animated gif how to

''வாசிக்கத் தவறாதீர்கள்'' - நீங்களும் ஏமாற்றப்படலாம்..!!

September 14, 2011 |

September 14, 2011.... AL-IHZAN Local News

(ஊடகவியலாளர் நண்பன் நிர்ஷன் எழுதி வீரகேசரியில் வெளியாகிய காலத்திற்கு அவசியமான இந்தக் கட்டுரையை மிள்பதிவிடுகிறோம்)

ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.


பூலோகமயமாதலின் விளைவாக நாளுக்குநாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.


ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமா ணத்தையும் கண்டுகொண்டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது.
ஆம், பேஸ்புக் (Facebook), மை ஸ்பேஸ் (Myspace), கூகுள் பிளஸ் (Google +), போன்ற சமூக வலையமைப்புகள் பிரபலமடைந்து வருவதுடன் கடவுச்சொல்லை வேட்டையாடும் இணையக் குற்றங்கள் புரிவோரின் களமாகவும் இவை விளங்குகின்றன.

பேஸ்புக் வலையமைப்பானது உலக நாடுகள் பலவற்றில் பிரபல்யமடைந்து வருகிறது. சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம் என்ற கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி ‘FB’ இற்கு வந்தால் கூட் டத்தோடு குதூகலிக்கலாம் என்றாகிவிட்டது. நம்மில் பலர் அதிகாலையில் கண்விழித்ததும் முதல்வேலையாக பேஸ்புக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதையே வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, பேஸ்புக் போன்ற சமூக வலைய மைப்புகளில் இடம்பெறும் குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருந்தொகைப் பணத்தை இழந்தோரும் வாழ்க்கையைத் தொலைத்தோரும் இருக்கிறார்கள்.

அவ்வாறு பலரது வாழ்க்கைக்கு பேராபத்தாக உருவாகியுள்ள மின்வெளிப் பயங்கரவாதம் (Cyber terrorism) இன்று உலகையே ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கையிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) கீழ் இயங்கும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு (CERT) இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் முறைப் பாடுகளுக்கு ஏற்புடைய நடவடிக்கை களையும்மேற்கொண்டு வருகிறது.

இணையத்தளங்களில் மேற்கொள்ளப் படும் குற்றச்செயல்கள் குறித்து முறை யான நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இக்குழு நியமிக் கப்பட்டுள்ளது. இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து இந்தக்குழுவின் சிரேஷ்ட பாதுகாப்பு பொறியிய லாளர்களாகக் கடமையாற்றும் கனிஷ்க யாப்பா, ரொஷான் சந்திரகுப்தா ஆகியோர் பல்வேறு தகவல்களை வீரகேசரியுடன் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற சில உண்மைச் சம்பவங்கள்

சம்பவம் 01 கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் இளம் பெண் அவர். அலுவலக நேரங்களில் மாத்திரம் பேஸ்புக் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறே நாட்கள் கடந்தன.

ஒருநாள் தோழியரிடமிருந்து தொலைபேசியில் அவருக்கு கிடைத்த அதிர்ச்சிச் செய்தி இதுதான். “நேற்றிரவு முழுவதும் பேஸ்புக் இல் இணைப்பில் இருந்தாயே? எங்களோடு அரட்டை அடித்தாயே? இப்போதெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறாய் என்ன?’ இதனைக் கேட்டதும் அதிர்ச்சிய டைந்துள்ளார் அந்த இளம் பெண். ஏனென்றால் இரவில் அவர் பேஸ்புக் உபயோகிப்பதற்கான எந்த வசதியும் அவரிடம் இல்லை. இதுகுறித்து செய்த முறைப்பாட்டையடுத்து தேடிப்பிடிக் கப்பட்ட உண்மை இதுதான்.

அவருடைய கணனியில் ஒரு மென்பொருள் நிறுவப்பட்டிருந்தது. அந்தக் கணனியில் அவர் என்ன வேலைகள் செய்கிறாரோ அவை அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவாகி இரு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அந்தத் தகவல்கள் அனைத்தும் வேறொரு நபரின் மின்னஞ்சலுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகிரங்கமானதையிட்டு சினம்கொண்டுள்ளார் அந்தப் பெண். இதுபற்றி முழுமையாக விசாரிக்கும்போது அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு நபர்தான் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான விடயங்களை கணனி உளவுபார்த்தல் என்று சொல்வார்கள். இணையங்களில் குவிந்து காணப்படும் Keylogger போன்றவைற்றைக் கொண்டு கணினிகளையும் செயற்பாடுகளையும் உளவுபார்க்க முடியும்.

சம்பவம் 02 உயர்நிலை பதவி வகிக்கும் முக்கியஸ்தர் அவர். லண்டனில் பெருந்தொகைப் பணம் (12.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவருக்கு அதிர்ஷ்டலாபமாகக் கிடைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ் சலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணம் கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் பதில் மடல்களையும் அவர் அனுப்பியுள்ளார். “இந்தப் பணத்தை சட்ட ரீதியாக தங்களுடைய கணக்குக்கு மாற்று வதற்குப் பல்வேறு படிமுறைகள் இருக் கின்றன. ஆவணங்கள், சட்டத்தரணி உத்தரவாதம் என விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பதை தங்களுக்கு அறியத் தருகிறோம்.

அதன் பிரகாரம் ஆவணப் படுத்தல் உட்பட அனைத்து விடயங் களுக்கும் ஒருதொகை பணம் தேவைப் படுகிறது. அதனை எமது கணக்குக்கு வரவு வைப்பதன் மூலம் ஒருவார காலத்துக்குள் உங்களுக்கான அதிர்ஷ்ட லாபப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’ என அவருக்கு மின்மடலொன்று கிடைத்துள்ளது. ஒருவார காலத்துக்குள் பெரிய பணக்காரராகப்போகும் ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபா) தனது வங்கிக் கணக்கி லிருந்து மாற்றம் செய்துள்ளார்.

ஒருவாரத்தின் பின்னரும் பணம் கிடைக் காததை கவனித்த அவருக்கு கொஞ்சம் விளங்கத் தொடங்கியது. ஆம்! அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார்.

இவ்வாறான குற்றச்செயல்களை நம்பிக்கை வித்தை மோசடி (Confidence trick – Scam) எனக் கூறுவார்கள். இவ்வகையான குற்றவாளிகள் பல்வேறு வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதுண்டு.

அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

பிரபலமான பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இணையத்தளங்களை உருவாக்கும் நபர்கள் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வெளிநாடுகளில் தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்வி கற்பதற்கு குறிப்பிட்டதொரு தொகையை முற்பணமாகக் கோருவதும் உண்டு. வங்கிகளின் பெயர்களில் பெரும் புள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப் பப்பட்டு வங்கிக் கணக்குக்கான கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு கேட்கப்படும். அவ்வாறு கடவுச்சொற்கள் மாற்றிமைக்கப்படும்விடத்து பணம் பறிபோகும் அபாயம் உண்டு.
மின்னஞ்சல், சமூக வலைப் பின்னல்களில் பெருந்தொகை பணப் பரிமாற்றத்துடன் வர்த்தகம் செய்துவரும் நபர்களின் கணக்குகளை அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தகவல் கோருவதுபோல் அனைத்துத் தகவல் களையும் கேட்டுப் பெற்று அதனை மீளக்கையளிப்பதற்குப் பணம் கோரும் சம்பவங்களும் இருக்கின்றன.
சம்பவம் 03 ஜெர்மனியில் திருமணமான இலங்கை நபர் ஒருவர் பேஸ்புக்கினூடாக இலங்கைப் பெண்ணொருவரை காதலித்துள்ளார். இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் ஆழமாகவும் அந்தரங்க விடயங்களைப் பரிமாறுவதாகவும் அமைந்தது. அந்த நபர் தான் திருமண மானவர் என்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது காதலியிடம் கூறவில்லை. ஒருநாள் இலங்கைக்கு வந்த அவர் தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். சில வாரங் களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு அவர் ஜெர்மனி பயணமானார்.

இந்நிலையில் அவர் திருமணமானவர் என்பதும் இவ்வாறு சில்மிஷங்களைச் செய்வதை பொழுதுபோக்காக் கொண்டி ருக்கிறார் என்பதையும் நண்பர்களினூடாக அறிந்துகொண்டுள்ளார் அந்தப் பெண். அதன் பிறகு தொடர்புகொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் ஜெர்மனி நபர் இலங்கைக்கு வந்துள்ளார். மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு தன்னுடன் உணவு அருந்த வருமாறு அழைத்துள்ளார். உடனடியாக மறுப்புத் தெரிவித்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை தெளிவுபடுத்தி தூற்றியுள்ளார்.

அதற்கு ஜெர்மனி நபர் அளித்த பதில் இதுதான் “நீ என்னோடு அரட்டை அடித் தது, வீடியோ அழைப்பு மேற்கொண்டது, காதல் கதைகள், அந்தரங்க விடயங்களைப் பரிமாறியது என அத்தனை ஆதாரமும் என்னிடம் உண்டு. நீ வராவிட்டால் இவை அத்தனையையும் உனது நிஜப் பெயரோடு இணையத்தளத்தில் தரவேற்றுவேன்’. இவ்வாறு மிரட்டும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களை இணையக் குற்றவாளிகள் (Internet criminals) எனச் சொல்கிறோம்.

காதலிப்பதாக ஏமாற்றுதல், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்புகளை பதிவு செய்து தரவேற்றம் செய்வதாக மிரட்டுதல், தனிப்பட்டோரின் படங்களைக் கொண்டு போலி யான கணக்குகளை (பேஸ்புக் போன்ற சமூக வலையமைப் புகளில்) உருவாக்குதல், அந்தரங்கங்களை வெளியிடுவ தாக முன்னாள் கணவன்/ மனைவி/காதலன் /காதலியை மிரட்டுதல், உண்மையான உறவு கள் எனக்கூறி கடவுச்சொற்கள் உட்பட அனைத்தையும் பரிமாற் றிக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவையுடன் இவை தொடர்புடைய குற்றச் செயல்களும் இப்போது அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் 04 இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண் டவர். அவர் அதனை உபயோகப் படுத்திக்கொண்டி ருக்கையில் அழகான புகைப்படத்துடன் யுவதியொருவர் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு மடல் விடுத்துள்ளார்.

இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிழ்ச்சியில் அவரை இணைத்துக் கொ ண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக் கொண்டுள்ளார். சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற் காகக் காத்திருந்த வேளை அந்தச் சம்பவம் நடந்தது.

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் அந்தப் பெண். அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் அந்த இளைஞரின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச் சொல்லும் கேட்கப்பட்டுள்ளது. ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப் பக்கத்தில் பதிவு செய்தார் அந்த இளைஞர். அதன்பின்னர் யுவதியைக் காணவில்லை. அந்த இளைஞரின் பேஸ்புக் கணக்கி ற்குள்ளும் நுழைய முடியவில்லை.

இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இது தான் ” உங்கள் கடவுச் சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடி யும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் எம் மோடு பேசி பணம் செலுத்துங்கள்”

திட்டமிட்டு மின்னஞ்சல் வழியாக மேற்கொள் ளப்பட்ட கடவுச் சொல்லைத் திருடும் சூழ்ச்சி இது. இவ் வாறான குற்றச் செயல்களை Phishing என்று அழைப்போம். தனிநபர்களையோ அல்லது குழுக்களையோ புண்படுத்தும் நோக்கில் அல்லது அவர்களின் நற்பெ யருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக் கில் செயற்படுதலை மின்வெளித் தொந்தரவு (Cyberstalking) எனக் கூறுவோம்.

இந்தக் குற்றச் செயல்கள் பல்வேறு முறைகளில் கையாளப்படுகின்றன.

மின்வெளிப் பயங்கரவாதம் அல்லது இணையத்தளக் குற்றங்கள் பரந்து பட்டவை. அவற்றில் இலங்கையில் பதிவான முக்கியமான முறைப்பாடுகளில் சிலவற்றையே நாம் இங்கு தந்துள்ளோம். இதுதவிர இன்னும் பல்வேறு குற்றச்செயல்கள் காணப்படுகின்றன. பூலோகமயமாதலில் பிரதான பங்கினை வகிக்கும் இணையத்தளங்கள், சமூக வலை யமைப்புகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படவேண்டியதே இதனைத் தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் வழியாகும்.

இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

* தேவையற்ற தொடுப்புகள் (Link), கோப்புகளை சொடுக்கும்(Click) போதும் தரவிரக்கம் செய்யும்போதும் இருமுறை சிந்தித்தல்
 * பயனர் கணக்கு, கடவுச் சொற்களை தனிப்பட்ட ரீதியில் பேணுதல்
 * தேவையற்ற, தெரியாத நபர்கள் குறித்து கவனமாக இருத்தல் குறிப்பாக சமூக வலைப்பின்னல்களில் போலிப் பெயர்களில் விடுக்கப்படும் அழைப்புகளை தவிர்த்தல்
 * போலியான பெயர்களில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு (Antivirus) கோப்புகள் தொடர்பில் அறிந்துவைத் திருத்தல்
 * நேர்மையானோரை மாத்திரம் இனங்கண்டு தகவல்களை பரிமாறுதல்
 * இணைய வங்கியியலை (Online Banking) மேற்கொள்பவராயின் தனிப்பட்ட கணினியை அதற்கென உபயோகித்தல்
 * சமூக வலையமைப்புகளைப்போல வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போலி வலையமைப்புகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல்
 * இணையத்தளங்கள், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி அறிதல்
 * வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுகையில் அவதானம்
 ஆகிய வழிமுறைகளையும் பாதுகாப் பான நடவடிக்கைகளையும் மேற் கொள்வதன் மூலம் குற்றச்செயல்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.

நடைமுறை உலகில் இளம்பராயத்தினர் தெரிந்தோ தெரியாமலோஇணைய உலகிற் குள் வெகு சீக்கிரமாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனை வருமே இணையக் குற்றங்கள், விதிமுறை கள் குறித்து அறிந்துவைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை கணனி பயன்பாட் டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம்.

மின்னஞ்சல் முகவரி slcert@cert.gov.lk தொலைபேசி இலக்கம் 11 269 1692

எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கையில் என்ற கருப்பொருளை வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்ட இணையத்தள, சமூக வலையமைப்புகளை உபயோகப்படுத்துகையில் சிந்திக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!