animated gif how to

இலங்கை முஸ்லிம்கள் செய்யவேண்டிய ஜிஹாத் - என்.எம். அமீன்

October 17, 2011 |

October 17, 2011.... AL-IHZAN Local News

என்.எம். அமீன் மாவனல்லை தல்கஸ்பிடியைச் சேர்ந்தவர். களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியாகியதைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பயிற்சிப் பத்திரிகையாளராக இணைந்தார். பயிற்சிப் பத்திரிகையாளராக இருந்து முகாமைத்துவ ஆசிரியர் வரை சுமார் 33 வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக இருந்து வரும் என்.எம். அமீன் தற்போது நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


* இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் மற்றும் நாளிதழுக்கான தேவை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதனை சாத்தியப்படுத்துவதிலுள்ள தடைகள் என்ன...?

இலங்கை முஸ்லிம்களின் ஊடக வரலாற்றிலே எமக்கான ஒரு ஊடகமென்பது 1882ம் ஆண்டு அறிஞர் சித்திலெப்பை ஆரம்பித்ததிலிருந்து தொடங்குகின்றது. அன்றிலிருந்து முஸ்லிம்களுக்கான ஊடகமாக பல பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அனைத்தும் நின்று நிலைத்ததாக இல்லை. இதுதான் முஸ்லிம்களுக்கு இன்று இருக்கின்ற சவாலும் கூட. 


ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் சமூகம் மிகவுமே பின்நிற்கின்றது. எமக்கான ஒரு நாளிதழைக் கொண்டு வருவதற்கான காத்திரமான முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெளிவருகின்ற வாரப் பத்திரிகைகளும் மிகுந்த பொருளாதாரச் சிக்கல்களுடனே வெளிவருகின்றன. 


எமது சமூகத்தைப் பொறுத்த வரை ஒன்றல்ல, பல நாளிதழ்கள் தேவைப்படுகின்ற ஒரு சூழலிலே நாம் வாழ்கிறோம். குறிப்பாக எங்களுக்கெதிரான சவால்களுக்குப் பதில்சொல்ல, எங்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்குப் பதில்சொல்ல, எங்கள் சமூகத்தின் உண்மை நிலையை தெளிவுபடுத்த எங்களால் முடியாமல் இருக்கின்றது. 


உண்மையில் இத்தேவையை நிறைவுசெய்ய, இதனை முஸ்லிம் சமூகம் ஒரு வர்த்தக முயற்சியாக ஆரம்பித்தால்தான் வெற்றி பெறும். மற்றது ஏனைய சமூகங்கள் இத்துறையில் காட்டும் ஆர்வம் முஸ்லிம் தனவந்தர்களிடம் இல்லாமல் இருக்கின்றது. இது மிகவுமே கவலையான ஒரு விடயம். தமிழ் சமூகத்தை எடுத்துக் கொண்டால் கொழும்பில் அவர்களுக்கு நான்கு நாளிதழ்களும் யாழ்ப்பாணத்தில் மேலதிகமாக நான்கு இதழ்களும் வெளிவருகின்றன. 


எங்களுக்கு ஒரு நாளிதழுமே இல்லை. நாளிதழை விட வாரப் பத்திரிகையைக் கூட செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றோம். அந்தவகையில், மீள்பார்வையும் எங்கள் தேசமும் நின்று பிடிப்பது பாராட்டுக்குரியது. இந்தக் களத்தில் அவர்கள் தொடர்ச்சியாக இருக்கிறார்கள். 


ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு ஏதும் நடந்தால் அதனைச் சொல்ல ஒரு வாரத்தின் பின் நவமணியோ, விடிவெள்ளியோ அல்லது இரண்டு வாரங்களின் பின் மீள்பார்வையோ, எங்கள் தேசமோ வெளிவர வேண்டும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். 


அத்தோடு எமது எல்லா ஊடகங்களும் தமிழில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எமது சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பது ஏனைய சமூகங்களுக்குத் தெரியாது. அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு, அதனை விடப் பெரிய ஒரு நிகழ்வு நடந்திருந்தாலும் அதனை மறைக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். 


முஸ்லிம் தனவந்தர்கள் இதில் கூடிய கவனமெடுத்தால் மட்டுமே எமக்கான நாளிதழைக் கொண்டுவர முடியும், ஊடக நிறுவனத்தை உருவாக்க முடியும். முஸ்லிம் சமூகம் பற்றிய நிறைய தப்பபிப்பிராயங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. சுமார் 20 இணையத் தளங்களூடாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 


* எமக்கான இலத்திரனியல் ஊடகத்தைப் பற்றிச் சொல்வதாயின்...?


எமது நாட்டில் கிட்டத்தட்ட 44 FM வானொலிகள் இருக்கின்றன. 16 தொலைக்காட்சி சேவைகள் இருக்கின்றன. ஆனால் எமது கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை மாத்திரம்தான் எமக்கிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் நிதி அங்கு செலவிடப்படுகின்றது. இருந்தும் அதன் மூலம் சமூகத்திற்கு எத்தகைய பயன்கள் கிடைக்கின்றன என நாம் ஆய்வுசெய்திருக்கிறோமோ தெரியாது. 


சமூகத்திற்குத் தேவையான விடயங்களை வழங்குவதற்கான ஆளணி முஸ்லிம் சேவையில் இருக்கின்றதா என நாம் பார்க்க வேண்டும். ஏனெனில், ஊடகம் என்பது உணவு சமைப்பது போன்ற ஒரு விடயமல்ல. இந்த வருட ரமழான் காலத்தில் மட்டும் முஸ்லிம்களின் அனுசரணையினூடாக சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. 


இருந்தாலும் சமூகத்திற்குத் தேவையான நிகழ்ச்சிகளை நாம் கேட்க முடியாமல் இருக்கின்றது. திணிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகளையே முஸ்லிம் சமூகம் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றது. இப்படியொரு சூழல் தான் முஸ்லிம் ஊடகத்தைப் பொறுத்தவரையில் இருக்கின்றது. நாங்கள் மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இது ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல. எனவே, எமக்கான ஓர் ஊடகத்தை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் எமது மிகப் பெரிய ஜிஹாதாக இருக்கின்றது. ஆகவே முஸ்லிம் சமூகத்தின் நிகழ்ச்சி நிரலிலே ஊடகம் முன்னுரிமை பெற வேண்டிய ஓர் அம்சமாக இருக்கின்றது. 


இனிவரும் காலங்களில் அலைவரிசை ஒன்றைப் பெறுவது பெரும் சிரமமான ஒரு விடயமாக இருக்கும். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ஒலுவில் துறைமுகத்தையும் ஆரம்பிப்பதை விட எமக்கான அலைவரிசை ஒன்றைப் பெறுவதில் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அவரிடம் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது. எதிர்காலத்தில் பலமான அரசியல் தலைமைத்துவம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால்தான் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். 


* குறிப்பாக இன்றைய சூழலில் எமது சமூகத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விடயம்...?


போருக்குப் பின்னரான சூழலை நாம் பார்க்கின்றபோது எங்களை தூண்டிவிட வேண்டும் என்று பின்புலத்தில் யாரோ வேலை செய்வதாகத் தெரிகிறது. நாங்கள் இந்த சவாலை வென்றெடுக்க வேண்டும். இது எங்கள் இருப்போடு சம்பந்தப்பட்டது. நாம் இந்த நாட்டிலே பரந்து, சிதறி வாழ்கிறோம். வாய் வீராப்புடன் பேசிப் போராடலாம் என நாம் நினைப்பது தவறாகும். 


இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தின் நல்லெண்ணத்தை நாம் வென்றெடுக்க வேண்டும். அதாவது எங்களுக்காகப் பேசுகின்ற மாற்று இன சகோ தரர்களை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது எமது செயற்பாடுகளால்தான் முடியும். எல்லா தரப்புகளாலும் எமது சமூகத்திற்கு புறக்கணிப்பு இருக்கின்றது. எனவே எமக்கெதிரான சவால்களை நாம் இனங்காண வேண்டும். எமக்குள் ஒற்றுமை வேண்டும். சமூகத்திற்குத் தலைமை தாங்க அறிவுஜீவிகள் முன்வர வேண்டும். 


எமது சமூகத்தை இலக்கு வைத்து இன்னும் சில வருடங்களில் ஏதும் நடக்கப் போகின்றதோ என்ற அச்சம் உருவாகிக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து நாம் எமது சமூகத்தைப் பாதுகாக்கின்ற தேவை இருக்கின்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!