September 23, 2011.... AL-IHZAN World News
பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபையின் 194ஆவது நிரந்தர அங்கத்துவ நாடாக அங்கீகரிக்க கோரும் பிரேரணையை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கவுள்ளார்.
எனினும் பலஸ்தீனின் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மஹ்மூத் அப்பாஸிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். பராக் ஒபாமா நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ ஆகியோரை தனித்தனியே சந்தித்து மத்திய கிழக்கு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தனிநாட்டுக் கோரிக்கையை கை விடுமாறு கேட்டுக் கொண்டார். மறுபுறத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக் குறித்து பென்ஜமின் நெதன்யாஹ¥விடம் உறுதியளித்தார். எனினும் பராக் ஒபாமாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெற்றதாக மஹ்மூத் அப்பாஸ் சந்திப்புக்கு பின்னரான ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்...
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன அங்கத்துவம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக செயற்படுவோம் என வெள்ளை மாளிகைக்கான பாதுகாப்புச் சபை பேச்சாளர் பென் ரோட்ஸ் தெரி வித்தார். மஹ்மூத் அப்பாஸை சந்தித்த போது ஜனாதிபதி ஒபாமா இந்த தகவலை குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மஹ்மூத் அப்பாஸ் தனிநாட்டு கோரிக்கையை ஐ.நா. சபையின் முன்வைக்க மாட்டார் என்ற சிறு எதிர்பார்ப்பு இன்னும் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பலஸ்தீன, இஸ்ரேல் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். 36 நிமிடங்கள் கொண்ட அந்த உரையில் பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டார். இதில், ‘நீண்ட காலமாக தொடரும் மத்திய கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண குறுக்கு வழி எதுவும் இல்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே இது முடி வுக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
66ஆவது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பராக் ஒபாமாவின் உரையில் மேலும் கூறியதாவது; “அறிக்கைகள் மற்றும் ஐ.நா. தீர்வின் மூலம் சமாதானத்தை எட்ட முடியாது. அது சாத்தியமாக இருந்தால் இப்போதே செயற்படுத்த முடியும். ஆனால் இரு தரப்புக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காண முடியும்.
ஓர் ஆண்டுக்கு முன் நான் இந்த இடத்தில் இருந்து சுதந்திர பலஸ்தீனத்திற்கு அழைப்பு விடுத்தேன். நான் அதனை இப்போதும் நம்புகிறேன். பலஸ்தீனர்களுக்கு அவர்களுக்கான தனி நாடு தேவை. ஆனால் இஸ்ரேல், பலஸ்தீன் ஆகிய இரு தரப்பும் உணர்ந்தே இது செயற்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
எனினும் பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்துவது மத்திய கிழக்கில் நிலைமையை மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி தனது பொதுச் சபை உரையில் குறிப்பிட்டார். 60 ஆண்டுகளாக தோல்வியடைந்த மத்திய கிழக்கு சமாதான பேச்சு வார்த்தை முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இதன்படி பலஸ்தீன, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து 6 மாதங்களுக்குள் இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் பெறப்பட்டு இறு தித் தீர்வு ஓர் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்குக் கரையின் ரமல்லா மற்றும் நப்லுஸ் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். எனினும் பலஸ்தீனில் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு ஐ.நா. அங்கத்துவத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இஸ்ரேல் எல்லைகளுடன் கூடிய முழு பலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வெள்ளிக்கிழமை இன்று ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். அதில் ஐ.நா.வில் பலஸ்தீனத்திற்கு தனிநாடு கோரியதாக அவரது உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பலஸ்தீனத்தை ஐ.நாவின் 194 ஆவது அங்கத்துவ நாடாக கோரும் விண்ணப்பத்தை மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கவுள்ளார். எனினும் அவரது உரைக்கு முன்னரோ அல்லது பின்னர் அந்த விண்ணப்பம் சமர்பிக்கப்படு வது என்பது தெளிவில்லை என பலஸ் தீன விடுதலை இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் நபீல் ஷாத் சி. என்.என். தொலைக் காட்சிக்கு தெரிவித்ததுள்ளார்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கீகாரத்திற்காக பாதுகாப்பு சபையிடம் வழங்குவார். இந்த விண்ணப்பத்தை ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்.
இதில் பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கை அங்கீகரிக்க பாதுகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகளில் ஆதரவாக 9 நாடுகள் வாக்களிக்க வேண்டும். எனினும் அமெரிக்கா சிறப்பு அதிகாரமான ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தினால் அது நிராகரிக்கப்படும்.
இந்த நிலையில் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கை அங்கீகரிக்க 193 நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறவேண்டி வரும். அதாவது 126 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த கோரிக்கைக்கு எதிராக செற்படுகின்ற நிலையில் பொதுச் சபையில் முன்றில் இரண்டு பெறுவது குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.
எனினும் பொதுச் சபையில் பெரும்பான்மையை பெற்றால் பலஸ்தீனம் தொடர்ந்தும் பார்வையாளர் அங்கத்துவத்தை பெறும். ஐ.நா. பார்வையாளராக பலஸ்தீனம் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு ஐ.நா. வில் உரையாற்ற முடியும். வாக்களிக்க அதிகாரம் இல்லை.
0 கருத்துரைகள் :
Post a Comment