animated gif how to

பள்ளிவாசல் கட்டமுன்னர் அல்லாஹ்வை தொழுங்கள் - அஷ்ஷேய்க் ஹனீபா

August 04, 2011 |

August 04, 2011.... AL-IHZAN Local News

தமிழர் பிரதேசங்களில்  இடம்பெற்ற உள்ளூராட்சி  தேர்தல் முடிவுகள் வன்முறை, அடாவடிகள் கொண்ட அரசியலை விட்டு மீளவும் ஒருமுறை சிந்தனைவாதி, அறிவாளி, ஒழுக்கமுள்ளவர்களையும் மக்கள் தேடத் தொடங்கியிருக்கின்றார்கள் என்ற செய்தியைத் தெரிவித்திருக்கிறது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷேய்க் எல்.எம்.ஹனீபா (மதனி) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா  இடம்பெற்றபோது அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹனீபா இவ்வாறு கூறினார்.  ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்ட வைபவத்தில் ஹனீபா தொடர்ந்தும் பேசியதாவது....

சுதந்திரத்துக்குப் பின்னர் வடக்கு,கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் சமாந்தரமாக நடைபோட்டு வந்திருப்பதை நாம் காணலாம். எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், ஜி.ஜி.பொன்னம்பலம், ராஜதுரை போன்றோர் தமிழர்களை அரசியலில் வழிநடத்தி வந்தார்கள். இதற்குச் சமாந்தரமாக, மாக்கான் மாக்கார், சேர் ராசிக் பரீத் முதலியார் சின்னலெப்பை, கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர், இப்றாகிம் சுப்ரீந்தர் போன்ற மூத்த அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கி வந்திருக்கின்றனர்.


இன்று நமக்கு அபிவிருத்திகள் தான் தேவையாக இருக்கின்றன. நமது பிரதேசங்களுக்கு வைத்தியசாலைகள், வீதிகள், பாலங்களை அமைத்துத் தருமாறு நமது கட்சித் தலைவர் ஹக்கீமிடம் நாம் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். ஆனால் சமூகத்தை விற்று, காட்டிக் கொடுத்து விட்டு அதற்குப் பரிகாரமாக அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியலை நாம் ஒரு போதும் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதானது நமது சமூகம் பற்றிய மோசமான எண்ணத்தை அடுத்தவரிடம் ஏற்படுத்திவிடும்.

பொத்துவிலில் பத்துப் பதினைந்து முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். இந்தக் கொலையைச் செய்தவர்கள் இன்னார்தான் என பொத்துவில் மக்கள் கூறுகின்றார்கள். ஆனால், இதற்கு மாற்றமாக கொலைகாரர்களைக் காப்பாற்றும் வகையில் நாடகமொன்றை ஆடுமாறு தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்டால், அவர் அதற்குச் சம்மதிப்பாரா?
அல்லது கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரைச்சோலையிலே அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் 500 வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால், அந்த வீடுகள் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வரவில்லை என்பதற்காக சிங்கள சகோதரர்களை ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டி விட்டு சவூதி அரேபியாவின் தேசியக் கொடியை எரிப்பீர்களா என்று ரவூப் ஹக்கீமிடம் கேட்டுப் பாருங்கள்.

இவற்றை அவர் செய்வாராக இருந்தால் ஆயிரமாயிரம் அபிவிருத்திகளை அவரால் இங்கு செய்து காட்ட முடியும். இப்படியெல்லாம் செய்வதென்பது மிக மோசமான காட்டிக் கொடுப்புகளாகும். ஆனால், இவை காட்டிக் கொடுப்புகளல்ல. காய் நகர்த்தல்கள் என சிலர் கூறிக் கொள்கின்றனர். இந்த நாட்டில் மிக நூதனமானதொரு அரசியல் செய்ய வேண்டிய காலகட்டம் இருக்கின்றது.

இன்று எமது அரசியலில் பள்ளிவாசல்களைக் கட்டுவதில் சிலர் முனைப்புக் காட்டி வருகின்றனர். பள்ளிகள் என்பவை இறைவனைத் தொழுவதற்குரிய இடங்களாகும். ஆனால், தொழாதவர்களும் தொழத் தேவையில்லை. திக்ரு செய்தால் மட்டும் போதும் என வாதம் செய்வோரும் அவர்களின் கூட்டத்தாரும் பள்ளிகளை எதற்காகக் கட்டுகின்றார்கள் எனத் தரியவில்லை. பள்ளிகளைக் கட்டுவதற்கு முன்னர் இறைவனைத் தொழத் தொடங்குங்கள் என இவர்களுக்கு நான் அன்பான வேண்டுகோளொன்றினை விடுக்கின்றேன். என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!