animated gif how to

மர்மமனிதனின் தாக்குதல்: பரபரப்பு வாக்குமூலம்

August 16, 2011 |

August 16, 2011.... AL-IHZAN Local News

கல்முனை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 கல்முனை அனீசா 19 , சகீல் 18 , நிந்தவூர் பஸ்னா 27  , திருக்கோவில் ரவீந்திரன் 48  ,பொத்துவில் ஆசிக்கா 22  ஆகியோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் திறந்திருந்த வீட்டின் கதவினூடாக நுழைந்த கறுப்பு நிற உருவம் கொண்டவனே தம்மைத் தாக்க முற்பட்டதாகவும் அவனிடமிருந்து விடுவித்து ஓட முற்படும்போது இடக்கை கிழிக்கப்பட்டதாகவும் கைவிரலில் அணிந்திருந்த கூரிய ஆயுதமே தன்னைக் கீறியிருக்கலாம் எனவும் கல்முனையைச் சேர்ந்த அனீசா தெரிவித்தார்.
பக்கத்திலுள்ள பெண்ணின் வீட்டினுள் புகுந்த மர்ம மனிதனைத் தாக்க முற்பட்டபோதே தமது கை வெட்டப்பட்டதாகவும் நீண்ட உருவம் கொண்ட அவன் உடலில் ஒருவித வழுப்புத்தன்மை கொண்ட பதார்த்தத்தைப் பூசியிருந்ததாகவும் தாக்கப்பட்ட கல்முனை சகீல் கூறினார்.


நிந்தவூரைச் சேர்ந்த பஸ்னா 8 மணியளவில் வீட்டு முற்றத்தில் வந்த மனிதனே தன்னைத் தாக்கியதாகவும் அவன் தனது மார்புப் பகுதியை நோக்கி ஆயுதமொன்றைக் கொண்டுவர முற்பட்டபோது தான் அவனது கழுத்துப் பகுதியை நெரித்ததாகவும் தெரிவித்தார். அவனுடன் ஏற்பட்ட போராட்டத்தில் நெஞ்சுப்பகுதியில் பலத்த கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தமது மேல்துண்டை எடுத்துக்கொண்டே மதிலின் மீது ஏறி அவன் பாய்ந்து சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


மலசலகூடத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது தன் முன்னால் வந்த மர்ம மனிதனுடனான போராட்டத்திலேயே தனது நெஞ்சுப்பகுதி பாதிக்கப்பட்டதாக திருக்கோவிலைச் சேர்ந்த ரவீந்திரன் தெரிவித்தார்.


இரவு 8.30 மணியளவில் தண்ணீர் எடுக்க முற்பட்ட தன்னை ஒருவன் தூக்க முற்பட்டதுடன், அவன் தனது வாயையும் நசுக்கியதாக பொத்துவிலைச் சேர்ந்த ஆசிக்கா தெரிவித்தார். இத்தாக்குதலில் தனது உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வெளிநாட்டிலுள்ள தனது கணவனாலேயே தான் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


நேற்று மாலை அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் குடும்ப பெண்ணொருவர் மர்மமனிதர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் 20 என்பவரே மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.


அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு சம்பவ தினம் மாலை 3 மணியளவில் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


அதேவேளை நேற்றும் நேற்று முன்தினமும் கல்முனை ,அக்கறைப்பற்று, கண்டி , கல்கின்னை , கடுகன்னாவை, நாவலப்பிட்டி ஆகிய இடங்களிலும் மர்ம மனிதர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளது இதில் கடுகன்னாவையில் மர்ம மனிதன் வந்த மோட்டார் சைக்கில் பொது மக்களால் எரிக்கப்பட்டுள்ளது, நாவலப்பிட்டியில் ஒருவர் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார், குருனாக்கல் பகுதியிலும் மர்ம சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!