிய கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டைத் துப்பரவு செய்வதற்கு நான்கு ஊழியர்களைக் கேட்டுள்ளதோடு, ஒரு பெட்டி மண்ணும் கேட்டுள்ளார். இதற்குத்தானா மாநகர சபை என்று கேட்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டேன். இதற்கு மேயரும்  அனுமதியளித்திருக்க மாட்டார் என்று நம்புகின்றேன். 


இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்து இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியில் புதிய அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். புதிய அரசியல் பாதையில்  பயணிக்க வேண்டும்.  நீங்கள் தங்களுக்கான புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கி விட்ட சந்தோசத்தில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை தைரியமாக எனது பொறுப்பை நிறைவேற்றுவேன். 


அரசியல் தலைமைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது மக்கள் துணிவுடன் வெளிக்கெழும்பி விட்டால் அரசியல்வாதிகள் பயந்து விடுவார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டால் மக்களின் அதிகாரத்தைப் பெற்றுவிட்டால் அந்த அதிகார முள்ளவரின் பலவீனத்தை விமர்சித்தேயாக வேண்டும். அவரின் பலவீனம் சமூகத்தைப் பாதிக்கும் என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!