பிரதி மேயராக சட்டதரனி நிசாம் காரியப்பர்
கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச்சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக இன்று காலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மற்றும் கல்முனையிலிருந்து போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் என்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது....
இதனால் மேயர் பதவிக்காலமான நான்கு வருடங்களை இரண்டாக பிரித்து விருப்பு வாக்குகளில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற சாய்ந்த மருதைச்சோர்ந்த சிராசுக்கு முதல் இரண்டு வருடங்ளிலும், அடுத்த இரண்டு வருடங்களில் சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு மேயர் பதவியை வழங்குவதென இக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.கட்சிக்கு வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றைக்கருத்திற் கொண்டும், சாய்ந்த மருதுக்கு மேயர் பதவி இதுவரை வழங்கப்படாததை கருத்திற்கொண்டும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் சர்ச்சை தொடர்பில் இடம் பெற்ற அனைத்து வன்முறைச்சம்பவங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.
வன்முனைகளை அடிப்படையாக கொண்டு எந்த பதவிகளையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்காது எனவும் இத் தீர்மானம் தொடர்பில் கட்சி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமெனவும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment