October 17, 2011.... AL-IHZAN Local News
-சிராஜ் மஸ்ஹூர்-
-சிராஜ் மஸ்ஹூர்-
ஒரு நபர் பிறப்பிலிருந்து கற்றுக்கொள்ளும் மொழியை முதல் மொழி (First Language) என மொழியியலாளர் அழைப்பர். பொது வழக்கில் இதனை தாய் மொழி (Mother Tongue) எனக் குறிப்பிடுவதுண்டு. இந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் முதல் மொழி எது என்ற விடயம் குறித்து ஆராய்வது காலப் பொருத்தமானது.
இலங்கை முஸ்லிம்களிடையே தமிழ் நீண்டகாலமாக செல்வாக்கு மிக்க மொழியாக இருந்து வருகிறது. இன்றுவரையில் மிகக்கணிசமான முஸ்லிம்களது தாய்மொழியாக இதுவே இருந்து வருகிறது. பிறப்பிலிருந்து - குறிப்பாக வீட்டுச் சூழலில் - ஒரு குழந்தை பெறும் மொழியாக நீண்ட காலமாக தமிழே இருந்து வந்தது என்பது இதன் அர்த்தமாகும்.
ஆனால், அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுள் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தமிழை தமது முதல் மொழியாகக் கொள்ளாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. இவர்கள் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தை அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்...
கல்வி அறிவு, புதிய உலகப் போக்கு, சமூக அங்கீகாரம் போன்ற காரணிகள் இதற்கு பின்னூக்கியாக நின்று தொழிற்படுகின்றன. அத்தோடு தாம் வாழும் சமூக சூழலில் தமிழைப் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இவர்களுக்குக் கிடையாது.
மொழி வாழும் சூழலுடன் மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்று. அத்தோடு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளும் இதற்கு பங்களிக்கின்றன. இந்த வகையில்தான், சிங்கள மொழி இதேபோன்ற நகர்ப்புற மத்திய தர வர்க்கத்தினரிடையே படிப்படியாக செல்வாக்குப் பெற்று வருகிறது. அதற்கான பலமான நியாயங்களும் காணப்படுகின்றன.
நாட்டின் வடக்கு கிழக்கிற்கு வெளியே குறிப்பாக மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் தரம் குறித்து பெற்றோர் தீவிரமாக சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏறத்தாழ 20 வீதமான முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கின்றனர். இத்துறையில் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுமாயின், இது பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறலாம்.
நகர்ப் புற மத்திய தர வர்க்க முஸ்லிம்களிடையே இரு மொழிப் பண்பு அதிகரித்து வருகிறது. தந்தை அல்லது தாய் இரு மொழிகளைப் பேசும்போது குழந்தையும் அவ்விரு மொழிகளையும் ஏக காலத்தில் பெறுகிறது. இவ்வாறான சூழலில் இரண்டு முதல் மொழிகள் என்ற நிலை தோன்றுகிறது.
பரவலாக அவதானிக்கப்படும் இந்த மொழி தொடர்பான யதார்த்தம் முஸ்லிம் சமூகத்தில் அவ்வப்போது பேசப்படத்தான் செய்கிறது. எனினும், இதுபற்றிய கருத்தூன்றிய கவனிப்போ, சீரியஸான ஆய்வு முயற்சிகளோ போதியளவு முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் பேசும் முஸ்லிம்கள், சிங்களம் பேசும் முஸ்லிம்கள் என்று நிரந்தரமாகப் பிரிந்து விடும் நிலை எதிர்காலத்தில் தோன்றும் என ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆருடம் கூறினார். முஸ்லிம்கள் தமிழையே தாய்மொழியாகப் பின்பற்ற வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆனால் கால மாற்றம் இதனைத் தெளிவாக மீளாய்வுக்கு உட்படுத்த எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
1956ல் தனிச் சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது தென்னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல் தலைமைகளைச் சார்ந்திருந்தன. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தனர். இதனை அரசியல் பின்புலத்தில் மட்டும் நின்றே பலரும் விமர்சித்து வந்திருக்கின்றனர்.
ஆனால், இதற்குப் பின்னாலுள்ள சமூக சூழல், இடஅமைவு காரணமான மொழிச் செல்வாக்கு என்பன பற்றிய சமூகவியல் பார்வை இதுவரை வெளிவராத வேறு பல நியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். இன்னொரு புறம் முஸ்லிம்களை தமிழர்களாக அடையாளம் காட்டும் தமிழ் மேலாதிக்கப் பார்வையை தகர்த்தெறிய வேண்டிய அரசியல் தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் நாம் தமிழர் அல்ல என்ற வாதத்தை முஸ்லிம்கள் பலமான சான்றுகளினூடாக நிறுவினர். எனினும், தமது தனித்துவத்தைப் பேணுவதற்கு மொழி அடையாளம் தொடர்ந்தும் ஒரு தடையாக இருப்பதை முஸ்லிம்கள் விரும்ப வில்லை.
இந்நிலையில், அறபுமொழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்ற வாதம் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஓதுவதற்காக அறபு மொழியை வாசிக்கக் கற்பதை மார்க்கக் கடமையாகப் பேணி வருகின்றனர். இப்போது பொதுவாக ஏற்பட்டுள்ள இஸ்லாமிய விழிப்புணர்ச்சி காரணமாக அறபு மொழியை பொருளுணர்ந்து கற்கவும் பேசவும் வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
சிலர் இப்போது சோனக மொழி என்று பேசி வருகின்றனர். இந்த சோனக மொழி என்ற வாதம் தமிழின் திரிபுபட்ட ஒரு வடிவத்தைச் சொல்கிறதே அன்றி வேறல்ல. அதில் தமிழர்களால் புரிந்துகொள்ள முடியாத பல தனித்துவக் கூறுகள், குறிப்பான அறபுச் சொற்பாவனை போன்றன கலந்திருப்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியியல் அளவு கோல்களின்படி அதனை தனி யொரு மொழியாகக் கொள்ள முடியாது.
முஸ்லிம் சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள மேமன் சமூகத்தவர் கச்சி மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மலே முஸ்லிம்கள் மலாய் மொழியைப் பேசி வருகின்றனர். எனினும், இவர்களுள் கணிசமானோர் தமிழையும் சிங்களத்தையும் அறிந்து வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மலே சமூகத்தவர் சிங்களத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். சிலர் தமது தாய்மொழியான மலாய் மொழி (அதிலும் இலங்கையில் பேசப்படும் மலாய் கிளைமொழி) அழிந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு உப பிரிவுகளை இணைக்கும் இணைப்பு மொழியாக (Link Language) தமிழ் இருந்து வந்தது; இன்னும் இருக்கிறது. தென்னிலங்கையிலுள்ள சிறிய கிராமமான கிரிந்தயில் வாழும் மலே முஸ்லிம்கள் தமிழில் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர்களது தாய்மொழி மலாய் என்பதும் அவர்கள் வாழும் சூழல் சிங்கள மொழிச் செல்வாக்கு மிக்கது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களது தாய்மொழியாக தமிழ் எவ்வாறு அமைந்தது என்ற விடயம் இன்னொரு சுவாரசியமான ஆய்வுத் தலைப்பாகும். தென்னிந்திய கடல் வணிகத்தில் தமிழ் முக்கியமான வணிக மொழியாக இருந்து வந்ததை சிலர் இதற்குச் சான்றாக முன்வைக்கின்றனர். அறபு வியாபாரிகள் தமிழைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்ற எடுகோளின் அடிப்படையில் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு வேறு பல காரணிகளும் இருக்கக்கூடும். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.
எது எவ்வாறாயினும், முஸ்லிம்களிடையே தமது மார்க்கத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான மொழியாக தமிழே மிக நீண்டகாலம் இருந்து வந்திருக்கிறது. இதனால்தான் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று முன்பொரு காலத்தில் கருதப்பட்டது. பள்ளி வாசல்களில் சிங்களம் பேசுவது ஹராம் என்ற மனநிலை கூட முன்னர் இருந்தது.
உண்மையில் மொழிகளின் பின்னால் பலமான கலாச்சாரச் செல்வாக்கு இருக்கிறது. அதன் எதிர்வினையாகவே இந்தக் கருத்துக்களை நோக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களது மார்க்கம் தொடர்பான எழுத்தும் பேச்சும் பெருமளவு தமிழிலேயே இருந்து வந்தது. சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ அங்காலத்தில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த முயற்சிகளே காணப்பட்டன. முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்காமல் பாதுகாக்கும் உத்தியாகவே இந்த சிந்தனைகள் அக்காலத்தில் கொள்ளப்பட்டிருப் பதை இன்று ஊகிக்க முடிகிறது.
இந்நிலை எவ்வாறு மாறியது? இன்றிருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் சூழல் முற்றிலும் வேறுபட்டதாகும். இந்நிலையில் முஸ்லிம்களுள் கணிசமானோர் தமிழ் மொழியை விட்டும் அந்நியமாகிச் செல்கின்றனர். ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் சர்வதேசப் பாடசாலைகள் மீதான மோகம் நமது சமூகத்தில் மிகவும் அதிகரித்திருக்கிறது. மொழியை ஒரு ஃபெஷன் என்பதற்கு அப்பால் சிந்திக்கும் பண்பு நம்மில் ஏற்படவேண்டும்.
பலருக்கு தமிழைப் பேச முடிந்தாலும், அதனை எழுத வாசிக்கத் தெரியாத நிலை பொதுவாகக் காணப்படுகிறது. இன்னும் சிலர் அரைகுறைத் தமிழில் பேசுகின்றனர். இது பேச்சு வழக்குத் தமிழ் அல்ல. மாறாக, வேறு மொழியை முதல் மொழியாகக் கொண்டவர்கள் அங்கொன்று இங்கொன்றாக தமிழ்ச் சொற்களை இணைத்துப் பேசும் நிலை. ஒருவகையில் கொச்சைத் தமிழ் என்றும் சொல்லலாம்.
வீட்டில் ஒரு மொழி, வெளியில் ஒரு மொழி, பாடசாலையில் ஒரு மொழி, பள்ளிவாசலில் ஒரு மொழி என்ற நிலை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பதை நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு மொழிப் பண்புள்ள பிரதேசங்களில் (வடக்கு கிழக்கில்) இது அவ்வளவு பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால், இரு மொழி அல்லது மும்மொழிப் பண்புள்ள பிரதேசங்களில் இது பாரிய பிரச்சினையாக எதிர்காலத்தில் உருவெடுக்கும். முஸ்லிம்கள் இரு மொழித்திறன் வாய்ந்தவர்கள், மும்மொழித் திறன் வாய்ந்தவர்கள் என்ற நிலை படிப்படியாக மாறி வருகிறது.
இந்நிலையை நாம் இப்போதே உணர்ந்து போதிய முன் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். ஒரு சமூகத்தின் மொழித் தெரிவை வெளியிலிருந்து தீர்மானிப்பது மிகவும் கடினம்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை சிறுபான்மையாக உள்ள நாம், நமது மொழி பற்றி கூடுதல் பிரக்ஞையுடன் செயற்பட வேண்டும். பல்வேறு மொழிகளைப் பேசுவதால் நமக்கிடையே கருத்துக்களைப் பகிர முடியாத இடைவெளிகள் ஏற்பட்டு விடவும் கூடும். இந்த இடைவெளி அதிகரிப்பது பல வகையில் ஆபத்தானது. ஆதலால், நமது முதல் மொழி எது, நமது இரண்டாம் மொழி எது என்ற விடயத்தில் நாம் திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அதன்மூலம் ஆரோக்கியமான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment